உங்களுக்கு தூக்கம் சரியா வரலையா? தூக்கமின்மைக்கான காரணம் என்ன? விரிவாக சொல்கிறார் மருத்துவர்!
உணவை ரசித்து ருசித்து சாப்பிடுபவர்களெல்லாம் உணவு பிரியர்கள் என்று எப்படி தங்களை சொல்லிக் கொள்கிறார்களோ, அதேப்போலதான்... தூக்கத்தை ரசித்து லயித்து அனுபவிக்க கற்றுக்கொள்பவர்களெல்லாம் தங்களை தூக்கப்பிரியர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவே. நிறைய பேருக்கு இன்றைய டிஜிட்டல் உலகில், தூக்கமே வராமல் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
தூக்கமின்மை எனப்படுவது என்ன? அதற்கான அறிகள் என்னென்ன? எப்படி அதிலிருந்து மீள்வது? நமக்கு விளக்குகிறார் பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா
உறக்கம் எப்படி வருகிறது?
“ஒரு மனிதன் ஆரோக்கியமான உறக்கத்தை கொள்வதற்கு அவனது மூளையில் "காபா" (GABA) - காமா அமினோ புட்யரிக் ஆசிட்” எனும் உயிர் வேதியியல் ரசாயனத்தை அவனது தலாமஸ், ஹைப்போ தலாமஸ், ஹிப்போ கேம்பஸ், பேசல் கேங்கிலியா, மூளைத்தண்டு போன்ற பகுதிகள் அதிகமாக சுரக்கும். இதன் வழி நரம்பு மண்டலம் சாந்தப்படுத்தப்பட்டு உறக்கத்துக்கு வழிவகுக்கும்.
இதனுடன் பின் மாலை மற்றும் முன்னிரவு நேரம் தொடங்கி மூளையில் "மெலட்டோனின்" எனும் உறக்கத்திற்கான ஹார்மோன் சுரக்கும். மேற்கூறிய இவ்விரண்டின் விளைவாக இரவில் உறக்கம் நம்மை ஆட்கொள்கிறது.
உறக்கமின்மைக்கான அறிகுறிகள் என்ன?
பணியில் சோர்வாக இருப்பது, பகல் நேரத்தில் தூங்குவது, செய்யும் வேலையில் கவனமின்மை போன்ற அறிகுறிகள் வாரத்தின் மூன்று நாட்களுக்கு மேலோ, ஒரு மாதத்திற்கு மேலோ தொடர்ந்தால் அவற்றை உறக்கமின்மைக்கான அறிகுறிகள் என்று குறிப்பிடுவோம்.
இந்த அறிகுறிகள் இருப்பவர்களுக்கு நான்கு வகையான பிரச்னைகள் தோன்றும். அவை:
1. படுத்தவுடன் நீண்ட நேரம் உறக்கம் ஏற்படாமல் இருப்பது முதல் பிரச்னை. பொதுவாக படுத்தவுடன் 30 நிமிடங்களில் உறக்கம் வர வேண்டும்.
2. உறக்கத்தினூடே அதிகமான கனவுகள் மற்றும் இடற்பாடுகள் ஏற்பட்டு சரியான உறக்கம் கிடைக்காதிருத்தல் அடுத்த பிரச்னை.
3. உறக்கம் சரியான நேரம் கிடைத்தாலும் அடுத்த நாள் மிகவும் சோர்வாக இருப்பதும் பிரச்னைதான். புத்துணர்வாக உணராமல் இருத்தலும் பிரச்னைதான்.
4. நடுநிசிக்கு சற்று பின்பு அல்லது யாமத்தில் திடீரென கண்விழித்து விடுதல் (அதிகாலை இரண்டு முதல் நான்கு மணிக்கு கண் விழித்து அதற்குப் பிறகு உறக்கம் கிடைக்காத நிலை)
இந்த உறக்கமின்மையை தோற்றுவிக்கும் காரணிகளை சரிசெய்தாலே உறக்கம் தானாக சரியாகிவிடும்.
இதற்கும் மாறாக, சில நேரங்களில் மனத்தாழ்வு நிலை, பதற்ற நோய், அச்ச நோய், பீதி நிலை போன்றவற்றால் உறக்கமின்மை ஏற்படுமாயின் அந்த நோய்களுக்கான முறையான ‘மனநல சிகிச்சை’ கிடைத்தால் உறக்கமின்மை குணமாகும்.
ஜெட் லாக், உறவினர் மரணம் போன்ற காரணங்களினால் ஏற்படும் உறக்கமின்மை - சில நாட்களில் தானாக சரியாகிவிடும். எனினும் அந்த குறிப்பிட்ட நாட்களுக்கு உறக்கமின்மைக்கான சிகிச்சை எடுப்பது நல்லது.
யார் யாரை பாதிக்கிறது?
18 முதல் 25 வயதினரிடையே 3-5% என்ற அளவிலும்
65 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் 25 - 30% என்ற அளவிலும்
உறக்கமின்மையால் பாதிக்கப்படுகிறார்கள்
உறக்கமின்மைக்கான காரணங்கள் என்ன?
1. ஏற்கனவே இருக்கும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளின் (பதட்டம், மனத்தாழ்வு நிலை) விளைவாக உறக்கமின்மை ஏற்படுவது
2. தற்கால சூழ்நிலையில் வரும் திடீர் மாற்றங்களால் உறக்கமின்மை ஏற்படுகிறது. உதாரணம் : ஜெட் லேக், குறட்டை , குழந்தை பிறப்பு, அலர்ஜி, பணியிடம் சார்ந்த அழுத்தம், நெருங்கிய உறவினர்களின் மரணம் போன்றவை
3. தவறான உறக்கம் சார்ந்த பழக்க வழக்கங்களால் உறக்கமின்மை தொடர்வது (செல்போன் பார்ப்பது , படுக்கையறையில் டிவி பார்ப்பது போன்றவை)
உறக்கமின்மை நோய் உங்களுக்கு இருக்கிறதா ? இல்லையா?
உறக்கமின்மை நோய் உங்களுக்கு இருக்கிறதா ? இல்லையா? என்பதை இந்த இரண்டு கேள்விகளுக்கு விடையளிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்
1. நீங்கள் படுக்கையில் படுத்த உடனே உறக்கம் வருவதிலும் / உறக்கம் தொடர்வதிலும் பிரச்னை இருக்கிறதா?
2. உறக்கம் களைந்து அடுத்த நாள் முழுவதும் சோர்வின்றி புத்துணர்வாக உணர்கிறீர்களா?
மேற்சொன்ன இரண்டு கேள்விகளுக்கும் "இல்லை" என்ற பதில் வருவாயின் தங்களுக்கு சரியான உறக்கம் கிடைப்பதில்லை என்பது உறுதி” என்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. ஒருவேளை இல்லை என்றால், அதை எப்படி சரிசெய்வது?
கீழுள்ள இணைப்பில் அறியலாம்...!