டெல்லி போலிஸ்
டெல்லி போலிஸ்கூகுள்

டெல்லி | 23 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 12-ஆம் வகுப்பு மாணவர் கைது

டெல்லியில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்ததற்கு பாஜகவினரே காரணம் என்று அதிஷி குற்றம் சாட்டியிருந்தார்.
Published on

சமீப காலமாக டெல்லி மற்றும் அதன் புறநகரை சுற்றியுள்ள பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, போலிசார் மிரட்டல் விடுத்த நபரைதேடி வந்துள்ளனர். இந்நிலையில், தேர்வுக்கு பயந்து 12 வகுப்பு பள்ளி மாணவரே இந்தகைய புரளியில் ஈடுபட்டிருந்தது போலிசார் விசாரணையில் தெரியவந்தது.

சமீபகாலமாக டெல்லி அதனை சுற்றியுள்ள பள்ளிகளிலும், விமான நிலையங்களிலும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு புரளி வந்தபடி இருந்தது. ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு மிரட்டல் வரும்போதெல்லாம், போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று தீவிர சோதனைக்கு பிறகு அது புரளி என்ற முடிவுக்கு வந்துக்கொண்டிருந்தனர்.

அதே போல் எப்பொழுதெல்லாம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறதோ அப்போதெல்லாம், பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பதுடன், நகரெங்கும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்த தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு பக்கம் போலிசார், தீவிர தேடுதல் பணியை செய்து வந்தனர் என்றால் மறுபக்கம் இச்சம்பவம் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது.

டெல்லியில் உள்ள காவல்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது. அது டெல்லி அரசின் கீழ் இல்லை... இதை அடிப்படையாகக்கொண்டு, டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ”டெல்லியில் இது போன்ற ஒரு மோசமான சட்டம் ஒழுங்கு இது வரை இருந்ததில்லை” என்று கூறியிருந்தார். ”டெல்லியில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமடைந்ததற்கு பாஜகவினரே காரணம்” என்று அதிஷி குற்றம் சாட்டியிருந்தார்.

இது போன்று அடிக்கடி போலியான வெடிகுண்டு மிரட்டலை எதிர்கொண்ட டெல்லி நகர காவல்துறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டால் ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களும், ஊழியர்களும் இதுபோன்ற நெருக்கடிகளை எப்படி சமாளிக்கவேண்டும் என்று கருத்தரங்குகள், பயிற்சிகளை அளித்து வந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் டிபிஎஸ், ஆர்கேபுரம் மற்றும் பஸ்சிம் விஹாரில் உள்ள ஜிடி கோயங்கா உள்பட 40 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அந்த மின்னஞ்சலில் பள்ளி கட்டிடங்களுக்குள் சிறிய வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை செயலிழக்கச் செய்ய வேண்டுமென்றால் 30,000 டாலர்கள் தேவைப்படுவதாகவும் வந்ததை அடுத்து, அதிர்ந்த போலீசார் மிகத்தீவிரமாக குற்றவாளியை தேடி வந்தனர்.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்pt web

போலிசாரின் தீவிர விசாரணையில் 12 வகுப்பு பள்ளி மாணவர் ஒருவரே தேர்வுக்கு பயந்து இத்தகைய செயலை செய்துள்ளார் என்று தெரியவந்தது அனைவரையும் அதிரவைத்துள்ளது. இதில் அந்த மாணவர் தனது பள்ளியைத் தவிர மற்ற பள்ளிகளுக்கு 6 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்றும் அதில் ஒரு மின்னஞ்சலில் மட்டும் 23 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த மாணவனை கைது செய்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல் கடந்த ஆண்டு 25 வயது வேலையற்ற இளைஞன், ஒரு வெடிகுண்டு புரளிக்காக டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார், மற்றொரு வழக்கில், மிரட்டல் கடிதம் அனுப்பியதன் மூலம் ஒரு நண்பரை சிக்க வைக்க முயன்ற 17 வயது இளைஞர் மும்பையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com