பீகார் தேர்தல் | உலக வங்கியின் ரூ.14,000 கோடி நிதி.. ஜன் சுராஜ் வைத்த குற்றச்சாட்டு!
“மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000 தொகை, உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டது” என ஜன் சுராஜ் குற்றஞ்சாட்டியுள்ளது.
பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. பாஜக கூட்டணியே நம்பமுடியாத, எதிர்பாராத இந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னால், தேர்தலுக்கு முன்பாக, 1.3 கோடி பெண்களுக்கு ’முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா’என்கிற திட்டம் அமல்படுத்தப்பட்டு, 10,000 ரூபாய் வழங்கப்பட்டதுதான் என அரசியல் ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். அதாவது, பாஜக கூட்டணி வெற்றிபெற மற்ற காரணங்கள் நிறைய இருப்பினும், கடைசி நேரத்தில் 10,000 ரூபாய் கொடுத்தது, அதாவது சட்டப்படிதான் என்றாலும் அதுவே பிரதான காரணமாக அமைந்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட திட்டமே இந்த, `முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா'. இந்த திட்டம் கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் முதல் தவணையாக ரூ.10,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அது, அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட வேலையில் திருப்திகரமான முன்னேற்றத்தைக் காட்டும் பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வரை கூடுதல் நிதியைப் பெறலாம்.
அந்த வகையில், செப்டம்பர் 2025 முதல், இதுவரை 1.3 கோடி பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் முதல் தவணையைப் பெற்றுள்ளனர். இதற்கிடையே, தேர்தலையொட்டி, இந்த திட்டம் விரைவாகவே பெண்களைக் கவர்ந்த நிலையில், அவர்களுடைய வாக்கு எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்தது. குறிப்பாக, பீகார் தேர்தல் வரலாற்றிலேயே இந்த ஆண்டுதான் 71.6% பெண்கள் வாக்களித்திருக்கின்றனர். அதற்கு இத்திட்டமும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இத்திட்டத்தைத் தேர்தலை மையமாக வைத்தே தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்ததாகவும் செயல்படுத்தியதாகவும் எதிர்க்கட்சிகள் சாடுகின்றன. குறிப்பாக, தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு வரை, இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டதாகக் எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. அதிலும், முதற்கட்டத் தேர்தல் முடிந்து களம் அமைதியாக இருந்த நிலையில், எஞ்சியுள்ள மாவட்டங்களில் 2வது கட்டத் தேர்தலின்போது இத்தொகை வரவு வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், “வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், ரூ.10,000 விநியோகிக்கப்படும்போது அது ஏன் நிறுத்தப்படவில்லை? ஏன், அதைத் தடுக்கவில்லை” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேபோல் தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி) தலைவர் சரத் பவார், "பீகார் வாக்குப்பதிவின்போது, சிலரிடம் நான் பேசினேன்.. பெண் வாக்காளர்கள் இந்த தேர்தலை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டதாக அவர்கள் சொன்னார்கள். பெண்கள் இந்த தேர்தலில் பெருமளவில் பங்கேற்றனர். அதாவது, அவர்களின் கணக்குகளில் ரூ.10,000 டெபாசிட் செய்யும் திட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்தார்.
அதேபோன்று, “இது அதிகாரப்பூர்வமாகவே அரசு கொடுத்த லஞ்சம்” என்று ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோரும் விமர்சித்து இருந்தார். தொடர்ந்து பரப்புரையின்போது பேசிய அவர், “பீகார் போன்ற ஏழை மாநிலத்தில், தேர்தல்கள் நடந்துகொண்டிருக்கும் நேரத்தில், சுமார் 1.5 கோடி பெண்களுக்கு ரூ.10,000 விநியோகிக்கிறார்கள். பணம் வங்கிகள் வழியாக அனுப்பப்படுவதில்லை; அவர்கள் மக்களை அழைத்து பணத்தை விநியோகிக்கிறார்கள். பெண்கள் பணத்தை எடுத்துக்கொள்கிறார்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அதற்காக சமரசம் செய்யும் அளவுக்கு அவர்கள் முட்டாள்கள் அல்ல" என்று கூறியிருந்தார்.
மறுபுறம், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, இத்திட்டம் தொடர்பாக பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடுக்கப்பட்டது. ஆனால், இந்த திட்டத்திற்கு பீகார் அமைச்சரவை கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதியே ஒப்புதல் அளித்ததாகவும், அதன்பிறகு செப்டம்பர் 26ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டு பின்னர் படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எனினும், இந்த விவகாரம் பீகாரில் இன்றுவரை ஒழியவில்லை. நீறுபூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருக்கிறது.
இதுதொடர்பாக குற்றஞ்சாட்டியுள்ள ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங், “இந்தத் தேர்தலின் முடிவு திறம்பட வாங்கப்பட்டுள்ளது. ஜூன் 21 முதல் வாக்குப்பதிவு நாள் வரை, இந்த ஆணையைப் பெற கிட்டத்தட்ட ரூ.40,000 கோடி செலவிடப்பட்டது. பொதுப் பணத்தைப் பயன்படுத்தி, அவர்கள் அடிப்படையில் மக்களின் வாக்குகளை வாங்கினார்கள். உலக வங்கியிலிருந்து பெறப்பட்ட நிதி, இந்த பணப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது என்பதையும் நான் அறிந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதே கட்சியைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா, “மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10,000 தொகை, உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டது. தேர்தலுக்கான ஒழுக்க நெறிகளுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள 1.25 கோடி பெண்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இது உண்மையாக இருந்தால், அது எவ்வளவு தூரம் நெறிமுறை சார்ந்தது என்ற கேள்வி எழுகிறது. சட்டப்பூர்வமாக, நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்பது சாத்தியம். அரசாங்கம் நிதியைத் திருப்பிவிட்டு பின்னர் விளக்கங்களை வழங்கலாம்” எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.

