MGR
MGRpt web

1984 தேர்தல் | திருப்புமுனையான வலம்புரிஜான் வீடியோ.. அமெரிக்காவில் படுத்துக் கொண்டே ஆண்டிப்பட்டியில் வென்ற MGR..!

இன்றும் அரசியல் களத்தில் பேசுபொருளாகவே இருக்கிறார் எம்ஜிஆர். அவரைத் தவிர்த்து தமிழ்நாட்டு அரசியலை எழுத முடியாது, அவரை உச்சரிக்காமல் யாரும் கட்சியைத் தொடங்க முடியாது.
Published on

மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன். சுருக்கமாக எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு வாத்தியார், இதயக்கனி. தொண்டர்களுக்கு புரட்சித் தலைவர்.. எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பார். உதாரணத்திற்கு, ஒரு சம்பவத்தைச் சொல்லலாம். 1977 சட்டமன்ற தேர்தல் நேரம். அறந்தாங்கி தொகுதியா அல்லது அருப்புக்கோட்டை தொகுதியா என அதிகமான காலம் யோசித்து முடிவில் அருப்புக்கோட்டை தொகுதியில் நிற்க எம்ஜிஆர் முடிவு செய்திருந்தார். வேட்புமனு தாக்கல் செய்ய புறப்படுவதற்கு முன் மதுரை மேம்பாலம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு எம்ஜிஆர் மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிலை மிக உயரம்.. இன்று இருப்பதுபோன்று வசதியாக, படிகளில் ஏறிச்சென்றெல்லாம் மாலை அணிவிக்க முடியாது. சிலையின் அருகே நிற்பதே சிரமமான காரியம். எனவே, கட்சியினர் ஒரு முடிவு செய்திருந்தனர். எம்ஜிஆர் கீழே இருந்து மாலையைத் தொட்டுக் கொடுத்தால் தொண்டர்கள் மேலே ஏறி மாலை அணிவிப்பார்கள். எம்ஜிஆர் இதை ஏற்கவில்லை. சிலையையும், கொண்டுவரப்பட்ட ஏணியையும் பார்வையிட்ட எம்ஜிஆர் உடனடியாக அதில் ஏறிவிட்டார். கூட்டத்தில் பதற்றம். கொஞ்சம் தவறினாலும் என்ன ஆவது? ஆனால், சரியாக மாலை அண்ணா சிலையின் கழுத்தில் விழுந்தது. எம்ஜிஆரை இப்படித்தான் தொண்டர்கள் பார்த்து இருக்கிறார்கள்.

எம்ஜிஆர்
எம்ஜிஆர்pt web

ஆனால், 1984 ல் நிலைமை சரியில்லை. அந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு வீடு திரும்பிய எம்ஜிஆருக்கு மயக்கம். அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பும் மயக்கம் வருவதுபோல் இருந்தது. அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தினர். ஆனால், இம்முறை அப்படியல்ல. மிகத்தீவிரமான உடல்நலப் பிரச்னை. ஆனால், வெளியில் சிறு தகவலும் கசியவில்லை. எம்ஜிஆர் வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்வுக்கு அவரால் செல்ல முடியவில்லை. இதனையடுத்தே கட்சிக்காரர்களுக்குக்கூட விஷயம் தெரிந்தது.

MGR
பெரியார் மீது எல்லை மீறும் அவதூறுகள்.. தீவிரமாக கற்பிக்க தவறுகிறதா திராவிட இயக்கங்கள்?

முதலமைச்சர் எம்ஜிஆர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த தகவல் தீயாகப் பரவியது. அவர் உடல் நலம் தேற வேண்டி தமிழ்நாட்டில் பல இடங்களில் கூட்டுப் பிராத்தனைகள் செய்யப்பட்டன. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மருத்துவமனைக்கு வந்து எம்ஜிஆரைப் பார்த்தார். அமைச்சர்கள் பலர் சென்று பார்த்தனர். ஆனால், கட்சிக்குள் இருந்த கோஷ்டிபூசல் காரணமாக ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் எம்ஜிஆரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.

