“எதாவது ஒரு கோட்டாவுல உள்ள நுழஞ்சிடுறானுக..” - செல்வராகவனின் பேசப்படாத காத்திரமான அரசியல் உலகம்!

செல்வராகவன் படைப்புகள் மையம் கொண்டுள்ள கதாபாத்திரங்கள் கௌதம் மேனனின் பாத்திர படைப்புகளுக்கு நேர் எதிரானவை. இரண்டு படைப்பாளிகளின் உலகங்களுக்கு இடையே நூலளவு தான் வித்தியாசம் இருக்கும். ஆனால், சார்பு நிலை பார தூரமானது.
selvaraghavan characters
selvaraghavan charactersPT web

செல்வராகவன்.. அவன் பெரிய சம்பவக்காரன்.. மிகப்பெரிய கனவுகளை தன்னுடைய மனதில் நிறுத்தி பயணத்தை தொடங்கியவன். மனிதர்களின் உணர்வுகளை அதன் எதார்த்தமான, ஆழமான தன்மையில் யாரும் அணுகாத புதிய கோணங்களில் அணுகியவன். போலியான பிரம்மாண்டகளுக்கு மத்தியில் உண்மையான பிரம்மாண்டத்தை எடுத்துக்காட்டியவன். மொத்தத்தில், ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அவன் ஒரு ‘கலைஞன்’. நெஞ்சில் வற்றாத தாகம் கொண்ட கலைஞன். ஆம், தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள ‘இயக்குநர் செல்வராகவன்’ பிறந்தநாள் இன்று.

செல்வராகவன் குறித்து விவாதிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. ஒரு படைப்பாளியாக படைப்பு குறித்தும் நிலைப்பாடு முக்கியமானது. யாருக்கானது தன்னுடைய படைப்பு, எதனை சொல்லப் போகிறது என்பதில் அவருக்கு இருந்த தெளிவு அபாரமானது. ஆனால், அவரது படைப்பாக்க முறை குறித்து பேசப்பட்ட அளவிற்கு அவரது சமூக தெளிவு குறித்த உரையாடல் பெரிய அளவில் நடக்கவில்லை என்றே தோன்றுகிறது.

செல்வராகவனின் ஹீரோக்கள் யார்? அவரின் சினிமாவின் பேசப்படாத அரசியல் பக்கங்கங்கள்!

செல்வராகவன் படங்களில் நாயகர்கள் யார் அவர்களின் பின்னணி என்ன வென்று கவனித்தாலே அவர் யார் பக்கம் நின்று பேசுகிறார், அவர் உருவாக்கியுள்ள கதைக்களம் எத்தகையது என்பது புரியும்.

துள்ளுவதோ இளமையில் தொடங்கி ஒவ்வொரு படத்திலேயும் எளிய பின்னணி கொண்ட கதையின் நாயகனயே அவர் தேர்வு செய்து, எந்த மாதிரியான விஷயங்களை அவர் பேசியிருக்கிறார் என்பது புரியும். விமர்சனங்களுக்கு உட்பட்டது என்றாலும் அதையெல்லாம் தாண்டி அவர் சார்ந்திருக்கும் உலகத்தை இங்கே விரிவாக பார்க்கலாம்.

காதல் கொண்டேன் படத்தில் சில விஷங்களை முதலில் எடுத்துக் கொள்வோம்.

‘விளிம்புநிலை மனிதர்களுக்கு கிடைக்கும் கல்வி குறித்து பேராசிரியர்களுக்கு இருக்கும் பார்வை’ - காதல் கொண்டேன்

