இளையோர் மொழிக்களம் 27 | ஊர்ப்பெயர்களைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள்!

கோடைக்கானல் என்று எழுதுவதை ஆங்கிலத்தில் எழுதப்பட்டபடி ‘கொடைக்கானல்’ என்றே எழுதுகிறோம், அவ்வாறே பேச்சிலும் பயன்படுத்திப் பழகிவிட்டோம்.
ஊர்ப்பெயர்கள்
ஊர்ப்பெயர்கள்புதிய தலைமுறை

பிறமொழிச் சொற்பயன்பாடுகளில் வேறுபாடு உணராவகையில் இடம்பெற்றிருப்பவை நம் ஊர்ப்பெயர்கள் ஆகும். இளையவர்கட்கு ஊர்ப்பெயர்களின் திருந்திய தமிழ்வடிவம் எவ்வளவிற்குத் தெரியும் என்பது கேள்விக்குறியே. ‘தூத்துக்குடி’ என்பது அவர்கட்கு ‘டூட்டிகொரின்’ என்றுதான் மனத்தில் பதிந்திருக்கிறது என்றால் மிகப்பெரிய தமிழ்க்கண்ணி ஏற்கெனவே அறுந்துவிட்டதைப்போல்தான் கொள்ளவேண்டும். குடி என்ற சொல் எங்கே இருக்கிறது ? கொரின் என்ற சொல் எங்கே இருக்கிறது ? இவ்விழப்பின் வேறுபாட்டினை அவர்கட்கு எவ்வாறு விளக்குவது ? அச்சொற்களின் பொருளுணர்ச்சியை மீண்டும் எவ்வாறு ஊட்டுவது ? அதனாற்றான் ஊர்ப்பெயர்கள் பிறமொழி வடிவங்களில் ஒலிக்குந்தோறும் பதறிப் பாய்ந்து திருத்துகிறோம்.

விழுப்புரம் என்னும் ஊர்ப்பெயரை ஆங்கிலத்தில் வில்லுப்புரம் என்பதைப்போல் ஒலிக்கின்றனர். எழுதுகின்றனர்.

விழுப்புரம்
விழுப்புரம்

விழு என்ற சொல் எவ்வளவு மாண்பு மிக்கது தெரியுமா ? விழு என்றால் சிறந்தது, உயர்ந்தது என்று பொருள். விழு என்பதிலிருந்துதான் விழுமியம் வருகிறது. ‘கேடில் விழுச்செல்வம் கல்வி’ என்கிறார் வள்ளுவர். அவ்வூரின் உயர்வினைக் குறிக்கும் சிறப்பு முன்னொட்டோடு விழுப்புரம் என்ற தமிழ்ச்சொல் இருக்கிறது. அதனை ஆங்கிலத்தில் வில்லுப்புரம் என்பதனைப்போல் ஆள்வது எவ்வகையில் சரியாகும் ?

ஊர்ப்பெயர்கள்
இளையோர் மொழிக்களம் | சேர சோழ பாண்டியர்களைத் தெரியும், அப்பெயர்களின் பொருள் தெரியுமா ?

கோடைக்கானல் என்று எழுதுவதை ‘கொடைக்கானல்’ என்றே எழுதவும் கூறவும் முற்பட்டுவிட்டனர்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டபடி ‘கொடைக்கானல்’ என்றே எழுதுகிறோம், அவ்வாறே பேச்சிலும் பயன்படுத்திப் பழகிவிட்டோம். எங்களுடைய பள்ளிக்காலத்தில் கொடைக்கானல் என்று தமிழில் எவரும் எழுதியதில்லை. கோடைக்கானல் என்றே எழுதுவர். இடையில் ஏற்பட்ட ஆங்கிலக் கல்வியின் செல்வாக்கினால் எல்லாரும் ‘கொடைக்கானல்’ என்றே எழுதவும் கூறவும் முற்பட்டுவிட்டனர். ‘கோடைக்கானல்’ என்ற சொல்லின் அழகிய பொருளினை யாரேனும் உணர்ந்திருந்தால் கொடைக்கானல் என்பார்களா ? கோடைக்கு நாம் தேடிச் செல்லும் மலைகளின் இளவரசியின் பெயரை மாற்றிச் சொல்லலாமா ?

திருவல்லிக்கேணி என்ற பெயரை எப்படி ஐயா ட்ரிப்ளிகேன் என்று சொல்ல முடியும் ?

திருவல்லிக்கேணி
திருவல்லிக்கேணி

அல்லி மலர்கள் புத்துப் பொலிந்த கேணி என்னும் பொருள் ட்ரிப்ளிகேனில் எங்கே தென்படுகிறது ? அதனை நாம் ஏன் அவ்வாறு சொல்ல வேண்டும் ? திருவல்லிக்கேணி என்று சொல்கின்றவர்களைத் திருவல்லிக்கேணியில்கூடக் காணமுடியவில்லையே. திரு என்ற முன்னொட்டோடு வழங்கப்படும் ஊர்ப்பெயர்கள் யாவும் நம்மவர்கள் நாவில் ஆங்கிலக் கலப்போடு படாதபாடு படுகின்றனவே. திருச்சிராப்பள்ளி ட்ரிச்சி ஆகிவிடுகிறது. திருப்பூர் ட்ரிப்பூர் ஆகிவிடுகிறது. தஞ்சாவூர் டாஞ்சூர் ஆம். திருவனந்தபுரம் எங்கே ? ட்ரிவேண்ட்ரம் எங்கே ?

