இளையோர் மொழிக்களம் 29 | அன்றாடப் பயன்பாட்டுச் சொற்கள் அனைத்திலும் தமிழ்செய்க !

எழுத்தாளர், கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 29
தமிழ்
தமிழ்கோப்புப்படம்

நாம் அன்றாடம் பத்துப் பொருள்களையேனும் கையாளவேண்டியிருக்கும். காலையில் ஒரு குவளையேனும் குளம்பி குடிப்போம். பிறகு ஒரு தட்டினில் இட்ட சிற்றுண்டிகளை உண்போம். சிறிது தண்ணீர் குடிப்போம். வண்டியை எடுத்துக்கொண்டு பகற்பணி என்னவோ அதனைப் பார்க்கக் கிளம்புவோம். அங்கே பணியாற்றுவோம். இடையே நண்பகலுணவு.

நண்பர்களோடு பல பொருள்களைப் பற்றிய அளவளாவலும் இருக்கும். மாலையில் கிளம்பி வீடு வருவோம். வீட்டில் சிறிது நேரம் தொலைக்காட்சி பார்ப்பதும் உண்டு. இவற்றிடையே கைப்பேசியில் சிறிது உலாவல். உறவினரோடு நண்பர்களோடு நேரிலோ கைப்பேசிவழியிலோ பேச்சு. பிறகு இரவுணவும் உறக்கமும்.

இத்தகைய அன்றாடச் செயல்பாட்டில் நாம் எத்தனை தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்துகிறோம் ? உரையாடலின்போது வழக்கமாய் நாம் கையாளும் பொருள்களின் பெயர்களைத் தமிழில்தான் கூறுகிறோமா ? நம் பயன்பாட்டுச் சொற்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை ஆங்கிலச் சொற்கள் கலந்திருக்கின்றன, தெரியுமா ? அவற்றை உணர்ந்துதான் பயன்படுத்துகிறீர்களா ? உங்களையே அறியாமல் பழக்கத்தினால் வந்த வழக்கத்தினால் பயன்படுத்துகிறீர்களா ? சுற்றிலும் உள்ளவர்கள் உங்களை நாகரிக மேன்மையடைந்தவராகக் கருதவேண்டும் என்பதற்காக வலிந்து ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துகிறீர்களா ? ஒருவேளை நீங்கள் பயன்படுத்தும் பொருள்களின் தமிழ்ப்பெயர்கள் தெரியவில்லையா ? ஆங்கிலத்தில் பொருட்பெயர் தெரிகிறது, தமிழில் தெரியவில்லை என்றால் நீங்கள் சிறிதே நாணமுறவேண்டும், இல்லையா ? எண்ணிப் பாருங்கள்.

தமிழ்
இளையோர் மொழிக்களம் 23 | 'செவன் அண்ட் ஆப் சனி’ என்று ஏன் சொல்வதில்லை ?

நமக்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது, அப்பெயர் பிறமொழிச் சொல்லாக இருக்கிறது என்றே வைத்துக்கொள்வோம். அதனை நாம் அன்றாடம் கையாளும் வாய்ப்பு குறைவு. யாரேனும் நம்மைப் பெயர்சொல்லி அழைக்கலாம். அதுவும் முழுப்பெயரைச் சொல்லமாட்டார்கள்.

‘வெங்கடேஸ்வரன்’ என்ற பெயரை வெங்கி என்றோ வெங்கு என்றோ நண்பர்கள் வட்டாரத்தில் சுருக்கித்தான் அழைப்பார்கள். ‘அபிராமி’ என்ற பெயரை ‘அபி’ என்று சுருக்குவது தவறாது. அதனால் அத்தகைய பிறமொழிப்பெயர்ச் சொற்கள்கூட வலுவிழந்து குழூஉக்குறிப் பெயர்களாக மாறிவிடும். இந்தப் பெயர்ச்சுருக்கங்கள் யாவும் தமிழ்மொழி இயல்பின்படியேதான் அமையும். ‘செந்தில்குமார்’ என்பவரைச் செந்தில் என்றோ குமார் என்றோ சுருக்குவார்கள்.

முற்பாதியோ பிற்பாதியோ அதன் சுருக்கம் இருக்கும். இங்கே இரண்டும் தமிழியல்புகள். என் பெயரை ‘மகி, மகு’ என்று சுருக்கி அழைக்கும் நண்பர்கள் பலர். இச்சுருக்க வடிவம் தமிழியல்பிற்கேற்ப இருக்கவேண்டும் என்றுதான் மொழிப்பழக்கம் நம்மை வலியுறுத்துகிறது. அதனால்தான் மொழித்தொடர்களின் இலக்கண வடிவச் சுருக்கமே பெயர்ச்சுருக்கமாய் அமைகிறது.

வெங்கடேஸ்வரனை யாரும் ‘ஸ்வரன்’ என்று சுருக்குவதில்லை. மகுடேசுவரனை யாரும் ‘ஸ்வரன்’ என்பதில்லை. அவ்வாறே ‘அபிராமி’யை ராமி என்று சுருக்கமாட்டோம். ஏனென்றால் வெங்கி, மகி, அபி என்பவைதாம் தமிழியல்பின்படி அமைந்த சுருக்கவடிவங்கள். ஸ்வரன், ராமி என்பன தமிழ் வடிவங்கள் அல்ல. ‘ஸ்’ என்ற எழுத்தோ ‘ரா’ என்ற எழுத்தோ தமிழில் ஒரு சொல்லுக்கு முதலெழுத்தாகாது என்பதுதான் தமிழியற்கை.