படத்தில் வரும் வினோத்தின் வாழ்க்கை பின்னணியே வெளிச்சம் போட்டு காட்டும் அவர் எத்தகைய கதாநாயகர்களை தேர்வு செய்கிறார் என்று. நாயகன் வினோத்தின் தாய் ஒரு பாலியல் தொழிலாளி. ஆண் குழந்தை பிறந்ததால் 15 ஆயிரம் ரூபாய்க்கு கொடூரமான நகரத்திற்குள் பெற்ற தாயே அவனை தள்ளிவிட்டு செல்கிறார். அவனே (வினோத்) சொல்வது போல் ஒரு நகரத்திற்கு இருந்து இன்னொரு நரகத்திற்குள் செல்கிறான். குழந்தை தொழிலாளியாக சொல்வொண்ணா கொடுமைகளை அனுபவிக்கிறான். அனல் கக்கும் நெருப்பு குடோனுக்குள் அடைபட்ட கொடுமை தான் பின்னாளில் அவன் வெளிப்படுத்தும் வினோதமான அச்சம் கலந்த பிதட்டல்களுக்கு காரணம். 10 நிமிடங்கள் மட்டுமே வரும் அந்த குழந்தை பருவ காட்சிகள் நம்ம உண்மையில் கண்கலங்கச் செய்துவிடும்.

மாநிலத்தில் தொலைதூரத்தில் ரிமோட் ஏரியாவில் உள்ள கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கி படிப்பிற்காக செல்லும் இளைஞர்களுக்கு சென்னை போன்ற நகரம் எத்தகைய பிரம்மிப்பையும் அச்ச உணர்வையும் கொடுக்கும் என்பதை காட்சிப்படுத்தி இருப்பார். கல்லூரிக்குள் முதல் நாள் செல்லும் அந்த காட்சியிலேயே இடஒதுக்கீடு குறித்து பேராசிர்யர்களுக்கும் பார்வையே அன்றே வெளிச்சம் போட்டு காட்டி இருப்பார். உடல் மொழியில் வினோத்தை அந்த பேராசியர் ஏற இறங்க பார்கும் விதமும், அவன் கையில் இருந்து அட்மிஷன் லெட்டரை அவர் வாங்கும் விதமுமே பல ஆழமான அர்த்தங்களை சொல்லும்.

‘நீயெல்லா ஸ்டூடண்டா.. கடவுளே இந்த மாதிரி எங்கிருந்து தான் வர்ராங்களோ. எதாவது ஒரு கோட்டாவுல உள்ள நொழஞ்சிடுறானுக. இவனுங்க கூடலா தாளி அறுக்கணும்னு எனக்கு எழுதி இருக்கு’ என்று சொல்லும் வார்த்தைகள் எளிய பின்னணி கொண்ட மாணவர்கள் கல்லூரிகளுக்கு முதல் தலைமுறையாக படிப்பை நோக்கி வருவதை குறித்த எந்த புரிதலும் இல்லாமல் இருந்த அன்றைய பேராசியர்களின் எண்ண ஓட்டத்தை காட்டும்.

‘உங்களுக்கு யாராவது ப்ரீயா சீட் கொடுத்திருவாங்க..’

மற்றொரு பேராசிரியர் சொல்லும் வார்த்தையும் இதே டோனில் தான் இருக்கும். சென்னை போன்ற நகரங்களுக்கு படிக்க வரும் மாணவர்கள் பலரும் பார்ட் டைம் வேலை செய்து கொண்டே தான் படிப்பார்கள். இது மிகவும் இயல்பாக நடக்கக் கூடிய ஒன்று. வினோத்தும் அப்படித்தான் ரெஸ்டாரெண்ட்டில் வெயிட்டராக வேலை செய்து கொண்டே படிக்கிறான். அப்படி இரவில் வேலை செய்துவிட்டு பகலில் கல்லூரிக்கு வரும்போது தூக்கம் சொக்கும் (ஆங்கிலம் புரியாமல் தூங்குவதும் நடக்கும்).