சட்டபேரவைக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த நேரம் என்பதால் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் முதலமைச்சர் உடல்நிலை குறித்து கேள்விகளை எழுப்பின. இது தொடர்பான செய்திகள் இதழ்களில் வெளியானதும் வெளி மாவட்டங்களில் இருந்தெல்லாம் மக்கள் சாரைசாரையாக சென்னைக்கு வரத்தொடங்கினர்.

எம்.ஜி.ஆர் உடல் நலம் தேற வேண்டி தமிழ்நாட்டில் பல இடங்களில் கூட்டுப் பிராத்தனைகள் செய்யப்பட்டன. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மருத்துவமனைக்கு வந்து எம்ஜிஆரைப் பார்த்தார்.
எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி
எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி

இதற்கிடையில் அதிகம் பேசுபொருளானது திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி எழுதிய கடிதம். எம்ஜிஆர் மற்றும் கலைஞர் கருணாநிதி என இருவரும் அரசியல் ரீதியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டார்கள். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இருவரும் எதிரிகள் போன்று சித்தரிக்கப்படுவதற்கு மாறாகத்தான் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கு உதாரணம்தான் அந்தக் கடிதம். 'நானும் பிராத்தனை செய்கிறேன்' என்று கூறிய கலைஞர், “பன்னிரண்டு ஆண்டுப் பகையை நாற்பதாண்டு கால நட்பு பனிக்கட்டி போலக் கரைந்துவிட்டதற்கு அடையாளம் உங்கள் நோய் பற்றி கேள்விப்பட்டவுடன் என் கண்கள் அருவிகள் ஆனதுதான்" என்று எழுதியிருந்தார். அரசியல் விமர்சனங்களைத் தாண்டி எப்போதும் எம்ஜிஆரை நண்பர் என்றே அழைத்துப் பழகியவர் கலைஞர் என்பதால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், அந்த அரசியல் நாகரீகம், தனிப்பட்ட வாழ்க்கைக்கு இருவரும் கொடுத்துக்கொண்ட மரியாதை என்பது தற்போதைய அரசியலில் எதிர்பார்க்க முடியாத ஒன்று.

சரி, மருத்துவமனைக்கு வருவோம். திடீரென எம்ஜிஆரின் உடல்நிலை மேலும் மோசமடைய மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். எம்ஜிஆர் அமெரிக்கா செல்லும் முன் ஆட்சி நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. தற்காலிக முதலமைச்சராக நெடுஞ்செழியன் நியமிக்கப்பட்டார். எம்ஜிஆரின் துணைவியார் ஜானகியும், அமைச்சர்கள் சிலரும் அவருடன் அமெரிக்கா சென்றனர். எம்ஜிஆர் உடல்நிலை குறித்தும், அவர் உயிருடன்தான் இருக்கிறாரா என்பது குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால், அவருக்கான சிகிச்சைகள் தீவிரமாக நடந்தன.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

இந்த சமயத்தில் இந்தியாவெங்கும் பரபரப்பு. பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். பின் பிரதமராகப் பதவியேற்ற ராஜீவ் காந்தி, இந்திரா காந்தியின் அனுதாப அலையைப் பயன்படுத்தி தேர்தலைச் சந்திக்கத் தயாராக இருந்தார். அதேபோல் தமிழ்நாட்டிலும் எம்ஜிஆருக்கு ஆதரவான அலை வீசிக்கொண்டிருந்தது. இதைப் பயன்படுத்த நினைத்தது அதிமுக அமைச்சரவை. சட்டமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலுக்குத் தயாராகினர். இரண்டு அனுதாப அலையையும் சேர்ந்து அறுவடை செய்ய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன.

எம்ஜிஆர் உடல்நிலை குறித்தும், அவர் உயிருடன்தான் இருக்கிறாரா என்பது குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால், அவருக்கான சிகிச்சைகள் தீவிரமாக நடந்தன.
MGR
தமிழ்நாட்டு மக்களும் அரசியல் மயமும்.. எப்படி நிகழ்ந்தது?

