வங்கதேசம் | இந்துக்கள் மீது தொடரும் தாக்குதல்.. 3 வாரங்களில் 5ஆவது நபர் சுட்டுக்கொலை!
கடந்த 3 வாரங்களில் இந்து மதத்தைச் சேர்ந்த 5ஆவது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று மாலை 5.45 மணியளவில் பொதுமக்கள் முன்னிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுவதும் தாக்கப்படும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் பொதுத் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர் போராட்டத்தை வழிநடத்திய இன்குலாப் மோஞ்சோ தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி, டாக்காவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மரணம், வங்கதேசத்தில் வன்முறைக்கு வழிவகுத்தது.
இந்த சம்பவம் அடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, தேசியவாத காங்கிரஸ் தொழிலாளர் அமைப்பின் மையத் தலைவரான 42 வயதான முகமது மொடலெப் சிக்தர், கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இது, மேலும் வங்கதேசத்தில் பதற்றத்தை உருவாக்கியது. இதனால், இன்றுவரை அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே இந்துக்களுக்கு எதிராக அங்கு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 3 வாரங்களில் இந்து மதத்தைச் சேர்ந்த 5ஆவது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று மாலை 5.45 மணியளவில் பொதுமக்கள் முன்னிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இறந்தவர் கேஷப்பூர் உபாசிலாவில் உள்ள அருவா கிராமத்தைச் சேர்ந்த துஷார் காந்தி பைராகியின் மகன் ராணா பிரதாப் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் காவல்துறை வட்டாரங்களின்படி, ராணா பிரதாப் சந்தையில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். முந்தைய சம்பவங்களில் கும்பல் வன்முறையின்போது அடித்துக் கொல்லப்பட்ட இந்து ஆடைத் தொழிற்சாலை தொழிலாளி திபு சந்திர தாஸ் கொல்லப்பட்டதும் அடங்கும்.
மற்றொரு இந்துவான அம்ரித் மொண்டலும் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்து, மைமென்சிங் மாவட்டத்தில், இந்து சமூகத்தைச் சேர்ந்த பஜேந்திர பிஸ்வாஸ், மற்றொரு தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கிடையில், புத்தாண்டு தினத்தன்று, இந்து தொழிலதிபரான கோகோன் சந்திர தாஸ், ஒரு கும்பலால் கத்தியால் குத்தப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். வங்கதேசத்தில் இந்துக்கள் கொலை செய்யப்படுவது, நாடு முழுவதும் தொடர்ந்து அமைதியின்மை மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் சட்டம் ஒழுங்கு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.

