பிராய்லர் கோழி சாப்பிட்டால் பெண்கள் சீக்கிரம் பூப்படைந்து விடுவார்களா? விளக்கமாக கூறும் மருத்துவர்!
அசைவ உணவு பிரியர்களின் உணவுப்பட்டியலில் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கும் உணவு, சிக்கன். ஆனால் அதில் நாட்டுக்கோழி சிறந்ததா பிராய்லர் கோழி சிறந்ததா என்ற விவாதம் இன்றும் தீரவில்லை.
ஒரு சிலர் “நாட்டுக்கோழிதான் சிறந்தது. ஏனெனில் பிராய்லர் கோழி என்பது மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோழி இனம் என்பதால், அதனால் நமக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படும்” என்று சொல்லி நாமே கேட்டிருப்போம்.
குறிப்பாக, சிலர் ‘ஐய்யய்யோ பிராய்லர் கோழியா சப்புடுறீங்க...? அத சாப்பிட்டால்..’ என பல பிரச்னைகளை பட்டியல் போட்டு அடுக்கிக்கொண்டே போவார்கள். அதில் அதிகமாக ‘பெண் குழந்தைகள் சீக்கிரத்தில் பூப்பெய்தி விடுவார்கள், தேவையற்ற கொழுப்புகள் சேர்ந்துவிடும், ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும், ரத்தக்குழாயில் கொழுப்பு அடைத்து விடும்’ என்று பல வதந்திகள் இன்றளவும் உலாவி கொண்டுதான் இருக்கிறது.
இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கிறார் பொதுநல மருத்துவர் ஃப்ரூக் அப்துல்லா.
“ஏழைகள் உண்ணும் புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவாக கருதப்படும் பண்ணைக்கோழி மீது மட்டும் இத்தனை வன்மத்துடன் புரளிகள் பரப்பி விடப்படுவதை நாம் அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்து தெளிவடைவோம்” என்று தக்க சான்றுகளுடன் அவர் நம்மிடையே கூறியவற்றை, இங்கே பார்க்கலாம்:.
முதல் பொய்
பிராய்லர் கோழியால் பெண் குழந்தைகள் 8 - 9 வயதில் பூப்பெய்துகிறார்கள்
எது உண்மை? ✅✅✅✅
இந்தியாவின் இப்போதைய சராசரி பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் வயது என்பது சராசரியாக 12 முதல் 13-தான். நமது சராசரி பூப்பெய்தும் வயது ஒரு நூற்றாண்டு காலத்திலே ஒரு ஆண்டு கூட இன்னும் குறையவில்லை.
பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களில் உள்ள பெண் பிள்ளைகள் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாநிலங்களைவிட சீக்கிரம் பூப்பெய்துகிறார்கள்.
குடும்பத்தின் மொத்த வருவாய், பசி பட்டினி இல்லாமை, கல்வி, வேலைவாய்ப்பு அனைத்தும் சேர்ந்து பூப்பெய்தும் வயதை சிறிது குறைக்கின்றன. ஆனாலும் அனைவரும் அல்லது பெரும்பாலானோர் இன்னும் ஏழாவது / எட்டாவது / ஒன்பதாவது படிக்கும் போதுதான் வயதுக்கு வருகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் PCOD எனும் மாதவிடாய் கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்ளுக்கு பேலியோ பரிந்துரையில் பிராய்லர் சிக்கன் இருக்கும். அதை சாப்பிட்டு பலருக்கு மாதவிடாய் ஒழுங்காகி குழந்தைப்பேறு பெறுவதை கண்கூடாக காண்கிறோம்.
அறிவியல் ஆதாரங்கள்
இரண்டாவது பொய்
பிராய்லர் கோழி உண்பதால் தேவையற்றது கொழுப்பு சேர்கிறது. அதனால் உடல் எடை அதிகரிக்கிறது...