அப்படியான ஒரு காட்சியில் தான் கணிதப்பாடம் நடத்திக் கொண்டிருந்த பேராசிரியர் தூங்கிக் கொண்டிருந்த வினோத்தின் முகத்தில் டஸ்டரால் அடித்துவிட்டு, ‘உங்களுக்கு யாராவது ப்ரீயா சீட் கொடுத்திருவாங்க, ப்ரீயா சாப்பாடு போட்ருவாங்க. எங்கையாவது திண்ணுட்டு வந்து இங்க தூங்குவியா’ என்று சொல்லுவார். இடஒதுக்கீடு கல்வி, மாணவர்களுக்கான இலவச உணவு உள்ள சமூக நல திட்டங்கள் குறித்து பேராசிரியர்களுக்கு இருக்கும் பார்வை அது. ஆனால் படிப்பிலே வினோத்தை மிகவும் கெட்டிக்காரனாகவே காட்டியிருப்பார் செல்வராகவன்.

படத்தில் முதல் காட்சியிலேயே வருவதுபோல், நல்ல துணிகளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் இருந்து கல்லூரியை நோக்கி வந்தவன் வினோத். படிப்பு அவனுக்குள் இருக்கும் திறமையை உலகிற்கு காட்டியது. அவனது தேவையாக இருந்தது ஒன்றே ஒன்றுதான். தன்னை அரவணைக்கு ஒரு உயிர். ஏனென்றில் வினோத் தன் வாழ்வில் கண்டதெல்லாம் நிராகரிப்பும், ஏமாற்றமும் தான். படத்தை குறித்த விமர்சனங்கள் இருந்தாலும், யார் பக்கம் நிற்பது என்பதில் இருக்கும் செல்வராகவனின் இந்த நிலைப்பாடு முக்கியமானது.

‘நடுத்தர வர்க்கத்தின் மூன்று வெவ்வேறு பிரிவுகள்’- 7ஜி ரெயின்போ காலனி

செல்வராகவனின் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் பல்வேறு விதமான வர்க்க பின்புலம் கொண்டவர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை கையாண்டிருப்பார். காதல் கொண்டேன் படத்தில் வினோத் விளிம்பு நிலையில் இருந்து வரும் இளைஞர். திவ்யாவின் காதலனாக வரும் இளைஞன் சென்னையில் வசித்து வரும் நடுத்தர வர்க்கத்தின் கீழ் நிலையில் உள்ள இளைஞன். திவ்யா காவல் துறையில் உயர் பொறுப்பில் உள்ளவரின் மகள். இந்த மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையிலே அவ்வளவு இடைவெளிகள் இருக்கும். திவ்யாவின் காதலனின் ஆசைகள் ஏக்கங்கள், திவ்யாவின் பின்னணி குறித்து அவனது பார்வை போன்றவை அதனை எடுத்துக்காட்டும். அதேபோல் தான், 7ஜி ரெயின்போ காலனியும்.

நகரத்தில் உருவாகும் புதிய நடுத்தர வர்க்கத்திற்கான குடியிருப்பில் தான் நாயகி அனிதாவும், நாயகன் கதிரும் வாழ்கிறார்கள். கதிரின் தந்தை நடுத்தர வர்க்கத்தின் கீழ் நிலையில் இருப்பவர். முதல் தலைமுறையாக ஒரு நல்ல வாழ்க்கைக்குள் வந்து தன்னுடைய பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். எளிய மனிதர்களுக்கே உரித்தான கோபம் அவரிடம் இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் அவர் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகளில் இருந்து பிறக்கும் அச்சம் தான் அந்த கோபத்திற்கு பின்னால் இருக்கும் காரணம்.

அனிதா குடும்பத்தின் வாழ்க்கை பின்னணி என்பது நடுத்தர வர்க்கத்தின் மேல் மட்டத்தில் இருந்து ஏதோ கடன் நெருக்கடியால் சற்றே கீழே இறங்கியிருக்கும். கதிர் குடும்பத்தின் மீது அனிதா குடும்பத்தின் இருக்கும் பார்வை இங்கு முக்கியமானது. கதிரின் தாய் அன்பாக கொடுக்கும் பாலையே குடிக்காமல் அப்படியே கழுவி கொடுக்கும் செயல் பல விஷயங்களை இலைமறைகாயாக சொல்லும்.

