பெண் வாக்காளர்களை ஈர்க்க பாஜக முன்னெடுக்கும் வியூகம்.. 5 மாநில தேர்தலின் முக்கிய காரணி..
மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் பெண்களின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. 'மஜ்ஹி லட்கி பஹின் யோஜனா' மற்றும் 'முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா' போன்ற திட்டங்கள் பெண்களை கவர்ந்துள்ளன. இதனால், பாஜக கூட்டணி மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி
பாஜக கூட்டணியே நம்பமுடியாத, எதிர்பாராத வெற்றியை பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெற்றுள்ளது. அது, 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னால், தேர்தலுக்கு முன்பாக, 1.3 கோடி பெண்களுக்கு ’முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா’என்கிற திட்டம் அமல்படுத்தப்பட்டு, 10,000 ரூபாய் வழங்கப்பட்டதுதான் என அரசியல் ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். அதாவது, பாஜக கூட்டணி வெற்றிபெற மற்ற காரணங்கள் நிறைய இருப்பினும், கடைசி நேரத்தில் 10,000 ரூபாய் கொடுத்தது, அதாவது சட்டப்படிதான் என்றாலும் அதுவே பிரதான காரணமாக அமைந்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
பீகாரில் பெண்களின் வாக்குச் சதவிகிதம் அதிகரிப்பு
பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட திட்டமே இந்த, `முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா'. இந்த திட்டம் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் முதல் தவணையாக ரூ.10,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அது, அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட வேலையில் திருப்திகரமான முன்னேற்றத்தைக் காட்டும் பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை கூடுதல் நிதியைப் பெறலாம். அந்த வகையில், செப்டம்பர் 2025 முதல், இதுவரை 1.3 கோடி பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் முதல் தவணையைப் பெற்றுள்ளனர். இதற்கிடையே, தேர்தலையொட்டி, இந்த திட்டம் விரைவாகவே பெண்களைக் கவர்ந்த நிலையில், அவர்களுடைய வாக்கு எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்தது. குறிப்பாக, பீகார் தேர்தல் வரலாற்றிலேயே இந்த ஆண்டுதான் 71.6% பெண்கள் வாக்களித்திருக்கின்றனர். இது ஆண் வாக்காளர்களின் 62.8% வாக்குப்பதிவைவிட அதிகம். மேலும், இந்தியாவின் எந்த சட்டமன்றத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு இத்திட்டமும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இத்திட்டத்தைத் தேர்தலை மையமாக வைத்தே தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்ததாகவும் செயல்படுத்தியதாகவும் எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.
மகாராஷ்டிரா தேர்தலிலும் பெண்களின் வாக்கு அதிகரிப்பு
இன்னொரு புறம், பீகாரைப் போன்றே கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக பெரிய அளவில் வெற்றிபெற்றது. 288 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய மகாராஷ்டிராவில், 230 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனித்து 132 இடங்களைப் பெற்றது. தவிர, அக்கூட்டணியில் உள்ள சிவசேனா 57 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களையும் பெற்றிருந்தது. அதேநேரத்தில், பெண்கள் வாக்குச் சதவிகிதம் 2019 மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது , 2024 தேர்தலில் 6% க்கும் அதிகமாக வாக்களித்ததாக தரவுகள் காட்டுகின்றன. 2019ஆம் ஆண்டில், 59.26% பெண்கள் வாக்களித்திருந்தனர். இது, 2024 தேர்தலில் 65.22% பெண்களாக அதிகரித்துள்ளது. இந்த வாக்குச் சதவிகிதத்திற்கும் பின்னாலும் ஒரு காரணம் உள்ளது.
பீகாரில் எப்படி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு ‘முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா’என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டதோ, அதேபோன்று மராட்டியத்திலும் ’லட்கி பஹின் யோஜனா’என்ற திட்டம் தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் ரூ1,500 வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 2.21 கோடி பயனாளர்களாக இருக்கின்றனர். நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கு முன்பாகவே இத்திட்டம் ஜூன் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஆகஸ்ட்டில் தொடங்கிவைக்கப்பட்டது.
மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லியிலும் அதிகரித்த வாக்கு சதவிகிதம்
அதேபோன்று, மத்தியப் பிரதேசத்திலும் இத்திட்டம் லாட்லி பெஹ்னா என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாஜக தலைமையிலான அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தின்கீழ், தகுதியுள்ள பெண்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 பெறுகிறார்கள். இது, மத்தியப் பிரதேச அரசால் ஜனவரி 28, 2023 அன்று தொடங்கப்பட்டது. அந்த வருட இறுதியில் அங்கு (நவ.17) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாஜக 166 இடங்களை வென்றிருந்தது. மொத்த வாக்குச் சதவிகிதத்தில், ஆண்களைவிட 2 சதவிகிதம் (78.2%) பெண்களின் வாக்கு (76.03%) குறைந்திருந்தாலும், 34 சட்டமன்றத் தொகுதிகளில், பெண்களின் வாக்குப்பதிவு ஆண்களைவிட அதிகமாக இருந்துள்ளது. இதற்குக் காரணம், பெண்களை மையமாகக் கொண்ட நலத்திட்டத்தின் மூலம் அவர்கள் வெற்றிபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பாஜகவினர் 49%- வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
இதேபோன்று, டெல்லியிலும் மகளிர் சம்ரிதி திட்டத்தின்கீழ் ரூ.2,500 வழங்கப்படும் என சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முக்கிய வாக்குறுதியாக இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் (பிப்ரவரி 5) நடைபெற்ற இத்தேர்தலில் ஆம் ஆத்மியை வீழ்த்தி, பாஜக ஆட்சியைப் பிடித்தது. பாஜக 48 இடங்களை வென்றது. இந்த தேர்தலிலும் பெண்கள் ஆண்களை விட அதிகமாக வாக்களித்தனர், இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். பெண் வாக்குப்பதிவு 60.92% ஆகவும், ஆண் வாக்குப்பதிவு 60.21% ஆகவும் இருந்தது. தேர்தல் ஆணையத் தரவுகளின்படி, 70 தொகுதிகளில் 42 தொகுதிகளில், ஆண்களைவிட பெண்கள் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர். பெண் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பாஜகவுக்கு ஆதரவாக மாற்றியதை இது குறிக்கிறது. அவர்களுடைய இந்த ஆதரவுக்குப் பின்னாலும், பெண்களின் நலன் சார்ந்த திட்டங்களே உள்ளன. ஆட்சிக்குப் பின் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஒடிசாவிலும் பெண் வாக்குச் சதவிகிதம் அதிகரிப்பு
இதற்கு முன்பாக, ஒடிசாவிலும் இதேபோன்றதொரு அறிவிப்புதான் பாஜக பெண் வாக்காளர்களைக் கவர்ந்தது. ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியின்போது 21 முதல் 60 வயதுக்குட்பட்ட ஒரு கோடி பெண்களுக்கு ஐந்து ஆண்டுகளில் ரூ.50,000 வழங்கும் சுபத்ரா எனும் திட்டம் செயல்படுத்தப்படும் என பாஜக உறுதியளித்தது. இத்திட்டம் மூலம், தலா ரூ.5000 வீதம் இரண்டு தவணைகளில் ஆண்டுக்கு மொத்தம் ரூ.10,000 வழங்கப்படும். இதனால், தகுதியுள்ள ஒரு பெண் பயனாளிக்கு ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.50,000 கிடைக்கும் எனக் கூறப்பட்டது. பாஜகவின் அந்த அறிவிப்பு, ஒடிசாவின் கால் நூற்றாண்டுக் கால நாயகரான நவீன் பட்நாயக்கின் ஆட்சியையே முடிவுக்குக் கொண்டுவருமளவுக்கு உதவியது. 2024 மே 13ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், மொத்தமுள்ள 147இல் பாஜக 78 இடங்களைக் கைப்பற்றி முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. மேலும், தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, ஆண்களைவிட பெண்களின் வாக்கே அதிகம். பெண்கள் 75.55 சதவிகிதமும், ஆண்கள் 73.37 சதவிகிதமும் வாக்களித்துள்ளனர். அதேபோல் 2019இல் பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர். ஆண்கள் 72.07 சதவிகிதம் என்கிற நிலையில், பெண்களின் சதவிகிதமோ 74.18% ஆக இருந்துள்ளது. ஆக, இதன் பின்னணியிலும் பெண்களை ஈர்க்கும் திட்டங்களே இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கேயும் ஆட்சி அமைந்தபின் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆக, ஒவ்வொரு தேர்தலிலும் பெண் வாக்காளர்களைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதற்கு சமீபத்திய தேர்தல்களே உதாரணமாக இருக்கிறது. ஆகையால், கட்சிகள் அவர்களின் கவலைகளை நிவர்த்திசெய்யும் கொள்கைகளில் நிச்சயம் ஈடுபட்டால், எல்லாத் தேர்தல்களிலும் அவர்களின் வாக்குகளைப் பெறலாம் என்பது ஆரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

