அதிகரிக்கும் மினி மேகவெடிப்புகள்.. ஒரு பக்கம் வறட்சி மறுபக்கம் வெள்ளம்.. தமிழகத்தின் நிலை என்ன?
செப்டம்பர் மாதத்தில் இந்தியா முழுவதும் வழக்கத்தைவிட அதிக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 5% அதிகம் மழை பொழிந்த நிலையில், செப்டம்பர் மாதம் சராசரியாக 109% மழைப்பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆகஸ்ட் மாதத்தில் வடமேற்கு இந்தியாவில், 265மிமீ மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது. இது 2001ஆம் ஆண்டுக்குப் பின் அதிகபட்ச மழைப்பொழிவாகவும், 1901ஆம் ஆண்டுக்குப் பிறகு 13ஆவது அதிகபட்சமாகவும் பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு நாடு முழுவதிலும் பருவமழை இயல்பை விட அதிகமாகப் பொழிந்துள்ளது. ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலக்கட்டத்தில் நாட்டில் 743.1 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது நீண்ட கால சராசரியைவிட 6% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூன் மாதத்தில் 111 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ள நிலையில், இது இயல்பை விட 42% அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜூலை மாதத்தில் 237.4 மி.மீ அல்லது இயல்பை விட 13% அதிகம் மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட கால சராசரி என்பது கடந்த 50 ஆண்டுகளில் நான்கு மாதகால பருவமழை சராசரியின் அளவீடு ஆகும். இந்த அதிகபட்ச மழை நாட்டின் பல பகுதிகளில் இயற்கை பேரிடர்களுக்கு வழிவகுத்திருக்கிறது.
இந்த கனமழைப் போக்கு செப்டம்பர் மாதத்திலும் தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு வட இந்தியா, மத்திய இந்தியா மற்றும் கங்கைச் சமவெளிப்பகுதிகளில் பரவலான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்கள், தென்னிந்தியாவின் தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளைத் தவிர நாட்டின் மற்ற பகுதிகள் அனைத்தும் கடந்த 50 ஆண்டுகளின் சராசரியை விட 109% அதிக மழை பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிகமான மழைப்பொழிவு இருந்தாலும், மழைப்பொழிவின் அளவுகள் கடந்த மே மாதத்தில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னறிவுப்புகளுடன் பொருந்துவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
குறிப்பாக, மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், கடந்த 35 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவு மழைப்பதிவாகி உள்ளது. கடந்த மாதம் மொத்தமாக 118 சென்டி மீட்டர் மழைப் பதிவானது. இதில், ஆகஸ்ட் 15 முதல் 19 வரையிலான நாட்களில் மட்டும், 82 சென்டி மீட்டர் மழைப் பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 124 செண்டி மீட்டர் மழைப் பதிவான நிலையில், தற்போது அதற்கு அடுத்த அதிக அளவாக 118 சென்டி மீட்டர் மழை பொழிந்துள்ளது.
இந்த அதிகமழைப் பொழிவு விவசாயத்திற்கும் நீர் ஆதாரங்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளன. குறிப்பாக சாதாரண அளவை விட அதிக மழைபொழிவு இருந்தால், செப்டம்பர் மாதத்தில் அறுவடை செய்யப்படும் நெல், பருத்தி, சோயாபீன், சோளம், பருப்பு வகைகள் போன்ற பயிர்களுக்கு சேதம் ஏற்படக்கூடும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் அதிகார அமைப்புகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரனிடம் புதிய தலைமுறையின் இணையதளம் சார்பாக சில கேள்விகளை முன்வைத்தோம்.
இந்திய வானிலை ஆய்வு மையம் செப்டம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு இயல்பைவிட அதிகமான மழை பெய்யும் என்று தெரிவித்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டுக்கான மழைப்பொழிவு எப்படியிருக்கும்?
