மேகதாது | பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் சிக்காதீர் - முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள்
கர்நாடகா - தமிழ்நாடு இரண்டு மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர்ப் பிரச்னை என்பது பல ஆண்டு காலமாகவே இருந்து வருகிறது. இந்தசூழலில்தான், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து இந்த தீர்மானம் ஒருமனதாகவும் நிறைவேறியிருந்தது.
அதேசமயம், அண்மையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கிடைக்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் இருப்பதாகவும், மழைப் பொழிவு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தசூழலில் தான், மேகதாது அணை மற்றும் காவிரி நதி நீர்ப் பிரச்னை குறித்து நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் செல்லவுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்திருக்கிறார். அதன்படி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாருடன் தமிழ்நாடு முதல்வர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் தான், மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதல்வருடனான பேச்சுவார்த்தைக்கு முதல்வர் விஜய் செல்வதை கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை! நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.! கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்! பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

