Women's Day|சுதா கொங்கரா T0 ஹலீதா ஷமீம்-தமிழ் சினிமா பெண் இயக்குநர்களில் கவனம் ஈர்க்கும் கலைஅரசிகள்!

சுதா கொங்கரா போன்றவர்கள், ஆண், பெண் என்ற பேதம் கடந்து அனைவருக்குமான முன்னுதாரணம் என்பது மறுப்பதற்கில்லை. சூழல்களைக் கடந்து இன்னும் பலர் ஆழமான ஆழகியலைக் கொண்ட கதைகளை தமிழ் சினிமாவுக்கு பிரசவித்து தர வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு
directors
directorspt

உலக மகளிர் தினமான இன்று, மகளிருக்கு வாழ்த்து சொல்லும் பலரும், ஆணுக்குப் பெண் சமம் என்ற கூற்றை முன்வைத்து வாழ்த்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். ஆனால், ஆணும் பெண்ணும் எல்லா துறைகளிலும், விதத்திலும் சம உரிமையோடு, மரியாதையோடு நடத்தப்பட வேண்டும் என்பதை யாரும் கூறுவதில்லை. உண்மையில், ஆணைவிட பெண்தான் வலிமையானவள் என்பது புரியாமல் போனதால், அறியாமையில் வரும் வார்த்தைகளே ‘ஆணுக்குப் பெண் சமம்’ என்பவையாகும்.

சமூதாயத்தில் நடக்கும் அத்தனை அம்சங்களையும், அரசியலையும் கண்ணாடியாக பிரதிபலிக்கும் சினிமாவில், பெண்களுக்கு ஆதரவான பல கருத்துகளை, படங்களை பார்த்திருப்போம். ஆனால், அதே சினிமாவில் எந்த அளவிற்கு இயக்குநர்களாக பெண்களுக்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு திரைப்படம் என்ற கப்பலின் மாலுமியாக பெண்கள் பயணித்துள்ளார்கள் என்ற கேள்வியை எழுப்பினால், விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆக, பெண்ணுரிமை, சமத்துவம் எல்லாம் வெற்று பேச்சுகளே தவிர, அத்தனையும் நடைமுறைக்கு வந்துவிடவில்லை என்பதற்கு, வாழும் சாட்சிகள் ஏராளம்.

அந்த வகையில், சென்ற இடத்தில் எல்லாம் போடப்பட்ட முட்டுக்கட்டைகளைத்தாண்டி, ‘நீ ஒரு பெண், உன்னால் எப்படி படத்தை இயக்கிவிட முடியும்’ என்ற கேவலமான கேள்விகளைத் தாண்டி, தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த நல்ல படைப்புகளைக் கொடுத்த முக்கியமான பெண் இயக்குநர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். சுதா கொங்கரா சொல்வது போல, பெண் இயக்குநர்கள் என்பதே தவறுதான் எனினும், இன்றைய நாளில் வெறும் இயக்குநர்கள் என்று போட்டால் குழப்பம் உண்டாகும் என்பதால், இந்த இடத்தில் மட்டும் பெண் இயக்குநர்கள் என்ற பதத்தை உபயோகிக்காமல் கடக்கமுடியவில்லை.

ஹலீதா ஷமீம்!

பார்த்தவுடன் காதல், பார்க்காமல் காதல் என்ற கதையெல்லாம் பார்த்த தமிழ் சினிமாவில் வெவ்வேறு வயதில் ஏற்படும் காதலைக் கண் முன் கொண்டு வந்து காட்டி நெஞ்சை பிசைந்து எடுத்தவர்தான் ஹலீதா ஷமீம். பூவரசம் பீப்பி என்ற படத்தின் மூலம் கவனம் பெற்ற இவர், சில்லுக் கருப்பட்டி படத்தின் மூலமாக ‘காதலுக்கு ஏது வயது’ என்பதை உணர்த்தியிருப்பார். பதின் பருவத்தில் தொடங்கி, இளைஞராக, திருமணமானவராக, முதியவராக என்று எல்லா காலத்திலும் காதல் என்ற அற்புதம் நிகழ தவறுவதில்லை என்பதை மிகவும் கண்ணியத்துடன் காட்சிப்படுத்தியதாலேயே, தமிழ் சினிமாவை திரும்பிப்பார்க்க வைத்தார். தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களாக அறியப்படும் புஷ்கர் - காயத்திரி மற்றும் மிஷ்கின் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ஏலே என்ற வெப் சீரீஸுக்குப் பிறகு மின்மினி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் ஹலீதா.