அனிதாவை திருமணம் செய்து கொள்வதாக வரும் இளைஞனின் பின்னணி நடுத்தர வர்க்கத்தின் மேல் தளத்தில் இருக்கும். அனிதா குடும்பம் பண உதவிகளை அந்த இளைஞனின் குடும்பத்திடம் இருந்து பெறுவார்கள். அந்த பண உதவிகளுக்காகத்தான் அனிதாவை திருமணம் செய்து கொடுக்க நினைப்பார்கள். அந்த பணக்கார இளைஞன் கதிர் போன்ற இளைஞர்களை பார்க்கும் விதம் முற்றிலும் வித்தியாசமானது. அனிதாவின் தாய் கதிரின் குடும்பத்திடம் நடந்து கொள்ளும் விதத்திற்கும், பண உதவிகள் செய்யும் அந்த குடும்பத்திடம் நடந்து கொள்ளும் விதமும் வித்தியாசமாக இருக்கும். கதிரின் தாயிடம் இருக்கும் கள்ளமில்லா அன்பு எளிய மனிதர்களுக்கே உரித்தானது.

காதல் காட்சிகளை தாண்டி இவையெல்லாம் செல்வராகவன் நுணுக்கமாக காட்சிப்படுத்தியுள்ள இந்த வர்க்கப் பின்னணிகள் கவனிக்க வேண்டியவை ஆகும். காதல் கொண்டேன் வினோத், 7ஜி ரெயின்போ காலனி படங்களை போன்றே மயக்கம் என்ன படத்தில் வரும் கார்த்தியும் அதன் காதலில் மற்றும் நண்பரும். போட்டோ கிராப் என்ற கலை மீதான கார்த்திக்கின் காதலை தாண்டி கதாபாத்திரமாக அவரது பின்னணியை சற்று உற்றுநோக்கினால் செல்வராகவன் நிற்கும் இடம் புரியும்.

அதிகாரத்திற்கு பழியாகும் எளிய மனிதர்கள் - புதுப்பேட்டை!

செல்வராகவனின் கேரியரில் புதுப்பேட்டை மிகவும் மைல்ஸ்டோன் திரைப்படம். உண்மையில் புதுப்பேட்டை கேங்ஸ்டர் படம் என்பதை தாண்டி அது ஒரு அரசியல் திரைப்படம் என்பதே சரியானதாக இருக்கும். அது கொக்கி குமார் என்ற கேங்ஸ்டரின் வாழ்க்கை கதையைப் போன்று தெரிந்தாலும் எளிய பின்புலத்தில் இருந்து வரும் மனிதர்களை அரசியல் தலைவர்கள் முக்கியமன ஆளும், எதிர் கட்சிகளும் எப்படி தங்களுடைய சுய லாபத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது தான் மையமான கதை. அதனை இன்ச் பை இன்ச் ஆக நகர்த்தி கிராப்ட் ஆக செதுக்கி இருப்பார் செல்வராகவன்.

எளிய மனிதர்கள் குடும்ப சூழல் எப்படி இருக்கிறது, அவர்களது ஏரியா சூழல் எப்படி இருக்கிறது, குடும்பத்திற்கு எப்படி கொலைகள் நிகழ்கிறது என்பதில் தொடங்கி எப்படியாவது வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் எங்கெங்கோ கால்கள் போகும் இடங்களுக்கெல்லாம் சென்று ஏதேதோ செய்து இறுதியில் கேங்ஸ்டர்கள் இருக்கும் அந்த வாழ்க்கைக்குள் சிக்கிக் கொள்வது என ஒவ்வொன்றையும் அதன் இயல்பான பாதையில் சொல்லி இருப்பார் செல்வா. எளிய பின்னணி கொண்டவர்கள் அரசியல் அதிகாரத்திற்கு வருவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அடியாட்களாய் வேலை செய்யலாமே தவிர அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று நினைப்பது என்பது அவ்வளவு அபத்தமானது என்பதை தொகுதி பங்கீடு நடக்கும் காட்சி நன்றாகவே உணர்த்தும்.