தமிழகத்தை பொருத்த வரையில், வட தமிழகதிற்கு இயல்புக்கு அதிகமான மழையும் தென் தமிழகத்திற்கு இயல்புக்கு குறைவான மழையும் பதிவாகும். இதில் ஒட்டுமொத்த தமிழகத்தை பார்த்தால் இயல்பை விட சற்று குறைவாகதான் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர் , திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி இந்த மாவட்டங்களில் மழையின் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும். தென் மாவட்டங்களில் இயல்பை விட மழையின் அளவு சற்று குறைவாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே வெப்பநிலையின் அளவு இந்த செப்டம்பரில் குறைவாக இருக்கும். வெப்ப அலையின் தாக்கம் எதுவும் இருக்காது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதேனும் இருக்கிறதா?
தனியாக மீனவர்களுக்கு என்றோ குறிப்பிட்ட மாவட்டங்களுக்கென்றோ என்று எந்தவிதமான எச்சரிக்கையும் விடுக்கவில்லை. இதில் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே தென்மேற்கு பருவமழை இயல்பை விட சற்று அதிகமாக இருக்கும். அதாவது இயல்புநிலை என்றால் 100% எப்போதும் மழை பதிவாகும். ஆனால் இந்த வருடம் 109% பதிவாகும். இதில் ஒட்டுமொத்த தமிழகம் என்று எடுத்துக்கொண்டால் சற்று குறைவாக மழை பதிவாகும். ஆனால் வட தமிழகத்திற்கு அதிகமாகவும், தென் தமிழகத்திற்கு இயல்பை விட சற்று குறைவாகவும் இருக்கும்.
மினி மேக வெடிப்பு என்றால் என்ன? அதை ஏன் முன்கூட்டியே கணிக்க முடியாது?
மேக வெடிப்பு என்பது, குறைந்த பரப்பளவில் சுமார் 20-30 சதுர கிலோமீட்டர் பகுதிகளுக்குள் திடீரென அதிகமாக மழை பெய்வது. குறுகிய நேரத்தில் (ஒரு மணி நேரத்திற்குள்) மிக அதிக அளவில் மழை பெய்யும் ஒரு தீவிர வானிலை நிகழ்வு ஆகும். வரையறையின்படி, ஒரு மணி நேரத்தில் 100 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட மழைப்பொழிவு ஏற்பட்டால் அது மேக வெடிப்பு எனப்படும். அதில் 50 மிமீ.. அதாவது 5 செமீ மழை பதிவானால் அது மினி மேக வெடிப்பு ஆகும்.
மேகங்கள் உருவாகி நகராமல் ஒரே இடத்தில் குவிந்து குறுகிய காலத்தில் அதிக மழைப்பொழிவை ஏற்படுத்தும். மேக வெடிப்பு என்பது பரவலாக பெய்யக்கூடிய நிகழ்வு கிடையாது. உதாரணமாக தானே புயல், நிஜாம் புயல், வர்தா புயல் காலங்களில் பரவலாக மழை பொழிவு இருக்கும்.. பரவலாக மழை அதிகமாக இருந்தால் அது மேக வெடிப்பு கிடையாது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் மட்டும் அதிகமாக மழை பொழிந்தால்தான் அது மேக வெடிப்பு. 20 சதுர கிமீக்குள் 10 செமீ மழை பொழிவுக்கும் 100 சதுர கிமீக்குள் 10 செமீ பொழிவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. மழை பொழிவை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் மிக முக்கியமானது. வளிமண்டலத்தில் ஏற்படக்கூடிய காற்றின் வேக மாறுபாடுகள், காற்று குவிதல், 2 விதமான காற்று சுழற்சிகள் இணைந்து மழைப்பொழிவை ஏற்படுத்தியிருக்கலாம். இப்படி மேக வெடிப்புக்குப் பின் பல்வேறு விதமான காரணிகள் இருக்கின்றன.