ஒரு கதையில் இடம்பெறுவோரின் இளம் வயது காட்சிகள் தேவையானால், இளைஞர்களை வைத்து படம் முடித்துவரும் சூழலில், இளைஞர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படத்தில், உண்மையில் 7 சிறுவயதில் அவர்கள் எப்படி இருந்தனர். இப்போது எப்படி மாறியுள்ளனர் என்பது வரை 2015ம் ஆண்டு தொடங்கி 2022ம் ஆண்டு வரை மின்மினியை படமாக்கி முடித்துள்ளார் ஹலீதா.

directors
Women’s Day | குட்டி ரேவதி To உமா தேவி; தமிழ் சினிமா உலகில் கவனம் ஈர்க்கும் 5 பெண் பாடலாசிரியர்கள்!

காயத்ரி (புஷ்கர் - காயத்ரி)

திருமண வாழ்க்கையில் மட்டுமல்ல, சினிமா பயணத்திலும் நாங்கள் இணைப்பிரியா தோழர்களே என்பது போன்று டூயல் காம்போவாக தனது கணவர் புஷ்கர் உடன் கலக்கிக்கொண்டிருப்பவர்கள்தான் இயக்குநர் காயத்ரி. ஓப்ரம்போ படத்தின் மூலம் அறிமுகமாகி, வா குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா படங்களைக் கொடுத்த இந்த தம்பதி குறித்து பேசாத வாயே இல்லை எனலாம். ஒரு படம், அது தரமான படமாக, ஆகப்பெரும் அழுத்தமான படைப்பாக இருந்தால் பேசும். அதுவே மக்களிடம் உங்களைக் கொண்டு சேர்த்துவிடும் என்பதற்கு புஷ்கர் காயத்திரி தம்பதி உதாரணம் எனலாம்.

குறிப்பாக விக்ரம் - வேதா படத்தின் மூலம், இப்படியும் ஒரு கதையை சொல்லலாம் என்று பலர் சிலாகித்தனர். தமிழில் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த விக்ரம் வேதாவை, 2022ம் ஆண்டு இந்தியில் இயக்கி அங்கேயும் அதகளம் செய்தது புஷ்கர் காய்த்ரி தம்பதி.

கிருத்திகா உதயநிதி

அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தில் இணைந்தாலும், தனக்கிருந்த சினிமா ஆர்வத்தை கைவிடாத கிருத்திகா உதயநிதி, வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலமாக கவனிக்கப்பட்ட இவர், பிறகு விஜய் ஆண்டனியை வைத்து காளி படத்தை இயக்கினார். தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவியை வைத்து காதலிக்க நேரமில்லை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சிறுவயது முதலே இருந்த சினிமா ஆர்வம், வணக்கம் சென்னை படத்தோடு முற்றுபெற்றுவிடும் என்று அவர் குடும்பத்தாராலேயே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சினிமா எனும் பெரும் கனவை தாங்கிப் பிடித்து வருகிறார் கிருத்திகா.

directors
“எதாவது ஒரு கோட்டாவுல உள்ள நுழஞ்சிடுறானுக..” - செல்வராகவனின் பேசப்படாத காத்திரமான அரசியல் உலகம்!

ஐஸ்வர்யா ரஜினி

என்னதான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் என்றாலும், ஒரு இயக்குநராக தன்னை மாற்றிக்கொள்வதற்கு மிகவும் மெனக்கெட்டு வெற்றிபெற்றவர்தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். விசில் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவனுக்கு உதவி இயக்குநராக இருந்து பிறகு தனது கணவர் தனுஷை வைத்து, ‘3’ என்ற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. அது தொடர்ந்து, வை ராஜா வை என்ற படத்தை இயக்கியவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘லால் சலாம்’ படத்தை இயக்கி லைம் லட்டில் தன்னை முன் வரிசையில் வைத்திருக்கிறார்.

