வாஜ்பாய் | புதிய பிரதமர் முதல் புதிய இந்தியாவின் பிரதமர் வரை!!
சூரியன் மீண்டும் எழுவான்
வெய்யிலோ மீண்டும் தோன்றும்
ஆனால் என் தோட்டத்துப்
பச்சைப் பசும்புல்லில்
பனித்துளிகள்,
எல்லாப்பருவங்களிலும்
காண இயலாது.”
- அடல் பிகாரி வாஜ்பாய்
இந்தியா எனும் தோட்டத்தின் பச்சைப் பசும்புல் பனித்துளிதான் அடல் பிஹாரி வாஜ்பாய். இந்தப் பெயர் நவீன இந்தியாவில் நாம் அனுபவிக்கும் பல வளர்ச்சிகளுக்கு காரணமாக இருந்தது. இந்திய அரசியலில் அழுத்தமாக தடம் பதித்த தலைவர்களில் முக்கியமானவர் வாஜ்பாய். ‘நாட்டின் பிரதமர் பதவியை ஒரு நாள் இவர் அலங்கரிப்பார்’ என்று இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவினால் புகழப் பெற்றவர். பதவிக்காலம் முழுவதையும் நிறைவு செய்த, ‘காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர்’ என்ற பெருமைக்குச் சொந்தக்காரர்.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், கிருஷ்ண பிகாரி வாஜ்பாய் - கிருஷ்ணா தேவி தம்பதிக்கு மகனாக 1924ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி பிறந்தார். வாஜ்பாயின் தந்தை பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்தவர். இவர், சிறந்த கவிஞரும் கூட. தந்தையை போன்று வாஜ்பாயும் கவிப் புலமை கொண்டவர். தேச பற்று மிகுந்த கவிதைகளை வாஜ்பாய் படைத்துள்ளார்.
1944 ஆம் ஆண்டு முதல் பொதுவாழ்வில் ஈடுபடத் தொடங்கினார் வாஜ்பாய். ஆர்ய சமாஜ்யத்திலும், 1939-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் கொள்கையாலும் ஈர்க்கப்பட்டு அதிலும் தன்னை இணைத்துக் கொண்டார். பின் சியாமா பிரசாத் முகர்ஜி, தீன தயாள் உபாத்யாயா உள்ளிட்டோருடன் இணைந்து பாரதிய ஜன சங் என்ற அமைப்பைத் தொடங்கினார்.
நேருவும் வாஜ்பாயும்
பிரதமர் நேருவுக்கும் வாஜ்பாயிக்கும் இருந்த பிணைப்பு அலாதியானது. 1977 -ம் வருடம் வாஜ்பாய், வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றிருந்தார். அப்போழுது மொரார்ஜி தேசாய் இந்திய பிரதமராக இருந்தார். பதவியேற்ற பின் சவுத் பிளாக்கில் இருக்க கூடிய தனது அலுவலகத்துக்கு சென்றார் வாஜ்பாய். அறைக்குள் நுழைந்து பொறுபேற்றுக் கொண்ட அவர், திடீரென வெளியே வந்தார். அங்கிருந்த ஊழியர்களை அழைத்தார். ஊழியர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனெனில் அமைச்சர்கள் வெளியே வந்தெல்லாம் ஊழியர்களை அழைக்கும் வழக்கமில்லை. அலுவலகத்தின் உள்ளிருந்தே அழைப்பார்கள்.
”நான் சிலமுறை இங்கே வந்திருக்கிறேன், பலரது புகைப்படங்கள் இருக்கும் இந்த இடத்தில் நேருவின் புகைப்படமும் இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் அது இப்போது இல்லை. முன்னாள் பிரதமர் நேருவின் புகைப்படம் இங்கிருந்ததே எங்கே” என்றார் கோபமாக. ஆட்சி மாறியதால் அதனை அகற்றி விட்டோம் என்றனர். கோபம் வெளிப்பட்டவராய் ”இன்னும் சில நிமிடங்களில் அந்த புகைப்படம் இங்கே முன்னர் இருந்த அதே இடத்தில் இருக்க வேண்டும், நான் திரும்பி வரும்போது அதனை பார்க்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். ஊழியர்களும் உடனடியாக அந்த புகைப்படத்தை எடுத்து வந்து அங்கே வைத்தனர்.
வாஜ்பாய் மற்றும் நேரு இடையேயான உறவு மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக இருந்திருக்கிறது. வாஜ்பாயின் உரைகளை கேட்ட நேரு, கண்டிப்பாக வாஜ்பாய் பிரதமர் ஆவார் என அனைவரிடமும் கூறினார். அதுவும் 3 முறை இந்தியாவின் பிரதமரானார் வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் வாஜ்பாயும் நேருவும் நாடாளுமன்றத்தில் எலியும் பூனையுமாக செயல்பட்டவர்கள் என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது.
