”ஒரே முகவரியில் இவ்ளோ வாக்காளர்கள்”| தேர்தல் ஆணையம் மீது ’மோசடி’ புகார் அணுகுண்டு.. ராகுல் பரபரப்பு!
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அம்மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி,பீகாரில் உள்ள 7.9 கோடி வாக்காளர்களில் இறப்பு, இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரு இடங்களில் பதிவு என மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இது, நாடு முழுவதும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. மறுபுறம், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணையின்போது, பீகாரிலிருந்து 26 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்குக் குடி பெயர்ந்திருக்கலாம் எனத் தேர்தல் ஆணையத்தின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாளிதழ் செய்திகள் கூறுகின்றன.
மேலும், பீகாரிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் குடியிருக்கலாம் என்றும் பீகார் வாக்காளர் பட்டியலில் அவர்கள் நீக்கப்பட்டதால் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படலாம் என செய்திகள் வெளியாகத் தொடங்கின. இதையொட்டி, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் தேர்தல் ஆணையம், மத்திய அரசுடன் இணைந்துகொண்டு வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம்
இதுதொடர்பாக சமீபத்தில் பேசிய அவர், ”வாக்குகள் திருடப்படுவதாக நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். வாக்குளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான வெளிப்படையான சான்றுகள் எங்களிடம் இருக்கின்றன. இதனை நான் சாதாரணமாகச் சொல்லவில்லை. 100% ஆதாரத்துடன்தான் நான் இதைச் சொல்கிறேன். நாங்கள் அந்த ஆதாரத்தை வெளியிட்டவுடன் தேர்தல் ஆணையம், பாஜகவுக்கு ஆதரவாக வாக்குகளைத் திருடும் வேலையைச் செய்வது இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியவரும். மத்தியப் பிரதேச தேர்தல், மக்களவைத் தேர்தல்களில் எங்களுக்கு சந்தேகம் இருந்தது, மகாராஷ்டிர தேர்தல்களின்போதும் எங்களது சந்தேகம் மேலும் அதிகரித்தது. நாங்கள் 6 மாதங்கள் தனிப்பட்ட முறையில் விசாரணையை நடத்தினோம். அதில் எங்களுக்கு ஓர் அணுகுண்டு கிடைத்தது. இந்த அணுகுண்டு வெடிக்கும்போது தேர்தல் ஆணையம் காணாமல் போய்விடும். தேர்தல் ஆணையத்தில் உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலையில் உள்ளவர்கள் வரை, யார் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டாலும் அவர்களை நாங்கள் விடமாட்டோம். இது தேசத்துரோகம்" எனத் தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், “தினமும் முன்வைக்கப்படும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் புறக்கணிக்கிறது. மேலும், ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும், நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் பணிபுரியும் அனைத்து தேர்தல் அதிகாரிகளும் இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டாம்” என அது அறிவுறுத்தியது.
ஆதாரங்களை அடுக்கிய ராகுல் காந்தி
இந்த நிலையில், வாக்கு திருட்டு தொடர்பாக ஆதாரங்களுடன் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் அடங்கிய, மகாதேவபுரா சட்டப்பேரவைத் தொகுதியில் மிகப்பெரிய வாக்கு திருட்டு நடத்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். "கர்நாடகாவில் 16 (மக்களவை) இடங்களை நாங்கள் வெல்வோம் என்று எங்கள் உள் கருத்துக் கணிப்பு தெரிவித்தது. ஆனால், நாங்கள் ஒன்பது இடங்களையே வென்றோம். பின்னர் நாங்கள் எதிர்பாராத தோல்வியடைந்த ஏழு தொகுதிகளில் கவனம் செலுத்தினோம். அதில் ஒரு மக்களவையைத் தேர்ந்தெடுத்தோம். எனவே நாங்கள் மகாதேவபுராவில் கவனம் செலுத்தினோம். கர்நாடகா மாநிலம் மகாதேவபுரா தொகுதியில் மொத்தம் 6.5 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில் அதில் சுமார் 1 லட்சம் போலி வாக்காளர்கள் இருக்கின்றனர்” என ராகுல் காந்தி அதிர்ச்சிகர தகவலை அளித்துள்ளார்.
மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் மொத்தம் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன என்றும் இதில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே அதிக வாக்குளை பெற்றிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில், மகாதேவபுரா தொகுதியில் மட்டும் காங்கிரஸ் 1,14,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. மகாதேவபுரா தொகுதியில் மட்டும் சுமார் 1,00,250 வாக்கு திருட்டு நடந்திருப்பதாக அவர் கூறினார். அதாவது, 11 ஆயிரத்து 965 போலி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும், போலி மற்றும் முறையான முகவரி இல்லாமல் 40,009 வாக்காளர்கள் இருந்துள்ளனர். மேலும் ஒரு முகவரியில் பல பேர் என அதில் மட்டும் 10 ஆயிரத்து 452 வாக்காளர்கள் இருந்தனர். முறையான புகைப்படம் இல்லாமல் 4 ஆயிரத்து 132 வாக்காளர்கள் இருந்தனர். Form 6 படிவத்தை சுமார் 33 ஆயிரத்து 692 வாக்காளர்கள் தவறாக பயன்படுத்தியுள்ளனர் என ராகுல் காந்தி புள்ளிவிவரங்களை அடுக்கினார்.
தேர்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
Form 6 என்பது புதிய வாக்காளர் அல்லது முதல்முறை வாக்காளர்களுக்கான பெயர் சேர்க்கும் படிவமாகும், இதனை 33,692 பேர் தவறாகப் பயன்படுத்தி உள்ளனர். திட்டமிட்ட ரீதியில் தேர்தல் முடிவுகளை சீர்குலைக்கும் முயற்சி இது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
”இது ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வு மட்டுமே. இந்த ஆய்வை நாங்கள் செய்து முடிப்பதற்கு எங்களுக்கு 6 மாதங்கள் ஆகி உள்ளது. தேர்தல் ஆணையம் மின்னணு தரவுகளை வழங்குமானால், 30 நிமிடங்களில் இந்த ஆய்வை முடித்துவிட முடியும். தேர்தல் முடிவுகள் திருடப்படுகின்றன என்ற எனது நீண்ட கால சந்தேகத்தை மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தின. வாக்காளர் பட்டியல் குறித்த தரவுகளை இயந்திரத்தின் மூலம் எளிதில் கண்டறிய முடியும். ஆனால், அத்தகைய தரவுகளை தேர்தல் ஆணையம் தருவதில்லை. இது, தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை திருடுகிறது என்பதை எங்களுக்கு உணர்த்தியது. தேர்தல் செயல்முறையை சீர்குலைக்க ஜனநாயக நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
மேலும் அவர், "அவர்கள் (தேர்தல் ஆணையம்) இனி ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பணியில் இல்லை. அதை அகற்ற உதவுகிறார்கள். நடுவர் மற்றொரு அணியில் இருக்கிறார். நாம் மிகவும் நேசிக்கும் ஜனநாயகம் இல்லை என்பதால் நீதித்துறை இதில் ஈடுபட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பாஜக எதிர்ப்பு
அதேநேரத்தில், ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து கர்நாடகாவின் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம், மாநிலத்தின் வாக்காளர் பட்டியல் குறித்து விசாரணை நடத்தக் கோரி ஒரு அறிவிப்பை சமர்ப்பிக்குமாறு காங்கிரஸ் தலைவரிடம் கேட்டுக் கொண்டது. "ராகுல் காந்தி இன்று இந்த உறுதிமொழியில் கையெழுத்திடுவதில் உறுதியாக இருக்க வேண்டும். மேலும் அதை அவரது கைப்பிடியிலும் ட்வீட் செய்ய வேண்டும். இல்லையென்றால், அவர் தனது ஜோடிக்கப்பட்ட ஆதாரத்தை திரும்பப் பெற வேண்டும்" என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.
மறுபுறம் ராகுலின் இந்தக் குற்றச்சாட்டை பாஜக கடுமையாக சாடியுள்ளது. பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், "ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதும், அவதூறு வழக்குகளை எதிர்கொள்வதும், பின்னர் மன்னிப்பு கேட்பதும் ராகுல் காந்தியின் பழக்கமாகிவிட்டது" என அவர் ANI செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
அதேபோ மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், “ஜனநாயகத்தில், மக்களின் முடிவு உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, மேலும் தேர்தல் ஆணையத்தைத் தாக்குவதன் மூலம், ராகுல் காந்தி மக்களின் புத்திசாலித்தனமான முடிவை அவமதிக்கிறார். பீகாரில் SIR குறித்து புகார் அளிக்க தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்சியையும் அழைத்தபோது ராகுல் காந்தி எங்கே இருந்தார், அப்போது காங்கிரஸோ அல்லது இந்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் எந்தக் கட்சியோ தேர்தல் ஆணையத்திடம் செல்லவில்லை" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.