தேர்தலும் வந்தது. பரப்புரை முதல் அனைத்தையும் மேற்பார்வை செய்தார் ஆர்.எம். வீரப்பன். ஆதரவாளர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் பம்பரமாக பரப்புரையில் ஈடுபட்டார் ஜெயலலிதா. மூன்று வார சுற்றுப்பயணம்.. 570 பொதுக்கூட்டங்கள். சூறாவளியாகச் சுழன்றார். ஆர். எம். வீ தரப்பு இதை நீர்த்துப்போக செய்ய நினைத்தது. தனது கலையுலக வாரிசு என்று எம்ஜிஆரால் அறிவிக்கப்பட்ட பாக்யராஜ் களமிறக்கப்பட்டார். பாக்யராஜூம் அமெரிக்கா சென்று ஜானகி எம்ஜிஆரிடம் ஆசிபெற்று பரப்புரையில் ஈடுபட்டார். அமெரிக்க மருத்துவமனையில் எம்ஜிஆர்.

அமெரிக்க மருத்துவமனையில் எம்ஜிஆர்
அமெரிக்க மருத்துவமனையில் எம்ஜிஆர்

அமெரிக்காவின் ப்ரூக்ளின் மருத்துவமனையில் இருந்துகொண்டே ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். எம்ஜிஆர் கையெழுத்திட்ட வேட்புமனுவை அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்தார் அமைச்சர் ஹண்டே. அவருக்கு நடத்தப்பட்ட மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சையும் வெற்றியடைந்தது. வதந்திகளும் மறுமுனையில் பரவிக்கொண்டே இருந்தது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தேர்தலுக்கான அஸ்திவாரமாகவும் அதிமுகவினர் ஒரு வியூகத்தைக் கையிலெடுத்தனர். அதாவது, எம்ஜிஆர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் காட்சிகள் வலம்புரி ஜான் வர்ணனையுடன் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாட்டில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

எம்ஜிஆருக்கு அருகே ஜானகி ராமச்சந்திரனும் இருந்தார். “தேறி வரும் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தெம்பினைப் பார்த்து அமெரிக்க மருத்துவர்களே ஆச்சரியப்படுகிறார்கள். 20 நாட்களில் இமாலய சுகம் பெற்று எழுந்து நடந்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான் என்று எல்லோருமே வியக்கின்றார்கள்” என்று வலம்புரிஜான் வர்ணனையில் வெளியானது வீடியோ.

“நினைவே இல்லை என்றார்கள். அவரோ நம்மைப் பற்றிய நினைவில் நிமிர்ந்து உட்கார்ந்து இருக்கிறார். எழுந்திருக்கவே இல்லை என்றார்கள். அவரோ எழுச்சியோடு உட்கார்ந்து இருக்கிறார்” என்று தமிழ்நாட்டில் பரவிய வதந்திகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில் வெளியானது வீடியோ. தேர்தல் பரப்புரையை இந்த வீடியோ பார்த்துக்கொண்டது.

MGR
1967 ஓர் பார்வை | காமராஜர் மட்டும் அந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால்.. உடைக்க முடியாத வியூகம் அமைத்த அண்ணா!!
“நினைவே இல்லை என்றார்கள். அவரோ நம்மைப் பற்றிய நினைவில் நிமிர்ந்து உட்கார்ந்து இருக்கிறார். எழுந்திருக்கவே இல்லை என்றார்கள். அவரோ எழுச்சியோடு உட்கார்ந்து இருக்கிறார்”

ஒருபுறம் இந்திரா காந்தி படுகொலை.. மறுபக்கம் மருத்துவமனையில் எம்ஜிஆர். யாரை எதிர்த்து பேசுவது.. எந்தக் கட்சியை விமர்சிப்பது. விக்கித்து நின்றனர் திமுகவினர். தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. அதிமுக காங்கிரஸ் கூட்டணி 195 இடங்களில் வென்றது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 132 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றிருந்தது அதிமுக. 167 இடங்களில் போட்டியிட்ட திமுக 24 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றிருந்தார். அதுவும் எப்படி? அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்துகொண்டே. இதைத்தான் படுத்துக்கொண்டே ஜெயித்தவர் எம்ஜிஆர் என்று அதிமுவினர் கூறுவது வழக்கம். ஆனால், பதவியேற்பு விழா நடத்துவதற்கு தாமதமானது. பிப்ரவரி 4 1985 அன்று தமிழ்நாடு திரும்பினார் எம்ஜிஆர். 10பிப்ரவரி  1985 அன்று தமிழ்நாட்டு முதலமைச்சராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றார்.

ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்ஜிஆர் வெற்றி பெற்றிருந்தார். அதுவும் எப்படி? அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்துகொண்டே. இதைத்தான் படுத்துக்கொண்டே ஜெயித்தவர் எம்ஜிஆர் என்று அதிமுவினர் கூறுவது வழக்கம்.
மருத்துவமனையில் எம்ஜிஆர்
மருத்துவமனையில் எம்ஜிஆர்

பழையபடி உற்சாகமாகவோ திடமாகவோ செயல்படமுடியவில்லை. முகத்தில் களைப்பு தெரிந்தது. உடலில் தொய்வு தெரிந்தது. யாரிடமும் பேசமுடியவில்லை. இருந்தும் செயல்பட்டார். 21 டிசம்பர் 1987 அன்று மறைந்த பிரதமர் நேருவுக்கு கத்திப்பாரா சந்திப்பில் சிலை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் ராஜீவ் காந்தி வேறு வருவதாக இருந்தது. உடல்நிலை சரியில்லாதபோதும் எம்ஜிஆர் கலந்துகொண்டார். ராஜீவும் எம்ஜிஆரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அப்போது துணை முதலமைச்சர் பதவியை உருவாக்கி அதில் ஜெயலலிதாவை நியமித்துவிட்டு நீங்கள் ஓய்வெடுக்கலாமே என்று கேட்டதாகவும் அதற்கு எம்ஜிஆர் சிறு புன்னகை ஒன்றை பதிலாக கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார் என்றும் தகவல். வேறு யாரேனும் அதைச் சொல்லியிருந்தால் நடந்திருப்பதே வேறு என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஆனால், தனக்கு பின் யார் என்று எம்ஜிஆர் முடிவெடுப்பதற்குள்தான் அந்த சம்பவம் நடந்தது.

ராஜீவும் எம்ஜிஆரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அப்போது துணை முதலமைச்சர் பதவியை உருவாக்கி அதில் ஜெயலலிதாவை நியமித்துவிட்டு நீங்கள் ஓய்வெடுக்கலாமே என்று கேட்டதாகவும் அதற்கு எம்ஜிஆர் சிறு புன்னகை ஒன்றை பதிலாக கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார் என்றும் தகவல்.

24.12.1987 எம்ஜிஆர் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி விடியற்காலையிலேயே மக்கள் தலையில் இடியாய் இறங்கியது. கலைஞர் கருணாநிதி நிகழ்ச்சி ஒன்றை முடித்துக்கொண்டு அன்று அதிகாலை சென்னைக்கு வந்தார். ஆர்க்காடு வீராச்சாமி, டி.ஆர்.பாலு இருவரும் நேரடியாக ரயில் நிலையத்திற்கே வந்திருந்தனர். ஏதோ விபரீதம் என்பது திமுக தலைவர் கருணாநிதிக்கு புரிந்தது. விஷயம் சொல்லப்பட்டது. நேரடியாக எம்ஜிஆர் வீட்டுக்கு சென்றார். முன்னாள் அமைச்சர் மாதவன் கருணாநிதியை உள்ளே அழைத்து சென்றார். ஒருவேளை அப்போது எம்ஜிஆரைப் பார்க்க செல்லாமல் இருந்திருந்தால் அவரால் எம்ஜிஆரின் முகத்தை கடைசியில் பார்க்க முடியாமலேயே போயிருக்கக்கூடும்.

எம்ஜிஆர்
எம்ஜிஆர்

அண்ணா சாலையில் இருக்கும் கருணாநிதியின் சிலை எப்போதும் அதிமுகவினரால் தாக்குதலுக்கு உள்ளாகும். அது அன்றும் நடந்தது. சிலையை உடைக்க முயன்றனர். லாரி டயரில் தீயிட்டு அதை சிலையின்மீது மாட்டி அதை உருக்கினார்கள். இதையும் தாண்டி அதிமுகவினரின் செயல்பாடுகளுக்கு எந்தவிதமான எதிர்வினையும் கூடாது என்று தனது தொண்டர்களுக்கு கடிதமும் எழுதினார்.

