பீகார் | ரோகிணியின் பதிவு.. வெளியேறிய 4 சகோதரிகள்.. விரிசலைச் சந்திக்கும் லாலு குடும்பம்!
தனது அக்கா மீதான குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி தருவதாகவும் அவை தன்னை நிலைகுலைய வைத்துவிட்டதாகவும் தேஜ் பிரதாப் யாதவ் கூறியுள்ளார்.
243 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. ஆனால், மகாகத்பந்தன் கூட்டணி 31 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 25 இடங்களைப் பெற்று படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தோல்வியை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா, தனது குடும்பத்தின் உறவை துண்டித்துக் கொள்வதாகவும் அரசியலிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். இது, லாலு குடும்பத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுதொடர்பாக மறுநாள் அடுத்தடுத்த பதிவுகளையும் பகிர்ந்திருந்தார். அதில், அழுக்கான சிறுநீரகத்தை தந்துவிட்டு அதற்கு பதில் அரசியல் வாய்ப்புகளையும் கோடிக்கணக்கில் பணத்தையும்தான் பெற்றதாக சிலர் கூறியதாக ரோஹிணி ஆச்சார்யா குமுறியிருந்தார்.
மேலும், தன்னை ஒருவர் செருப்பால் அடிக்க வந்ததாகவும், மோசமான வார்த்தைகளுக்குதான் ஆளானதாகவும் இன்னொரு பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு குடும்பத்திலும் தங்கள் பெண்ணை இப்படி அவமதிக்கமாட்டார்கள் என்றும் சுய மரியாதையை காப்பாற்றிக்கொள்ளவே வெளியேறியதாகவும் ரோஹிணி குற்றஞ்சாட்டியிருந்தார்.
தனது இந்த முடிவுக்கு சகோதரர் தேஜஸ்வி யாதவின் உதவியாளர்களான சஞ்சய் யாதவ் மற்றும் ரமீஸ் ஆகியோர்தான் காரணம் என்று ரோகிணி குற்றம்சாட்டி இருப்பது ஆர்ஜேடி கட்சிக்கும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, லாலுவின் மற்ற நான்கு மகள்களும் தங்கள் குழந்தைகளுடன் பாட்னாவில் உள்ள குடும்ப இல்லத்தைவிட்டு வெளியேறி டெல்லிக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில், தனது அக்கா மீதான குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி தருவதாகவும் அவை தன்னை நிலைகுலைய வைத்துவிட்டதாகவும் தேஜ் பிரதாப் யாதவ் கூறியுள்ளார். இதற்காக தேஜஸ்வியை பிஹார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
தவறு செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர் என துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய்குமார் சின்ஹா கூறியுள்ளார். ஆனால் இது குடும்ப விவகாரம் என்றும் இதுகுறித்து பேச எதுவும் இல்லை என்றும் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ் - ராப்ரி தேவி தம்பதியருக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். 7 மகள்கள்; (மிசா பாரதி, ரோகிணி ஆச்சார்யா, சந்தா சிங், ராகினி, ஹேமா, அனுஷ்கா ராவ், ராஜலட்சுமி) 2 மகன்கள் (தேஜ் பிரதாப், தேஜஸ்வி). அதில் நான்கு பேர் அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, லாலுவின் மற்றொரு மகனான தேஜ் பிரதாப் யாதவ், கடந்த மே மாதம் 25ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது, அவர் பீகார் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிட்ட நிலையில், அவரும் தோல்வியைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், தோல்விக்குப் பின்னர் தலைமைத்துவம் மற்றும் ஆலோசகர்களைத் தேர்ந்தெடுப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள தேஜஸ்வி யாதவ், பெரும்பாலும் பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகியே இருக்கிறார்.