மேக வெடிப்பை முன்பாகவே கணிக்க முடியாது. ஆனால் அதிகமாக கனமழை பெய்ய போகிறது என்றால் முன்கூடியே அதிக மழை பெய்ய வாய்ப்பு.. அதனால் மேக வெடிப்பும் ஏற்படலாம் கணிக்க முடியும். இயல்பாக இந்த மேக வெடிப்பு என்பது புதிதாக வந்தது இல்லை. . ஏற்கனவே இருந்ததுதான். தற்போது என்ன வித்தியாசம் என்னவென்றால்.. தானியங்கி வானிலை நிலையங்கள் அதிகரித்திருக்கின்றன. இதன்காரணமாக ஒவ்வொரு நேரத்திலும் குறிப்பிட்ட நேரத்தில் எவ்வளவு மழை பொழிந்துள்ளது என்பதைக் கண்காணிக்க முடிகின்றது. குறிப்பாக, இரவு 10 முதல் 11 மணியளவில் எவ்வளவு மழை பொழிந்திருக்கிறது என்பது வரை நம்மால் தரவுகளைப் பெற முடியும். அதுபோல், இந்தியா முழுவதிலும் தானியங்கி வானிலை நிலையங்கள் அதிகப்படுத்தப்பட்டதால் நம்மால் தரவுகளைப் பெற முடிகிறது. எனவேதான் கடந்த சில காலங்களில் மேக வெடிப்பு என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துகிறோம். மேகவெடிப்பு இயல்புதான்.. ஆனால், இந்த வருடம் மேகவெடிப்பு என்பது அதிகமாகியிருக்கிறது.
வட இந்தியாவில் அதிகமான மழைப்பொழிவு ஏற்படுவது ஏன்?
இந்தியா முழுவதிலும் இக்காலக்கட்டங்களில் 64 செமீ மழை பதிவாகியிருக்க வேண்டும். அப்படி 64செமீ மழைதான் பதிவாகியும் இருக்கிறது. ஆனால், குறிப்பிட்ட இடங்களில் அதிகமான மழைப்பொழிவு, நிலச்சரிவுகள் போன்றவை நிகழ்ந்திருக்கின்றன. இதிலிருந்து நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்றும் இருக்கிறது. ஒரு மாநிலத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், மாநிலம் முழுவதிலுமே பரவலாக மழைபொழிவு இருக்க வேண்டும். அப்படியில்லாமல், மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அதிகமான மழைப்பொழிவு இருக்கிறது. அதனால்தான், ஒட்டுமொத்த மழைப்பொழிவின் சராசரி இயல்பான அளவில் இருந்தாலும், குறிப்பிட்ட இடத்தில் அதிகமான மழைப்பொழிவு இருப்பதால் அப்பகுதிகளில் பாதிப்பு அதிகளவில் இருக்கிறது. ஒருபகுதியில் வறட்சியும், சில பகுதிகளில் அதிகளவில் மழைப்பொழிவு, நிலச்சரிவு போன்றவை நிகழ்கின்றன.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் கடல்சார் அலைவுகள் பரவலான மழைப்பொழிவுக்கு சாதகமானதாக இல்லை. எல் நினோ (El Niño) லா நினா (La Niña) போன்றவற்றை வகைப்படுத்த உதவுவது ENSO சுழற்சி. பசுபிக் பெருங்கடலில் இருக்கும் வெப்பநிலையை கணக்கிட்டு குறிப்பிட்ட ஆண்டில் எல்நினோவா அல்லது லாநினாவா என்பதை வகைப்படுத்துவோம். தற்போதைய தென்மேற்கு பருவமழை காலத்தில் நியூட்ரலில் இருக்கிறது. இப்படி neutralல் இருப்பதால் பரவலான மழைப்பொழிவாக இல்லாமல் சிறு சிறு காற்று சுழற்சிகளாக உருவாகி மேகவெடிப்புக்கு சாதகமாக அமைகிறது.
தமிழகத்தில் மழைப்பொழிவு எப்படியிருக்கும்?
தற்போதுவரை தென் மேற்குப் பருவமழையில் இயல்பான மழைப்பொழிவுதான் கிடைத்திருக்கிறது. ஆனால், சில பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு இருப்பதை அதிகளவில் பார்க்கிறோம். இந்தாண்டு செப்டம்பரில் தென்மேற்கு பருவமழை வலுவடைவதற்கான சூழல் இல்லை. பகல் நேரத்தில் தெளிவான வானமும் வெயிலும், இரவில் வெப்பச்சலன மழையும் இருக்கும். இயல்பை விட வெப்பச்சலன மழை அதிகளவில் இருக்கலாம்.