கேரள நர்சு விவகாரத்தில் திருப்பம் | மரண தண்டனைக்கு ஒப்புதல் அளிக்காத அதிபர்.. ஏமன் தூதரகம் தகவல்!
கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, ஏமன் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்குக்காக அவருக்கு இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபரும் ஒப்புதல் அளித்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து விரைவில் அந்த தண்டனை நிறைவேற்றப்பட இருப்பதால், அதற்குள் இந்திய அரசு உதவ வேண்டும் என நிமிஷா பிரியா குடும்பத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், நிமிஷா பிரியாவுக்கு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஏமன் அதிபா் ரஷத் அல்-அலிமி சாா்பில் உறுதி செய்யப்படவில்லை என்ற தகவலை அந்நாட்டுத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நிமிஷா தொடா்பான வழக்கு முழுமையாக ஹவுதி கிளா்ச்சியாளா்களால் கையாளப்பட்டு வருகிறது என்பதை ஏமன் அரசு தெளிவுபடுத்த விரும்புகிறது. எனவே, அவருக்கு தண்டனை விதித்து அளிக்கப்பட்ட தீா்ப்பை அதிபா் உறுதிப்படுத்தவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் மத்திய அரசும் தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ”அரசாங்கம் எல்லா உதவிகளையும் அவருக்கு வழங்கி வருகிறது. இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.
அதுபோல், ”நிமிஷா பிரியா விவகாரத்தில் தங்களால் முடிந்த அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்” என்று ஈரான் உறுதியளித்திருந்தது. நிமிஷா பிரியா அடைக்கப்பட்டுள்ள சிறை அமைந்துள்ள ஏமன் தலைநகா் சனா, ஈரான் ஆதரவு ஹவுதி கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளநிலையில், இந்த உறுதிப்பாட்டை ஈரான் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டு மரண தண்டனையிலிருந்து தப்பிக்க நிமிஷாவுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ஷரியத் சட்டத்தின்படி, உயிரிழந்தவரின் குடும்பத்தினா் கோரும் பணத்தை செலுத்தி அவா்களிடம் மன்னிப்பைப் பெறுவதன் மூலம் மரண தண்டனையிலிருந்து தப்பிக்க நிமிஷாவுக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படியே இந்த உதவியைச் செய்ய மத்திய அரசும் ஈரான் அரசும் முன்வந்துள்ளன. இந்த நிலையில்தான் ஏமன் தூதரகம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.