தமிழ்
இளையோர் மொழிக்களம் 27 | ஊர்ப்பெயர்களைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள்!

பெயர்ச்சொற்களின் பயன்பாடு அன்றாட வாழ்க்கையில் பெரிதாய் இல்லை. அவற்றின் சுருக்க வடிவமோ தமிழியற்கைக்குள் வந்துவிடுகிறது. ஆனால், நாம் பயன்படுத்தும் அன்றாடப் பொருள்களின் ஆங்கிலப் பெயர்கள் முழுவடிவத்தோடு தமிழில் எடுத்தாளப்படுகின்றன. தமிழ் மொழிக்குரிய இடத்தைக் கவ்விக்கொள்கின்றன.

தமிழ்
தமிழ்

காலையில் எழுகிறீர்கள். ‘பிரஷ்’ பண்ணுகிறீர்கள். ‘பேப்பர்’ பார்க்கிறீர்கள். படிக்கிறீர்கள் என்று சொல்ல வாய்வரவில்லை. ‘காபி அல்லது டீ’ குடிக்கிறீர்கள். ‘பாத்ரூம்’ போகிறீர்கள். ‘சோப்பு, ஷாம்பூ’ பயன்படுத்திக் குளிக்கிறீர்கள். ‘டவலால்’ துவட்டிக்கொள்கிறீர்கள். ‘ட்ரெஸ்’ செய்துகொள்கிறீர்கள். ‘டிபன்’ சாப்பிடுகிறீர்கள். ‘ஷூ’ அணிகிறீர்கள். ‘பைக்கை’ எடுக்கிறீர்கள். மறக்காமல் ‘மொபைலை’ எடுத்துக்கொண்டோமா என்று ’செக்’ பண்ணிக்கொள்கிறீர்கள். கழுத்தில் ‘பளூடூத் ஹெட்போன்’ மாட்டிக்கொண்டாயிற்று. ‘ரோட்டுக்கு’ வருகிறீர்கள். ஒரே ‘ட்ராபிக்.’ எப்படியோ ஊர்ந்து அலுவலகம் வந்தீர்கள். ‘வொர்க்’ போகிறது. ‘கொலீக்ஸ்’ பேசுகிறார்கள். பகலில் ‘லஞ்ச்’ முடிக்கிறீர்கள். ‘ஈவினிங்’ ஆகிவிட்டது. எல்லாவற்றையும் ‘பினிஷ்’ செய்கிறீர்கள். வீட்டுக்கு வருகிறீர்கள். ‘டிவி’ பார்க்கிறீர்கள். ‘மொபைல்’ பார்க்கிறீர்கள். ‘டின்னர்’ முடித்த பின்னர் ‘ஸ்லீப்.’

நாள்தோறும் இந்தச் சொற்களைப் பயன்படுத்தாமல் இங்கே எவருமில்லை. இவற்றைப் பயன்படுத்தியே தீரவேண்டிய கட்டாயம் என்ன ? யார் உங்கள் கழுத்தில் கத்தியை வைத்து ஆங்கிலத்திலேயே சொல் சொல் என்றார்கள் ? நீங்களாகவே ஏன் ஆங்கிலச் சொற்களைக் கலந்து கலந்து தமிழைப் புறந்தள்ளுகிறீர்கள் ? அவற்றால் நீங்கள் அடைகின்ற பயனென்று ஏதேனும் உண்டா ? உங்கள் தாய் தந்தையர் இப்படித்தான் பேசினார்களா ?  மார்னிங்கில் லேண்டுக்குப் போய் வாட்டர் எடுத்துவிட்டு கார்டனுக்குப் பாய்ச்சினார்களா ? இடையில் உங்களுக்கு என்னவாயிற்று ? ஆழ்ந்து எண்ணுங்கள்.

தமிழ்
இளையோர் மொழிக்களம் 28 | திருவண்ணாமலை என்ற பெயர் எப்படி வந்தது?

அன்றாடம் பயன்படுத்துகின்ற எளிய சொற்களைத் தமிழில் சொல்வதை முதலில் தொடங்குங்கள். ‘தேங்க்யூ’ என்பதனைத் தவிர்த்து ‘நன்றி’ என்று சொல்லுங்கள். ‘குட்மார்னிங், குட் ஈவினிங்’ போன்ற சொற்களைத் தவிர்த்து ‘வணக்கம்’ என்க. ‘குட்’ என்பதற்கு ‘நன்று, நல்லது’ என்று சொல்லுங்கள். ‘ரைஸ்’ என்பதனை வாய்விட்டு உரக்கச் சொல்லுங்கள் ‘சோறு’ என்று. வாட்டரைத் ‘தண்ணீர்’ என்றுதானே சொல்லிக்கொண்டிருந்தோம் ? அதனை ஏன் மறக்கவேண்டும் ? தவிர்க்கவேண்டும் ? இனியேனும் அன்றாடப் பயன்பாட்டுச் சொற்கள் அனைத்திலும் தமிழ்ச்சொற்களைத்தான் பயன்படுத்துவேன் என்று சூளுரைத்துக்கொள்க. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com