நாடாளுமன்றத்தில் முழங்கிய வாஜ்பாய்
அவசர நிலைக்குப் பின்னர், தனது நீண்டகால நண்பர்களான பைரோன் சிங் ஷெகாவத், எல்.கே. அத்வானி ஆகியோருடன் சேர்ந்து, 1980ல் பாரதிய ஜனதா கட்சியை தொடங்கினார் வாஜ்பாய். பாரதிய ஜனதா கட்சியின் முதல் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. அதில் வென்ற இருவரில் ஒருவர் வாஜ்பாய். இருப்பினும், அவரது குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலித்தது. சிறப்பான உரைகள் மூலம் சிறந்த நாடாளுமன்றவாதி என நிரூபித்தார். அதற்கு சான்றுதான் நேருவின் புகழுரைகள்.
1996ம் ஆண்டு நடந்த 11ஆவது மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தனிப்பெரும் கட்சியாக வென்ற நிலையில் பிரதமராகப் பதவியேற்றார். ஆனால், பெரும்பான்மையை திரட்ட இயலாத நிலையில் பதவியேற்ற 13 ஆவது நாளே பதவி விலகினார் வாஜ்பாய்.
அதன் பின்னர் 1998ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வென்றது. ஆகவே மீண்டும் பிரதமரானார் வாஜ்பாய். இம்முறை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தார். ஆனால், 13 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது. 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்று மீண்டும் வாஜ்பாய் பிரதமரானார். இம்முறை முழு 5 ஆண்டுகாலமும் அவர் பிரதமராக இருந்தார்.
இந்தியாவின் அணுகுண்டு சோதனை
வாஜ்பாய் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் பல முக்கியமான திட்டங்களையும் முடிவுகளையும் எடுக்க வேண்டியிருந்தது. அதில் ஒன்று அணுகுண்டு சோதனை.
1974 மே 18ல் பொக்ரானில் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது இந்திரா காந்தி தலைமையிலான அரசு. அதுவரை ‘அமைதி வழி’ எனப் பாடம் நடத்திய தேசம் அணு ஆயுதத்தை கையில் எடுத்ததை கண்டு உலக நாடுகள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தன. நம் தேசமோ அதனை ‘அமைதியான அணுக்கரு வெடிப்பு’ என்று சொல்லி கடந்துபோனது. புத்த பூர்ணிமாவில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு ‘சிரிக்கும் புத்தர்’ என்றும் பெயர் சூட்டினார்கள்.
அதன் பிறகு 1998ல் மீண்டும் ஒரு அணுகுண்டு சோதனையை தேசம் சந்தித்தது. அதற்கு அட்சாரம் போட்டவர் அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய். இதற்கு முன்பே நரசிரம்மராவ் அதற்கான முயற்சியை எடுத்திருந்தாலும் அமெரிக்காவின் கழுகுக் கண் பார்வையில் இருந்து தப்பமுடியவில்லை. ஆனாலும், அந்தக் கழுகு கண்களுக்கு வேடிக்கை காட்டிவிட்டு வாஜ்பாய் அதனை சாதித்துக் காட்டினார். அந்தச் சாதனையால் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தன் சட்டையே கிழிந்ததைபோல அவமானம் அடைந்தார். அதன் விளைவாக அமெரிக்கா இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதித்தது. அதனையொட்டி கனடா போன்ற நாடுகளும் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன.
வெளிநாட்டு உதவிச் சட்டம் 1961இன் கீழ் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட உதவிகள் நிறுத்தப்பட்டன. ராணுவ நிதியுதவி நிறுத்தப்பட்டதுடன், அமெரிக்க அரசு நிறுவனங்களால் வழங்கப்படும் கடன்கள், உத்தரவாதங்கள் ரத்து செய்யப்பட்டன. தொழில்நுட்ப பரிமாற்றங்கள் தடை செய்யப்பட்ட நிலையில், சர்வதேச நிதி நிறுவனங்கள் இந்தியாவுக்கு கடன் வழங்கவும் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்திய சூழலில், சர்வதேச கடன்கள் தாமதமானதால் உள்கட்டமைப்புத் திட்டங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் தற்காலிகமாக வளர்ச்சி குறைந்ததுடன், இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதிகள் சற்று குறைந்தன. ஆனால், இருதரப்பு வர்த்தகம் ஒருபோதும் முழுமையாகத் தடை செய்யப்படவில்லை. ஆனால் அடுத்த சில மாதங்களில், பொருளாதார தடைகளில் சிலவற்றை திரும்பப் பெற்றது அமெரிக்கா.
