பீகார் தேர்தல் | RJD வேட்பாளர் மனு நிராகரிப்பு.. காரணம் என்ன? பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு!
பீகாரின் மோகனியா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அறிவிக்கப்பட்டிருந்த RJD வேட்பாளர் ஸ்வேதா சுமனின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
RJD வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு
243 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்திற்கு நவம்பா் 6, 11 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், அங்கு பலமுனைப் போட்டி நிலவுகிறது. நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக - ஜேடியு கூட்டணி ஒருபுறமிருக்க, மறுபுறம் எதிர்க்கட்சியாகச் செயல்பட்டு வரும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி. - காங்கிரஸின் மகாகத்பந்தன் கூட்டணி தீவிர களப்பணியாற்றி வருகிறது. இவை தவிர, பிரபல தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோரின் கட்சியும், அசாதுதீன் ஓவைசியும் கட்சியும் போட்டி போட்டுகின்றன.
இந்த நிலையில், மோகனியா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அறிவிக்கப்பட்டிருந்த RJD வேட்பாளர் ஸ்வேதா சுமனின் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் அவரது வேட்புமனுவை நிராகரித்துள்ளது. ECI விதிகளின்படி, ஒதுக்கப்பட்ட பட்டியல் தொகுதியிலிருந்து வேட்பாளர் ஒருவர் தேர்தலில் போட்டியிட, அவர் ஒரு மாநிலத்தின் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால், ஸ்வேதா சுமன் உத்தரப்பிரதேசத்தில் உள்ள 'ரவிடாஸ்' சாதியைச் சேர்ந்த சான்றிதழைப் பெற்றுள்ளார், இது பீகாரில் உள்ள பட்டியல் சாதியினரின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தலைவர் சொல்வது என்ன?
வேட்புமனு நிராகரிப்பு குறித்து ஸ்வேதா சுமன், “நானும், எனது கட்சியும் மற்றும் ஆர்ஜேடி ஆட்சிக்கு வருவதைப் பார்த்து பாஜகவினரும் அக்கட்சியின் வேட்பாளரும் பயப்படுகிறார்கள். இதனால்தான் எனது வேட்புமனு சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்றால் நீங்களே கற்பனை செய்து பாருங்கள். அவர்கள், பீகாரை அழிக்கப் போகிறார்கள். நான் இந்த இடத்தை பூர்வீகமாகக் கொண்டவன் அல்ல என்று அவர்கள் கூறுகிறார்கள், அதேநேரத்தில் நான் கடந்த 20 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறேன்" என்று அவர் கூறினார்.
இவ்விவகாரம் குறித்து பாஜக தலைவர் விந்தியாச்சல் ராய், ”2020 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு மோஹானியா தொகுதியில் இருந்து ஸ்வேதா சுமன் தனது வேட்புமனுவை வினோத் ராமின் மனைவி சுமன் தேவி என்ற பெயரில் தாக்கல் செய்துள்ளார். அப்போது, உத்தரப்பிரதேசத்தின் பட்டியல் பிரிவில் வரும் தனது சாதியை அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்” என்றார்.
ஸ்வேதா சுமனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அத்தொகுதி பாஜகவின் வெற்றிப் பாதையை எளிதாக்கியுள்ளது. இந்தத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த நிரஞ்சன் ராமை தேசிய ஜனநாயகக் கூட்டணி களமிறக்கியுள்ளது. 2015ஆம் ஆண்டு இந்தத் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 2020ஆம் ஆண்டு ஆர்ஜேடியின் சங்கீதா குமாரியிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2 மனுக்கள் நிராகரிப்பு
முன்னதாக, சுகௌலியைச் சேர்ந்த ஆர்ஜேடி எம்எல்ஏவான சஷி பூஷன் சிங், விகாஷீல் இன்சான் கட்சியின் (விஐபி) வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், தொழில்நுட்ப மேற்பார்வை காரணமாக அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. விஐபி பதிவுசெய்யப்பட்ட பிராந்தியக் கட்சி அல்ல என்பதால், சிங் தனது வேட்புமனுவுக்கு 10 முன்மொழிபவர்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஆர்ஜேடியின் விதிமுறைகளைப் பின்பற்றி ஒருவரை மட்டுமே அவர் சமர்ப்பித்திருந்தார்.
இதையடுத்து, அவரது ஆவணங்களில் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்து அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. அதேபோல், ஆர்ஜேடி வேட்பாளர் ஓம் பிரகாஷ் சவுத்ரியின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. அவரது வேட்புமனுவில் பல பக்கங்கள் காலியாக விடப்பட்டிருப்பது பரிசீலனையில் தெரியவந்ததை அடுத்து, அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இது, மகாகத்பந்தன் கூட்டணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.