ஒத்தக்கல்மந்து உதகமண்டலம் ஆகி ஊட்டி ஆனது எவ்வாறு?

உகுநீர்க்கல் ஒகேனக்கல் ஆனது, ஒத்தக்கல்மந்து உதகமண்டலம் ஆனது - எனப் பல்வேறு விளக்கங்கள் வெளியானபடியே இருக்கின்றன. கோடைக்கானல் கொடைக்கானல் ஆனதைக்கூடப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒத்தக்கல்மந்து உதகமண்டலம் ஆகி ஊட்டி ஆனது எவ்வாறு ? சிறிதும் விளங்கவில்லை. பயன்பாட்டுச் சுருக்கம் இவ்வளவிற்குப் பொருத்தமின்றியா இருக்கும் ?

ஊர்ப்பெயர்கள்
இளையோர் மொழிக்களம் 23 | 'செவன் அண்ட் ஆப் சனி’ என்று ஏன் சொல்வதில்லை ?
உதகமண்டலம்
உதகமண்டலம்

இவை யாவும் நன்கு புகழ்பெற்ற ஊர்ப்பெயர்கள். அவ்வப்பகுதியின் முதன்மையான ஊர்கள். நாடெங்கும் அறியப்பட்ட ஊர்ப்பெயர்களான இவற்றையே இவ்வாறு கண்டபடி திரித்து வழங்கிக்கொண்டுள்ளோமே. யாராலும் அறியப்படாத சிற்றூர்ப் பெயர்களில் ஏற்பட்ட திரிதல் கெடுதல் மருவல்களை நாம் எவ்வாறு இனங்காணப் போகிறோம் ? நல்ல வேளையாக அத்தகைய ஊர்ப்பெயர்கள் பல அவற்றின் அழகிய வடிவம் மாறாமல் திகழ்கின்றன.

காவிரி ஆற்றங்கரையில் இரண்டு சிற்றூர்கள் – சிறுகமணி, பெருகமணி

சிற்றூர்ப் பெயர்கள் பல தமிழ்மொழியின் தலைசிறந்த சொற்றொடர்களாக விளங்குகின்றன. இவ்வாறெல்லாம் ஊர்ப்பெயர்கள் இருக்கக்கூடுமா என்று உலகோர் வியக்கும்படியான சொற்றொடர்கள். முகவை மாவட்டத்தில் ஒரு சிற்றூர்ப் பெயர் ‘இதம்பாடல்.’ கரூர்க்கருகில் ஊரொன்றின் பெயர் ‘வானவழி.’ தெற்காகப் பாயும் காவிரி கிழக்காகத் திரும்புமிடத்தின் ஊர்ப்பெயர் ‘கொடுமுடி’, காவிரி ஆற்றங்கரையில் இரண்டு சிற்றூர்கள் – சிறுகமணி, பெருகமணி. சுற்றிலும் அழகிய நெல்வயல்கள். அவற்றிடையே புகழ்பெற்ற முருகன் கோவில். அதுதான் வயலூர். ஒரு காலத்தில் பராய் மரங்கள் நிறைந்திருந்த எழிற்காடு சூழ் ஆற்றங்கரையூர் திருப்பராய்த்துறை. என்னருகில் உள்ள ஊர்ப்பெயர்களில் தமிழ்த்தேன் சொட்டுகிறது – பெருந்துறை, ஊராட்சிக்கோட்டை, தேவூர், கொடுவாய், திங்களூர், நம்பியூர், படியூர், கோவில்வழி.

ஊர்ப்பெயர்கள்
இளையோர் மொழிக்களம் | மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டுமா ? இளையராஜா பாடல்களைக் கேளுங்கள் - 22 !
கொடுமுடி
கொடுமுடி

தமிழ்நிலத்தில் வழங்கும் ஊர்ப்பெயர்களில் மொழி வாழ்கிறது. வழக்கில் அரிதாகிவிட்ட பல சொற்களும் சொற்றொடர்களும் ஊர்ப்பெயர்களில் உயிர்த்திருக்கின்றன. ஏறத்தாழ நூற்றாயிரம் ஊர்ப்பெயர்களால் ஆனது நம் மொழிப்புலம். அந்நூற்றாயிரம் ஊர்ப்பெயர்களில் வாழும் சொற்கள் மொழியின் தலைசிறந்த சொற்கள். நாம் ஆள மறந்தாலும் எடுத்துக் கூற மறந்தாலும் அவை மண்ணின் பெயராக மாற்றமின்றி வழங்கப்படவேண்டியவை. பன்னெடுங்காலமாக நிலைத்து நின்றவை. அதனால் ஊர்ப்பெயர்களைச் சிறிதும் பிழையின்றி அவற்றின் தொல்வடிவத்தில் வழங்கவேண்டியது மொழியைக் காக்கும் செயலாகும். வெறுமனே பேருந்துப் பலகையில் இடம்பெற்றிருந்தால் போதாது, நம் ஒவ்வொருவரின் பேச்சிலும் எழுத்திலும் அச்சொற்கள் திருத்தமாய் எடுத்தாளப்பட வேண்டும். ஊர்ப்பெயரின் திருத்தமான வடிவத்தினையும் பொருளையும் உடனே அறிந்துகொள்ள முற்படவேண்டும். இயன்றவிடங்களிலெல்லாம் பிறர்க்குச் சொல்ல வேண்டும். இதனைத் தொடர்ச்சியாய் செய்து வருவோம், விளைவு சிறப்பானதாகவே இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com