அரசியல் ஆதாயத்திற்காக இந்த நடவடிக்கையா?
“இந்தியா இப்போது அணு ஆயுதங்கள் கொண்ட நாடு. நம்மிடம் அணு ஆயுதங்களை வைத்துக் கொள்வதற்கான தகுதி இருக்கிறது. நாம் அதை ஒரு போதும் ஆத்திரத்திற்காக பயன்படுத்த மாட்டோம்” போக்ரான் அணு குண்டு சோதனைக்கு பின்பு வாஜ்பாய் சொன்ன வார்த்தைகள் இவை.
வாஜ்பாய் பிரதமாராகி 2 மாதங்கள் கழித்து 1998 மே17 அன்று இந்தியா டுடே இதழுக்கு ஒரு பேட்டி அளித்தார். அவரிடம் அணுகுண்டு பற்றிதான் முதல் கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர், “தேர்தலில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே இந்தச் சோதனைகளை நிகழ்த்தினோம். இது தேசிய செயல் திட்டத்தில் ஒரு பகுதி. தேசிய பாதுகாப்புக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால்தான் சோதனைகளை செய்ய முடிவெடுத்தோம்” என்றார். பொருளாதாரத் தடைகள் பற்றிய கேள்விக்கு, “தடைகளால் நமக்கு ஒரு கேடும் இல்லை. வராது. இந்த மாதிரியான அச்சுறுத்தல்களுக்கும், தண்டனைகளுக்கும் இந்தியா அடிபணியாது” என்றார்.
உங்களின் அரசியல் ஆதாயத்திற்காக இந்த நடவடிக்கையா என்றதற்கும் அவரிடம் வெளிப்படையான பதில் இருந்தது. “அரசியலைவிட தேசத்தை முக்கியமாக நாம் கருதுவதே இந்திய ஜனநாயகத்தின் பெரிய பலம். 1974ல் இந்திரா காந்தி முதன்முதலாக அணு ஆயுத சோதனை செய்த சமயத்தில், நாங்கள் எதிர்கட்சியாக இருந்தோம். ஆனால் அவருக்கு ஆதரவு தந்தோம்” என்றார்.
அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்ந்த போது, அவரை ஒரு புதிய பிரதமராகத்தான் தேச மக்கள் பார்த்தார்கள். ஆனால், அவரின் ஆட்சியின் மூலம், அவர் புதிய இந்தியாவின் பிரதமராக தெரிய தொடங்கினார்.
ராஜீவ் காந்தி மறைவுக்குப் பின் இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சி 0.6%ல் இருந்து 2.8%த்திற்கு உயர்ந்தது. இந்த 2% வளர்ச்சிக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால், வாஜ்பாய் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட புதிய தொலை தொடர்பு கொள்கை (NTP - New Telecom Policy) இந்தியாவின் தொலை தொடர்பு வளர்ச்சியை 3% இல் (1999) இருந்து 70% த்திற்கு (2012) உயர்த்தியது. இந்தச் சாதனையை ஒரு தொலைத் தொடர்பு துறையில் ஒரு புரட்சி என மாற்றுக் கட்சியினரும் பாராட்டினர்.
வாஜ்பாய் ஆட்சியின் கீழ்தான் கார்கில் போர் மோதலை எதிர்கொண்டது இந்தியா. அதே போல 1999, 2000 ஆம் ஆண்டுகளில் இரண்டு பெரும் சூறாவளி காற்று தாக்குதல், 2001ல் பெரும் பூகம்பம்... 2002-2003ல் வறட்சி மற்றும் எண்ணெய் நெருக்கடி, இரண்டாம் கல்ஃப் போர் என பல தாக்கங்கள்.. ஆனால், ஒருபோதிலும் இவை அனைத்தும் இந்தியாவின் ஜி.டி.பி'யில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் வாஜ்பாய்.
நிலாவுக்கு 2008 இல் இந்தியா விண்கலம் அனுப்பவிருக்கிறது என்று பெருமையுடன் கூறியவர் வாஜ்பாய். அதன் பின்புதான் இஸ்ரோ சந்திராயன் திட்டத்தை உருவாக்கியது.
வாஜ்பாய் நாட்டிற்கு ஆற்றியிருக்கும் சீரிய பணிகளை போற்றும் வகையில் 2015 மார்ச் 27ஆம் நாளன்று அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லத்திற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார். அதன் பின்னர், வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25ஆம் தேதி ஆண்டுதோறும் நல்லாட்சி நாளாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

