பீகார் தேர்தல் | தொகுதிப் பங்கீடு மோதல்.. விலகிய ஹேமந்த் சோரன் கட்சி!
ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுடன் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு மோதல்கள் நிலவியதைத் தொடர்ந்து, பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம் தெரிவித்துள்ளது.
243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்திற்கு நவம்பா் 6, 11 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், அங்கு பலமுனைப் போட்டி நிலவுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, முதல்கட்டமாக 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 243 தொகுதிகளைக் கொண்ட சட்டமன்றத்தில் நவம்பர் 6ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் i-n-d-i-a கூட்டணியில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் இடம்பிடித்துள்ளது. ஆனால், ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளின்போது ஜேஎம்எம்மை ஓரங்கட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஜார்க்கண்ட் எல்லைப் பகுதியை ஒட்டிய சக்காய், தம்தாஹா, கட்டோரியா (எஸ்.டி), மணிஹரி (எஸ்.டி), ஜமுய் மற்றும் பிர்பைன்டி (எஸ்.சி) ஆகிய இடங்களில் இருந்து தேர்தல்களில் போட்டியிடுவதாக ஜே.எம்.எம். அறிவித்திருந்தது.
தவிர, தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட ஆறு வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா, "பீகார் தேர்தலில் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது" எனக் கூறியிருந்தார். மேலும், தேர்தலுக்குப் பிறகு ஜார்க்கண்டில் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உடனான கூட்டணியை மறுபரிசீலனை செய்வதாகவும் கட்சி அறிவித்திருந்தது, இது எதிர்க்கட்சியான i-n-d-i-a கூட்டணிக்குள் ஆழமான விரிசலை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுடன் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு மோதல்கள் நிலவியதைத் தொடர்ந்து, பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜார்க்கண்ட் அமைச்சரும் ஜேஎம்எம் தலைவருமான சுதிவ்ய குமார், "ஜேஎம்எம் உடன் அரசியல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் விளைவாக, கட்சி பீகார் தேர்தல்2025 இலிருந்து விலக முடிவு செய்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார். இதில் சதி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.