எது உண்மை? ✅✅✅✅
இது உண்மை அல்ல. உண்மை என்னவெனில்,
பிராய்லர் கோழியில் மாவுச்சத்து எனும் carbohydrates கிடையாது. அதில் இருப்பது புரதமும் கொழுப்பும் மட்டுமே.
நாம் உணவில் அதிகமாக உண்ணும் மாவுச்சத்து / இனிப்பு / லாஹிரி வஸ்துக்களை உடல் கிரிகித்து க்ளூகோசாக மாற்றும். அதை செரிமானம் செய்ய இன்சுலின் சுரக்கும். சாப்பிட்ட அத்தனை மாவுச்சத்தும் கொழுப்பாக உருமாறி உடலில் சேரும். இதனால்தான் உடல் பருமனாகிறது.
உடல் பருமனுக்கு முக்கிய காரணங்கள்:
சர்க்கரை
பேக்கரி உணவுகள்
அரிசி / கோதுமை போன்ற தானியம் சார்ந்த உணவு முறை
உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை
உயிர்வேதியியல் (Basic Biochemistry)
இதேபோல உடற்பருமன் என்பது அதிகப்படியான கார்போஹைட்ரேட்ஸ் உட்கொள்வதாலேயே ஏற்படும்.
இதுக்குறித்த அடிப்படை தெரியாதவர்கள்தான் புரதமும் கொழுப்பும் மட்டுமே அடங்கிய மாமிசத்தால் உடல் பருமன் ஏற்படுகிறது என்று கூறுவார்கள்.
அறிவியல் ஆதாரங்கள்
மூன்றாவது பொய்
ஆண் மலட்டுத்தன்மை பிராய்லர் கோழியால் வருகிறது
எது உண்மை✅✅✅✅
தினமும் தானியம் சார்ந்த மாவுச்சத்து அதிகம் உண்ணும் உணவு முறையில் இருப்பவர்கள் உடல் பருமனாகிறார்கள். அதிகம் மாவுச்சத்து உண்ணும் போது உடலில் அதிக இன்சுலின் சுரக்கிறது. சுரக்கப்படும் அதிக இன்சுலினும் வேலை செய்யாமல் போகிறது.
இதை இன்சுலின் எதிர்ப்பு நிலை என்கிறோம்.
இதனால், உடல் பருமன் / டைப் டூ டயாபடிஸ்/ ரத்த கொதிப்பு போன்ற பல வாழ்வியல் நோய்கள் ஆண்களுக்கு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக ஆண்மைக்கான ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் குறைகிறது. இதனால் உடலுறவில் நாட்டமின்மை, ஆண்குறி எழுச்சி குறைபாடு, விந்தணுக்களின் தரத்தில் குறைபாடு, விந்தணுக்களின் எண்ணிக்கையில் குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன.
மேற்சொன்ன அனைத்துக்கும் பண்ணைக் கோழி காரணமல்ல.
மீண்டும் அதிக மாவுச்சத்து / இனிப்பு / மது / புகை/ உடல் உழைப்பின்மை / அதிக மன அழுத்தம் / தூக்கமின்மை போன்ற பல காரணங்கள் உண்டு.
அறிவியல் ஆதாரங்கள்
நான்காவது பொய்
தைராய்டு பிரச்சனை பிராய்லர் கோழியால் வருகிறது
எது உண்மை✅✅✅✅
போகிற போக்கில் நாம் பிராய்லர் கோழி மேல் இந்த பழியை போட்டுவிட்டுப்போக முடியாது. எந்தவொரு குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகள் தர வேண்டும்.
சிறுதானியங்கள் அதிகம் உண்பதால் தைராய்டு பிரச்சனை அதிகம் வருகிறது என்று அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகள் இருக்கின்றன.
