இந்தியாவில் விசா சேவைகளை நிறுத்தியது வங்கதேசம்.. பாதுகாப்பு நடவடிக்கை என விளக்கம்!
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தொடரும் தாக்குதல்களால், இந்தியாவில் வங்கதேச விசா சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கையாக இதை விளக்கி, வங்கதேச இடைக்கால அரசு பதற்றமான சூழலில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுவதும் தாக்கப்படும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் பொதுத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர் போராட்டத்தை வழிநடத்திய இன்குலாப் மோஞ்சோ தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி, டாக்காவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மரணம், வங்கதேசத்தில் வன்முறைக்கு வழிவகுத்தது.
இந்த சம்பவம் அடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, தேசியவாத காங்கிரஸ் தொழிலாளர் அமைப்பின் மையத் தலைவரான 42 வயதான முகமது மொடலெப் சிக்தர், கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இது, மேலும் வங்கதேசத்தில் பதற்றத்தை உருவாக்கியது. இதனால், இன்றுவரை அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே இந்துக்களுக்கு எதிராக அங்கு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 3 வாரங்களில் இந்து மதத்தைச் சேர்ந்த 5பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்தசூழலில் வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுவதற்கு இந்தியாவில் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன..
வங்கதேசத்திற்கு எதிரான எதிர்ப்பு இந்தியாவில் கிரிக்கெட் வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மானுக்கு எதிராக பூதாகரமாய் வெளிப்பட்டது. வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படும்போது வங்கதேசத்தை சேர்ந்த வீரர் இந்தியாவில் ஐபிஎல்லில் விளையாடக்கூடாது என கண்டனங்கள் எழுந்தன. மீறி வங்கதேச வீரர் விளையாடினால் மைதானத்தில் புகுந்து ஆடுகளத்தை பெயர்த்தெடுப்போம் என மிரட்டலும் விடுக்கப்பட்டது.
இந்தசூழலில் ஐபிஎல்லில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் விலக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வங்கதேச வாரியம் இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் வந்து விளையாட மாட்டோம் என்றும், எங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஐசிசி இடம் முறையிட்டுள்ளது. மேலும் வங்கதேசத்தில் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தசூழலில் தான் இந்தியாவில் விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக வங்கதேசம் அறிவித்துள்ளது. பதற்றமான சூழல் நிலவிவருவதால் பாதுகாப்பு நடவடிக்கை என வங்கதேச இடைக்கால அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

