"அம்பேத்கர் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது" - அமித்ஷா வைத்த விமர்சனம்.. எகிறும் எதிர்ப்பு!
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா நேற்றைய தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. 269 வாக்குகள் பெற்றதால், இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ”இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு பகவானின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் மகிழ்ச்சிதான். ஆனால் அவரின் உண்மையான உணர்வுகள் குறித்தும் அக்கட்சி பேச வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. எதிர்க்கட்சியினர், அமித்ஷா மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,`` மனுஸ்மிருதியை நம்புபவர்கள் அம்பேத்கருடன் முரண்படுவதில் கண்டிப்பாக ஆச்சர்யமில்லை" என எழுதியிருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பதிவில், “உள்துறை அமைச்சர் அம்பேத்கரை அவமதித்ததன் மூலம், ‘பாஜக - ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானவர்கள். அவர்களின் முன்னோர்கள் அசோக சக்ராவை எதிர்த்தார்கள்’ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களுக்கு, அம்பேத்கர் கடவுளைவிடவும் குறைவானவர் இல்லை. தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஏழைகளின் தூதுவர் அம்பேத்கர் என்பதை பிரதமர் நரேந்திர மோடி அரசின் அமைச்சர்கள் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “இந்தக் கருத்துகள் மிகவும் அருவருப்பானவை. அம்பேத்கர் மீது பாஜக - ஆர்எஸ்எஸ் கொண்டுள்ள வெறுப்பை இது காட்டுகிறது. மக்கள் அவர்களுக்கு பாடம் கற்பித்துவிட்டதால், தற்போது அம்பேத்கர் பெயரைக் கூறுபவர்கள் மீது எரிச்சல் அடைந்துள்ளனர். இது வெட்கக்கேடானது. இதற்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், “எச்.எம். அமித் ஷா, உங்களுக்குத் தெரியாவிட்டால் சொல்கிறோம். பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் கடவுளுக்குச் சமமானவர். அவர் உருவாக்கிய அரசியலமைப்பு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் புனித நூலாகும். டாக்டர் அம்பேத்கரைப் பற்றி இவ்வளவு கேவலமாகப் பேச உங்களுக்கு எவ்வளவு தைரியம்? டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மீதான பா.ஜ.க-வின் வெறுப்பு எப்போதுமே நன்கு அறியப்பட்டதாகும்.
இன்று ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சரின் பரிதாபகரமான அறிக்கையானது, அவர் டாக்டர் அம்பேத்கரை எவ்வளவு வெறுக்கிறார் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது. சாதிவெறி கொண்ட ஆர்.எஸ்.எஸ், அவர்களின் மனுஸ்மிருதியால் முன்வைக்கப்பட்ட கொடூரமான கருத்துக்களை நிராகரித்த அம்பேத்கரை மனுஸ்மிருதியை வழிபடுபவர்கள் எப்போதும் தூற்றுவார்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.