பிகார் தேர்தல் | 7 முக்கியத் தொகுதிகள்.. போட்டியிடும் முக்கிய பிரபலங்கள்!
முதற்கட்டமாக நடைபெற இருக்கும் பீகார் தேர்தலில் தேஜஸ்வி யாதவ் சாம்ராட் சவுத்ரி, தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்ட பல முக்கிய முகங்கள் போட்டியிடுகின்றனர்.
பிகாரில் சட்டமன்றத் தேர்தல் இருகட்டங்களாக நடைபெற உள்ளது. இதன் முதற்கட்டம் நாளை மறுநாள் (நவம்பர் 6) நடைபெற இருக்கிறது. இதில், 121 தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக நடைபெற இருக்கும் பீகார் தேர்தலில் ராஜ்டிரிய ஜனதா தளத் தலைரும் மகாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் தற்போதைய துணை முதல்வரும் பாஜக தலைவருமான சாம்ராட் சவுத்ரி, லாலு யாதவின் மூத்த மகனும் பீகார் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவ் உள்ளிட்ட பல முக்கிய முகங்கள் போட்டியிடுகின்றனர். அந்த வகையில், முதல் சுற்றில் வாக்குப்பதிவு நடைபெறும் 7 முக்கியமான இடங்களைப் பார்ப்போம்..
ரகோபூர்
மகாகட்பந்தனின் முதல்வர் வேட்பாளரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார், அங்கு அவர் மீண்டும் பாஜகவின் சதீஷ் குமாரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சியின் சஞ்சல் சிங்கும், தேஜ் பிரதாப் யாதவ் தலைமையிலான ஜே.ஜே.டி வேட்பாளர் பிரேம் குமாரும் களத்தில் உள்ளனர். கடந்த இரண்டு தேர்தல்களிலும் தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றதால், ரகோபூர் தொகுதி அவருக்கு நம்பிக்கையின் இடமாகக் கருதப்படுகிறது. 2015ஆம் ஆண்டில், அவர் பாஜகவின் சதீஷ் குமார் யாதவை 20,000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 2020ஆம் ஆண்டில், சதீஷ் குமாருக்கு எதிராக மீண்டும் 30,000 வாக்குகளுக்கு மேல் வித்தியாசத்தில் தனது வித்தியாசத்தை நீட்டித்தார். இப்போதும் அங்கு பல முனைப் போட்டி நிலவினாலும், தேஜஸ்விக்கும் சதீஷ்குமாருக்கும் இடையேதான் அதிக போட்டி நிலவுகிறது.
தாராபூர்
தாராபூரில், பாஜக தலைவரும் தற்போதைய துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி, ஆர்ஜேடியின் அருண் ஷாவை எதிர்த்துப் போட்டியிடுகிறார். தேஜ் பிரதாப் தலைமையிலான ஜேஜேடியின் சுக்தேவ் யாதவ் மற்றும் ஜேஎஸ்பியின் டாக்டர் சந்தோஷ் சிங் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதி பாரம்பரியமாக முதல்வர் நிதிஷ்குமாரின் ஜேடியுவின் கோட்டையாக இருந்து வருகிறது. 2015, 2020 மற்றும் 2021 இடைத்தேர்தலில் வெற்றிகளைப் பெற்றுள்ளது. 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில், ஜேடியுவின் மேவலால் சவுத்ரி இந்த இடத்தை வென்றார், அதே நேரத்தில் 2021இல், ஜேடியு ராஜீவ் குமார் சிங்கை களமிறக்கியது. இந்த முறை, கூட்டணியில் பாஜக முன்னிலை வகித்து, ஜேடியுவுக்குப் பதிலாக சாம்ராட் சவுத்ரியை களமிறக்கியுள்ளது.