லால் சலாம் இசைவெளியீட்டு விழாவில் பேசிய அவர், “ஒரு பெரிய ஸ்டாரின் மகள் என்பதால், சினிமாவில் இருப்பவர்கள் நம்மைப்பார்த்து பேசுகிறார்கள். நம்முடைய அழைப்பை ஏற்கிறார்கள். அப்பா எப்படி இருக்கிறார் என்றெல்லாம் பேசி, படத்தைப் பற்றி பேசுகையில் ஆர்வம் காட்டுவதில்லை. இப்படி எல்லாம் பல பேரிடம் கதை சொல்லி, கடைசியாக அமைந்ததுதான் லால் சலாம். இந்த படத்தில் வந்து நடியுங்கள் என்று நான் அப்பாவிடம் கேட்கவில்லை. அவராகத்தான் படத்தில் ‘மொய்தின் பாய்’ பாத்திரத்தை ஏற்று நடித்தார்” என்று பேசினார்.

குறிப்பாக, “பெயர் என்பது அவர் உருவாக்கி வைத்தது. அதை வைத்து விளையாடும் எந்த உரிமையும், அவரது மகளாகவே இருந்தாலும் எனக்கு இல்லை” என்று கூறியது இயக்குநராக இருக்கும் அவரது தெளிவான பார்வையை வெளிச்சம் போட்டு காட்டியது.

சுதா கொங்காரா

‘ஒரு நல்ல படம் பார்த்தா, காலில் தானே விழணும். என்ன ஆத்தா நீ இப்படி படம் எடுத்துட்டயே டி. ஸ்ரீ தேவி எங்களெல்லாம் மூதேவியா ஆக்கிட்டியே டி’ என்று மிஷ்கினை உருக வைத்து பேச வைத்தார் சுதா கொங்கரா. மணிரத்னத்திடம் சுமார் 7 ஆண்டுகளாக உதவி இயக்குநராக பணியாற்றி, பின்னர் ஆந்திரா ஆண்டகாடு எனும் தெலுங்கு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சுதா கொங்கரா.

தொடர்ந்து துரோகி படத்தை இயக்கியவர், இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பிப்பார்க்க வைத்தார் சுதா. ஒவ்வொரு காட்சியும் எழுதப்பட்ட வசனங்கள், சொன்ன விஷயங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், சூர்யாவை வைத்து சூரரைப்போற்று படத்தின் மூலம் மீண்டும் ’சுதா கொங்கரா’ படம் என்றால் இப்படித்தாண்டா இருக்கும் என்று ஒரு ட்ரேட் மார்க்கை உருவாக்கினார் சுதா. 21 ஆண்டுகாள போராட்டத்தில் குடும்பம், சினிமா என்ற இரண்டையும் கவனித்து, கிடைத்த வாய்ப்புகள் அனைத்திலும் கவனம் ஈர்க்க வைத்தவர், பாவ கதைகள் என்ற வெப் சீரீஸ் மூலமாக சமூகத்தில் நடக்கும் ஆணவக்கொலைகள், அடக்குமுறைகள் போன்றவற்றையும் காட்சிப்படுத்தியுள்ளார்.

directors
முதலும் கடைசியுமாக ‘குணா’ - நடிகை ரோஷினி நடிப்பில் இருந்து வெளியேற காரணம் என்ன?

முன்னதாகவே சொன்னதுபோல, இயக்குநர்களில் என்ன பெண் இயக்குநர். உயிர்களையே பிரசவிக்கும் பெண்களுக்கு சினிமா என்ன பெரிய விஷயமாக இருந்துவிடப்போகிறது என்று தொடர் முயற்சிகளால் சிகரம் தொட்டு மிளிரும் சுதா கொங்கரா போன்றவர்கள், ஆண், பெண் என்ற பேதம் கடந்து அனைவருக்குமான முன்னுதாரணம் என்பது மறுப்பதற்கில்லை. சூழல்களைக் கடந்து இன்னும் பலர் ஆழமான ஆழகியலைக் கொண்ட கதைகளை தமிழ் சினிமாவுக்கு பிரசவித்து தர வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு.

directors
'உன்னை நான் அறிவேன்..' குணாவின் நிஜ 'அபிராமி' ரேகா நடித்த ரோஸி தான்..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com