கார் பந்தயம் அவ்வளவு சுலபமானதா? ரசிகர்களிடம் உணர்ச்சி பொங்க பேசிய அஜித்குமார்
நடிகர் அஜித்குமார் தொடர்ச்சியாக கார் ரேஸ் மீது தனக்கு இருக்கும் ஆர்வத்தை அழுத்தமாக வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த போதிலும், சினிமாவில் நடிப்பதற்கு இடையில், ரேஸுக்கென நேரம் ஒதுக்கி, அதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆறு மாதம் சினிமாவுக்கும் ஆறு மாதம் ரேஸுக்கும் என பிரித்து இயங்கும் அஜித், 'அஜித்குமார் ரேஸிங்' என தன் பெயரிலேயே ஒரு ரேஸிங் கம்பெனியை கடந்த ஆண்டு ஆரம்பித்து, கார் ரேஸ் போட்டிகளில் கலந்து வருகிறார். இந்த போட்டிகளில் அவருக்கு சில விபத்துகள் நடந்ததையும், அதிலிருந்து அவர் தப்பியதையும் பல வீடியோக்களில் நாம் பார்த்திருப்போம்.
இந்நிலையில், துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் தகுதிச்சுற்றில் பங்கேற்ற அஜித்குமார் ரேஸிங் அணி, 7வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து 992 பிரிவு கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்த அஜித்குமார் ரேஸிங் அணி இந்தியாவிற்கு பெருமையை தேடித்தந்தது. அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கலில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டிருந்தார். தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வரும் கார் ரேஸில் கலந்து கொண்டிருக்கிறார். அஜித்குமார் ரேஸிங் அணி 24H கார் ரேஸிங்கில் பங்கேற்க உள்ள நிலையில், தற்போது சோதனை ஓட்டத்தில் பங்கேற்று வருகிறது.
இந்நிலையில் கார் ரேஸ் நடக்கும் இடத்தில், ரசிகர்களிடம் கார் ரேஸ் தொடர்பாகப் பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அஜித் பேசியிருந்தது என்ன என்றால் "நிறைய பேர் மோட்டார் ஸ்போர்ட்ஸை மிக சுலபமானது என நினைக்கிறார்கள். மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும், இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்க வேண்டும். உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் இது எவ்வளவு கடினமானது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள். நம்மிடம் நிறைய இந்திய டிரைவர்கள் இருக்கிறார்கள், அவர்களை ஊக்கப்படுத்தினால் ஒரு நாள் இந்தியா F1 உலக சாம்பியனை வெல்லும்" எனப் பேசியுள்ளார்.
ரேஸ் ஒருபுறம் இருக்க, அஜித்குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாகும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். ஆனால் அந்தப் படம் துவங்க சிறிது காலம் எடுக்கும் என சொல்லப்படுகிறது.