மஹுவா
இந்தத் தொகுதியில், லாலு யாதவின் மூத்த மகனும், தேஜஸ்வி யாதவின் சகோதரருமான தேஜ் பிரதாப் யாதவ் (ஜேஜேடி), ஆர்ஜேடியின் முகேஷ் ரௌஷன் மற்றும் எல்ஜேபி (ராம் விலாஸ்) சஞ்சய் குமார் சிங் ஆகியோர் இடையே மூன்று முனைப் போட்டி நிலவுகிறது. ஜன் சுராஜ் கட்சியின் இந்திரஜீத் பிரதானும் களத்தில் உள்ளார். கடந்த இரண்டு தேர்தல்களிலும் இந்தத் தொகுதி தேஜஸ்வியின் ஆர்ஜேடி வசம் இருந்தது. 2015ஆம் ஆண்டில், தேஜ் பிரதாப் யாதவ் ஆர்ஜேடி வேட்பாளராக வெற்றி பெற்றார். 2020ஆம் ஆண்டில், முகேஷ் ரௌஷன் ஆர்ஜேடி வேட்பாளராக அதைத் தக்கவைத்துக் கொண்டு, கிட்டத்தட்ட 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மஹுவா தொகுதியைக் குறிவைத்திருக்கும், தேஜ் பிரதாப் யாதவ், ஆர்ஜேடியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனிக்கட்சி தொடங்கி இந்த தேர்தலில் குதித்துள்ளார்.
அலிநகர்
பாஜகவில் சமீபத்தில் இணைந்த நாட்டுப்புறப் பாடகியும் அரசியல்வாதியுமான மைதிலி தாக்கூரை, ஆர்ஜேடியின் பினோத் மிஸ்ராவுக்கு எதிராக நிறுத்தியுள்ளது. இதனால், முதல் அலிநகர் தொகுதி பேசுபொருளாகி உள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் NDA (JDU அல்லது BJP) கூட்டணி இந்த இடத்தை வெல்லாததால், மைதிலி தாக்கூருக்கு இது ஒரு கடினமான சவாலாகப் பார்க்கப்படுகிறது. 2015இல், RJDஇன் அப்துல் பாரி சித்திக் இங்கு வெற்றி பெற்றார், அதே நேரத்தில் 2020இல், VIPஇன் மிஷ்ரி லால் யாதவ் RJDஇன் பினோத் மிஸ்ராவை தோற்கடித்தார். ஜே.எஸ்.பி.யின் பிப்லாவ் சவுத்ரியும் போட்டியிடுகிறார். இங்கும், கடுமையான போட்டி நிலவுகிறது.
பாட்னா சாஹிப்
பாட்னா சாஹிப் ஒரு நகர்ப்புற தொகுதி மற்றும் பாஜகவின் கோட்டையாகும். 2008ஆம் ஆண்டு எல்லை மறுசீரமைப்பிற்குப் பிறகு உருவாக்கப்பட்டதிலிருந்து நந்த் கிஷோர் யாதவ் தொடர்ந்து அந்தத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். பாட்னா சாஹிப் சட்டமன்றத் தொகுதியில் பாஜக தனது நீண்டகால எம்எல்ஏவாக இருந்த நந்த் கிஷோர் யாதவ் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக 45 வயதான வழக்கறிஞர் ரத்னேஷ் குஷ்வாஹா களமிறக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து, ஐஐடி-ஐஐஎம் பட்டதாரி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் சஷாந்த் சேகர் போட்டியிடுகிறார்.
லக்கிசராய்
இந்த லக்கிசராய் தொகுதியும் பாஜகவின் கோட்டையாகும், தற்போதைய துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா 2015 முதல் தொடர்ந்து இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று வருகிறார். 2025ஆம் ஆண்டில், பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜேஎஸ்பியின் சூரஜ் குமாரை எதிர்கொள்ள பாஜக சின்ஹாவைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்தத் தொகுதி பீகார் கிராமப்புறத்தில் அமைந்துள்ளது, இது சிந்தூர் உற்பத்தி, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தொழிற்சாலைகள், அரிசி ஆலைகள் மற்றும் இரும்பு கம்பி மற்றும் மணல் தொழில்களுக்கு பெயர் பெற்றது.
அர்ரா
அர்ராவில், பாஜக தனது 2020 வெற்றி வேட்பாளர் அம்ரேந்திர பிரதாப் சிங்கிற்கு பதிலாக சஞ்சய் சிங் (டைகர் என்றும் அழைக்கப்படுகிறார்) போட்டியிடுகிறார். இவர் ஜேஎஸ்பியின் விஜய் குமார் குப்தாவை எதிர்த்து போட்டியிடுகிறார். சிபிஐ (எம்எல்) இன் குயாமுதீன் அன்சாரியும் போட்டியிடுகிறார். கடந்த தேர்தல்களில் பாஜக மற்றும் ஆர்ஜேடி இடையே அதிகார மாற்றத்தை அர்ரா கண்டுள்ளது, மேலும் எந்த ஒரு கட்சிக்கும் இந்தத் தொகுதியைக் கோட்டையாக கருத முடியாது.

