இளையோர் மொழிக்களம் 28 | திருவண்ணாமலை என்ற பெயர் எப்படி வந்தது?

எழுத்தாளர், கவிஞர் மகுடேசுவரன் எழுதும் புதிய தொடர் - இளையோர் மொழிக்களம் பாகம் 28
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கோப்புப்படம்

ஊர்ப்பெயர்களும் ஆட்பெயர்களும் தமிழ்வழக்கப்படி எப்படித் திகழ்கின்றன என்று ஆராய்ந்தாலே நமக்குத் தமிழ்ப் பெயர்ச்சொற்களை எவ்வாறு பார்க்கவேண்டும் என்பது தெரிந்துவிடும். அவரவர் வாய்க்கு வந்தபடி இங்கே யாரும் பெயர்சூட்டவில்லை. அந்தப் பெயர்க்கு இயற்கை அடிப்படை ஒன்று அழகாக அமைந்திருக்கும். பொருளுடைய பெயரை நோக்கிச் செல்லுங்கால் அவர்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொடுத்த அரும்பொருளே பெயராகத் திகழும். அவ்வரும்பொருள் ஐம்பேரியற்கையில் கலந்த ஒன்று.

ஊர்ப்பெயர்கள்
ஊர்ப்பெயர்கள்புதிய தலைமுறை
திருவண்ணாமலை
இளையோர் மொழிக்களம் 27 | ஊர்ப்பெயர்களைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள்!

ஞாலத்தின் எந்தப் பகுதியில் வாழ்கின்றவர்களும் இயற்கையைப் போற்றி வணங்கி வாழ்ந்தவர்கள்தாம். இன்றைய வாழ்க்கையும் இயற்கையை ஏற்று அதன்வழிச் செல்வதுதான்.

அவர்கள் இயற்கையை விளங்கிக்கொள்ள முனைந்தபோதுதான் பிறவும் விளங்கியிருக்கும். தமிழ்மக்களுடைய வாழ்க்கையிலும் இயற்கைக்குத் தரப்பட்ட பேரிடத்தை உணரமுடியும். நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுபவை யாவும் இயற்கை வழிப்பட்ட பகுப்புகளே.

ஊர் என்பது என்ன? அவ்வூரின் உறுப்புகளான ஆள் என்பவர் யார்? இவ்விரண்டுக்கும் வழங்கப்பட்ட பெயர்களே மொழியின் தலைப்பெயர்ச்சொற்களாகின்றன. ஒரு பெயர் எவ்வாறு தோன்றுகின்றது? அந்தப் பெயர்ச்சொல்லின் தோற்றுவாய் அவ்வளவு பொருத்தமாக அமைந்தால்தான் அது பிறரால் ஏற்றுக்கொள்ளப்படும், தொடர்ந்து பயன்படுத்தப்படும். பொருத்தமே இல்லாத ஒரு பெயர்ச்சொல் அந்தப் பொருத்தப்பாடுடைய பொருளைக் கண்டடைந்துதான் நிலைக்குமே தவிர, இட்டபடியால் நிலைத்துவிடுவதில்லை.

ஊர் பெயர் காரணங்கள்
ஊர் பெயர் காரணங்கள்

ஆத்தூர், குளத்தூர், மேட்டூர், பள்ளத்தூர், மலையூர், ஏரியூர், பழையூர், புத்தூர், குன்றத்தூர், மேலூர், கீழூர், கடலூர் என்று ஊர்ப்பெயர்கள் இருப்பதாகக் கொள்வோம். இப்பெயர்களை நான் எனக்குத் தெரிந்த பெயர்ச்சொற்களைக்கொண்டு எழுதியிருக்கிறேன்.

ஆறு, குளம், மேடு, பள்ளம், மலை, ஏரி, பழைமை, புதுமை, குன்று, மேல், கீழ், கடல் ஆகிய தமிழ்ச் சொற்களோடு ஊர் என்று சேர்த்திருக்கிறேன். குளம் என்ற பெயரோடு ஊர் சேர்த்தால் குளமூர் என்று வராதா ?

தமிழ் இலக்கணப்படி அவ்வாறு சேர்ப்பதில்லை. ம் என்ற மெய்யில் முடியும் பெயர்ச்சொல்லோடு அத்துச் சாரியையை இடையிட்டே அடுத்த சொல்லைச் சேர்ப்பார்கள். அதன்படி தோன்றியவைதாம் குளம் அத்து ஊர் = குளத்தூர். அவ்வாறே பள்ளத்தூர், குன்றத்தூர்.

குன்றத்தூர்
குன்றத்தூர்

மேற்சொன்ன பெயர்களில் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான ஊர்களேனும் இருக்கின்றன என்று துணிந்தும் கூறுகின்றேன். அது உண்மைதானே ? இப்பெயர்களில் எவ்வூரும் இல்லையென்று சொல்ல முடியுமா ? இன்னும் சொல்லப்போனால் உங்கள் ஒவ்வொருவர்க்கும் இப்பெயரில் உள்ள ஊர்களைத் தெரியும். உங்கள் ஊரும் இப்பெயரில் இருக்கலாம். அவ்வளவு நெருக்கமுடைய நெடுவழக்குப் பெயர்கள் இவை. பழைமை ஊர், புதுமை ஊர் ஆகியன பண்புத் தொகைப் புணர்ச்சியின்படி பழையூர், புத்தூர் என்று ஆவதைப்போல அவை ஆட்பெயர் விகுதி பெற்று பழையன், புத்தன் என்றும் ஆகும். இவையாவும் மொழிக்கண் புதைந்திருக்கும் வியத்தகு உட்செய்திகள்.

திருவண்ணாமலை
இளையோர் மொழிக்களம் பகுதி 19 - செம்மி ஜிம்மி ஆனது எப்படி?