ராமாவரம் தோட்டத்தில் இருந்து எம்ஜி ஆரின் உடல் ராஜாஜி மண்டபத்திற்குக் கொண்டுவரப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். தகவல் அறிந்து பிரதமர் ராஜீவ் காந்தி, குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், துணை குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா போன்றோர் தனி விமானங்களில் சென்னை வந்தனர். குறிப்பு: இதற்கு 2 தினங்களுக்கு முன்புதான் ராஜீவ் காந்தி நேரு சிலை திறப்புக்கு சென்னை வந்திருந்தார்.

அண்ணா சாலையில் இருக்கும் கருணாநிதியின் சிலை எப்போதும் அதிமுகவினரால் தாக்குதலுக்கு உள்ளாகும். அது அன்றும் நடந்தது. சிலையை உடைக்க முயன்றனர்.

பிற மாநில முதலமைச்சர்கள், இந்திய திரையுலகினர், தேசத்தின் மூத்த தலைவர் என பலரும் சென்னை வந்தனர். சென்னை நகரமே துக்கத்தில் இருந்தது. காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் மோதல் வேறு நிகழ்ந்தது,.

எம்ஜிஆர் தலைமாட்டில் சோகமாக நின்றிருந்தார் ஜெயலலிதா. காவல்துறை அதிகாரிகள் ஓய்வெடுக்கச் சொல்லியும் அவர் கேட்கவில்லை. இறுதி ஊர்வலம் கிளம்பும்போது நடிகர் தீபன் என்பவரால் தாக்கப்பட்டார் ஜெயலலிதா. எம்ஜிஆரின் உடல் இறுதி ஊர்வலத்திற்குத் தயாரானது. மெரினாவில் உடலை இறக்கும்போது சுற்றியிருந்த மக்கள் கூட்டம் ஒருசேர முன்வந்தது. காவல்துறையினர் தடுத்தும் முடியவில்லை, துப்பாக்கிச்சூடும் நடத்த வேண்டியிருந்தது.

எம்ஜிஆரின் இறுதி நிமிடங்கள். அருகில் ஜெயலலிதா
எம்ஜிஆரின் இறுதி நிமிடங்கள். அருகில் ஜெயலலிதா

மாலை 4 மணியளவில் எம்ஜிஆரின் உடல் அவரது பிரத்யேக வாட்ச், கண்ணாடி, தொப்பி போன்றவற்றுடன் சந்தனப்பேழைக்குள் வைக்கப்பட்டு குழிக்குள் இறக்கப்பட்டது. பின் சலவைக் கற்களால் மூடப்பட்டது. எம்ஜிஆர் மறைந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்டன. இன்றும் அரசியல் களத்தில் பேசுபொருளாகவே இருக்கிறார் எம்ஜிஆர். அவரைத் தவிர்த்து தமிழ்நாட்டு அரசியலை எழுத முடியாது, அவரை உச்சரிக்காமல் யாரும் கட்சியைத் தொடங்க முடியாது.. உயிருடன் இருந்தவரை அவரே முதலமைச்சராக இருந்தார். மறைந்த பின், பொன்மனச்செம்மலாக தொண்டர்கள் மனதில் நிறைந்திருக்கிறார். இன்று புதிதாக கட்சி தொடங்குவோரும் அவரை சொந்தம் கொண்டாடும் அளவுக்கான தொண்டர் பலத்தை கொண்டிருக்கிறார் எம்ஜிஆர்.

MGR
PT EXCLUSIVE : தேர்தல்கள் கேலிக்கூத்துகளா? ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லாமல் போவது ஏன்?

உதவிய புத்தகங்கள்

1. அதிர்ந்தது பூமி - எம்.பி. உதயசூரியன் புதிய தலைமுறை வெளியீடு

2. தமிழக அரசியல் வரலாறு பாகம் 2 - ஆர். முத்துக்குமார் கிழக்கு பதிப்பகம்

3. அதிமுக எம்ஜிஆர் முதல் ஜெஜெ வரை - ஆர். முத்துக்குமார் கிண்டில் மின்னூல்

4. ஜெயலலிதா அம்மு முதல் அம்மா வரை - ஜெ.ராம்கி - கிழக்கு பதிப்பகம்

5. இருவர் எம்ஜிஆர் vs கருணாநிதி - குகன் மின்னூல்

6. மக்கள் மனதில் எம்ஜிஆர் - எஸ்.எஸ். ராமகிருஷ்ணன் மின்னூல்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com