தைராய்டு குறைபாடு என்பது ஒரு தன்னெதிர்ப்பு நோய் ( auto immune disease). பெரும்பாலும் இது மரபணு சார்ந்ததாகவும் சுற்றுச்சூழல் சார்ந்ததாகவும் இருக்கிறது. இதற்கென பிரத்யேக காரணியை கண்டறியப்படவில்லை. எனினும் முன்கழுத்துக்கழலை நோய் வருவதற்கு ஐயோடின் குறைபாடு முக்கிய காரணியாக இருக்கிறது.
தைராய்டுக்குள் எதற்கும் சம்பந்தம் இருக்கிறது
உடல் பருமனுக்கும் தைராய்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது. நீரிழிவிற்கும் தைராய்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இனிப்பு சர்க்கரை கலந்த பானங்கள் உணவுகள் உண்பதற்கும் தைராய்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது. க்ளூடன் நிரம்பிய கோதுமை உண்பதற்கும் தைராய்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆனால் இவற்றை விட்டு விட்டு ப்ராய்லரை மட்டும் நிறுத்தினால் தைராய்டு குணமாகாது. ஆகவே ப்ராய்லருக்கும் தைராய்டுக்கும் சம்பந்தம் இல்லை.
அறிவியல் ஆதாரங்கள்
https://www.ncbi.nlm.nih.gov/m/pubmed/2921306/
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4911848/
Endemic goiter with iodine sufficiency: a possible role for the consumption of pearl millet in the etiology of endemic goiter. Am J Clin Nutr. 2000 Jan;71(1):59-66.
The goitrogenic effect of two Sudanese pearl millet cultivars in rats. Nutr Res 1997; Mar (17): 533–546.
ஐந்தாவது பொய்
பிராய்லர் கோழியால் ரத்தக்குழாயில் கொழுப்பு அடைப்பு ஏற்படும்
எது உண்மை? ✅✅✅✅
நாம் நினைப்பது போல ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவது நாம் சாப்பிடும் கொழுப்புள்ள மாமிசத்தால் அல்ல.
மாறாக, நாம் அதிகம் உண்ணும் மாவுச்சத்து நிறைந்த தானியங்கள் / இனிப்புகள் போன்றவற்றை நமது கல்லீரல் ட்ரைகிளசரைடுகளாக மாற்றி உடலில் சேமிக்கின்றன. இவை எல்லை மீறும் போது ரத்தத்திலும் இதன் அளவுகள் கூடுகின்றன. இவை ரத்த நாளங்களுக்கு ஊறுசெய்ய வலியன. இருப்பினும் ரத்த குழாய்களில் உள்காயங்கள் உருவாக்குவதற்கு முதல் காரணம் நாம் உண்ணும் ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்கள் / இனிப்புகள் போன்றவைதான்.
எதன் மீதோ போடப்பட வேண்டிய பழியை தூக்கி பிராய்லர் மீது போடுவது வேடிக்கை.
அறிவியல் ஆதாரம்
கடைசி பொய்
கல்லீரல் வீக்க நோய் பிராய்லர் கோழி சாப்பிடுவோருக்கு ஏற்படும்.
எது உண்மை?✅✅✅✅
கல்லீரல் வீக்க நோய்க்கு அடிப்படை காரணம் இனிப்பு / அதிக மாவுச்சத்து உணவு முறை/ மது போன்றவைதான். இவற்றை கல்லீரலானது ட்ரைகிளசரைடுகளாக மாற்றி தன்னகத்தே (De novo lipogenesis) சேமிக்க துவங்கும் போது கல்லீரல் வீக்கமடைகிறது.
இதற்கும் பிராய்லர் கோழிக்கும் சம்பந்தம் இல்லை.
அறிவியல் ஆதாரம்
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4405421/
https://www.sciencedaily.com/releases/2018/02/180215165152.htm
https://diabetes.diabetesjournals.org/content/67/Supplement_1/761-P
ஏழைகள் உண்ணும் புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவாக கருதப்படும் பண்ணைக்கோழி மீது மட்டும் இத்தனை வன்மத்துடன் புரளிகள் பரப்பி விடப்படுவதை நாம் அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்து தெளிவடைவோம்”
என்கிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.