ஓர் இயற்கைப் பெயர் மொழியில் என்னவாறு இருக்கிறதோ அதனை அடியொற்றி அடுத்தடுத்த பிற சொற்கள் தோன்றும். இயற்கையின் பெருங்கொடைகள் ஆறும் மலையும். தமிழ்நாட்டின் இருபெரும் நிலப்பிரிவுகள் நிலமும் மலையும். ஆறோடும் நிலத்தூர்கள் ஆற்றூர்கள் ஆகும். ஆற்றூர் என்பதுதான் பேச்சுவழக்கில் ஆத்தூர் ஆகிவிட்டது. மலையில் அமைந்த, அல்லது மலைக்கு அருகமைந்த ஊர்கள் மலையூர்கள் ஆகும். ஆறு என்பதற்கு முன்னதாக ஏதேனும் முன்னொட்டு சேர்ந்தது என்று வைத்துக்கொள்வோம்.

ஆத்தூர்
ஆத்தூர்
திருவண்ணாமலை
இளையோர் மொழிக்களம் 27 | ஊர்ப்பெயர்களைத் தொடர்ந்து பயன்படுத்துங்கள்!

எடுத்துக்காட்டாக, சிறிய ஆறு / பெரிய ஆறு / கல் ஆறு என்னும் பொருளில் சிறிய, பெரிய, கல் போன்ற முன்னொட்டுகள் சேர்வதாகக்கொள்வோம். அவ்வூர்ப்பெயர்கள் என்ன ஆகும் ? சிற்றாற்றூர், பேராற்றூர், கல்லாற்றூர் என்று ஆகும். இப்போது சுருக்கம் கருதுகிறோம். அதனால் ஊர் என்னும் சொல் இடம்பெற்றேயாகவேண்டும் என்ற கட்டாயமில்லை. சித்தாறு, சின்னாறு, பேராறு, பெரியாறு, கல்லாறு என்று ஊர்ப்பெயர்கள் அமையும். அத்தொடர்கள் ஆற்றுக்கும் பெயராகும். ஊருக்கும் பெயராகும்.

மலை என்பதற்கு முன்னால் இன்னொரு சிறப்பான முன்னொட்டு அமைகிறது என்று கொள்வோம். மலையூர் ஒன்றிற்குச் சிறப்பு முன்னொட்டு அமைந்துவிட்டது.
அதனைத் திருவண்ணாமலையூர் என்று வழங்க வேண்டியதில்லை. ஊர் என்னும் ஈற்றொட்டு நீங்கிக்கொள்ளலாம். இப்போது திருவண்ணாமலை வந்துவிட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை

ஆறு என்று முடிகின்ற ஆயிரம் ஊர்ப்பெயர்களைக் கூறலாம். மலை என்று முடிகின்ற ஆயிரம் ஊர்பெயர்களையும் காணலாம். இங்ஙனம் தோன்றியவையே நம் ஊர்ப்பெயர்கள்.

ஓர் ஊரைச் சுற்றியுள்ள பிற ஊர்களை அறிந்தும் புழங்கியும் வாழ்வதாகத்தான் அன்றைய வாழ்நிலை அமைந்திருக்கும். வயல்கள் அமைந்த ஊரில் ஒருவர் வாழ்வதாகக்கொள்வோம். அவருடைய ஊர்ப்பெயர் வயலூர்தான். அந்த வயலில் நெல் மிகுந்து விளைந்தால் அது நெல்லூராக இருக்கும். நெல் இல்லை, வரகுதான் அங்கே நல்ல விளைச்சல் என்றால் அது வரகூர். நெல்லும் இல்லை, வரகும் இல்லை. வாழைதான் விளைகிறது என்றால் வாழையூர்.

நெல்லூர்
நெல்லூர்

வாழை மட்டுமா, அங்கே தாழம்பூக்கள் பூத்து மணக்கின்றன எனில் அது தாழையூர். அங்கே ஓர் ஆலை இருக்கிறது, இருந்தது எனில் அது ஆலையூர். ஓர் ஊர்க்கு மேற்கே மலையருகே இன்னோர் ஊர் இருந்தால் அது மலையூர். இன்னொரு புறம் ஆறோடும் ஊர் எனில் அது ஆற்றூர். இப்போது வயலூரார் தம்மைச் சுற்றியுள்ள அனைத்து ஊர்களையும் அவ்வவற்றின் இயற்கையோடு அழைக்கின்றார்.

திருவண்ணாமலை
இளையோர் மொழிக்களம் 23 | 'செவன் அண்ட் ஆப் சனி’ என்று ஏன் சொல்வதில்லை ?

மலை இல்லாத ஊரினை அவர் ஒருபோதும் மலையூர் எனமாட்டார். ஆறில்லாத ஊரினையும் ஆற்றூர் என்பதுமில்லை. அவர் நினைவில் தங்குவதற்கு இயற்கை உடனிருக்கவேண்டும். ஓர் ஊர்ப்பெயர் அதன் இயற்கைப்பொருளோடு தொடர்புற்று நிலைப்பதற்கு பிறவூராரின் ஏற்பும் நினைப்பும் உடன்பட்டன. அதன் பிறகு மாற்றமுடியாதபடி நிலைத்தன.

போகிற போக்கில் ஓர் ஊர்ப்பெயரைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நமக்கு அப்பெயர் தோன்றி வழங்கி நிலைத்ததன் அருமை தெரிந்துவிட்டால் போதும். அப்பெயரை எப்போதும் பிழையாகப் பயன்படுத்தமாட்டோம். அதன் பொருளுணர்ந்து போற்றுவோம். அப்பெயர்களின் வழியே மொழியின் செம்மாந்த தோற்றம் காண்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com