‘செந்தமிழ் கவிஞன் நான் தமிழ்த்தாயின் புதல்வன் நான்’

தனக்கு எவ்வளவு தூரம் தேவையோ அவ்வளவு தூரம் அவர்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் அவ்வளவு சாமர்த்தியமாக அரசியல் தலைவர்கள் இருப்பார்கள். இதனை வெளிப்படையாகவே இன்றைய ஆளும், எதிர் கட்சிகளை சாடியிருப்பார் செல்வராகவன். அதற்கு உதாரணம், அழகம் பெருமாள் ஏற்றிருந்த தமிழ்ச்செல்வன் கதாபாத்திரம். அந்த பெயரை அரசியலை உணர்த்தும். தன்னை பார்க்க ஆத்திரத்துடன் வரும் கொக்கி குமாரிடம் நைசாக பேசி பகுதி செயலாளர் பொறுப்பு கொடுத்து தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்வார் எதிர்க்கட்சி தலைவரான தமிழ்ச்செல்வன். மேடைக்கு பின்னால் பன்னாடை, பொறம்போக்கு என்று ஏசிவிட்டு, மேடைக்கு முன்னாள் ‘செந்தமிழ் கவிஞன் நான் தமிழ்த்தாயின் புதல்வன் நான்’ என்று பேசுவதே அவர் எந்தக்கட்சியைச் சேர்ந்தவர் என்பதை சொல்லும். படம் உருவானது 2005 காலகட்டம் என்பது இங்கு கூடுதல் தகவல்.

கொக்கிக்குமார் போன்றவர்கள் தாங்கள் யார்? எங்கிருந்து வந்தோம், எப்படி நம்மை அதிகார வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது என்பது புரிந்தும் அவனுக்குள்ளும் அதிகார போதை வளர்ந்துவிடும். கடைசி காட்சியில் கூட கொக்கி குமாரை ஆளும் கட்சியாக இருந்த அதிகார தரப்பு தன் வசம் இழுத்துக் கொள்ளும். ஏனெனில் அது தேர்தல் காலம். அதிகார வர்க்கத்தினரால் பலிகடா ஆக்கப்படும் எளிய மனிதர்கள் பல நூறு பேர்களில் ஒருவன் தான் கொக்கிக் குமார்.

சென்னையின் எளிய பின்னணியில் இருந்து வரும் சோழர்களின் தூதுவன் : ஆயிரத்தில் ஒருவன்:

நாங்கள் தான் சோழர்கள் என்று இன்று பலரும் உரிமை கொண்டாடிக் கொண்டு வருகிறார்கள். ஆனால், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழர்களுக்கு தூதுவனாக வழிகாட்டியாக வரும் கார்த்தி ஏற்று நடித்த முத்து கதாபத்திரம் எளிய பின்னணி கொண்டது. சென்னையில் விளிம்பு நிலையில் வாழ்ந்து வரும் ஒரு நபர் தான் அரச பின்புலம் கொண்ட சோழர்களுக்கே வழிகாட்டி. அந்த மாற்றத்தை க்ளைமேக்ஸ்க்கு முன்பான சில காட்சிகள் அற்புதமாக காட்சிப்படுத்தி இருப்பார் செல்வராகவன்.

அத்துடன், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு அரசியல் இருக்கிறது. இது வெறும் சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையிலான போட்டியான விஷயம் மட்டுமல்ல என்பது இறுதியில் அவர் வைத்திருக்கும் காட்சிகளில் புரிய வைத்திருப்பார். ஆம், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை அப்படியே தத்ரூபமாக காட்டும் வகையில் க்ளைமேக்ஸ் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதி நவீன ஆயுதங்களை கொண்ட ஒரு தரப்பு எப்படி பழைய ஆயுதங்களை கொண்ட சோழர்களை வஞ்சகத்தால் வீழ்த்தியது என்பதையும், பின் பிடிக்கப்பட்டவர்கள் எப்படி ராணுவத்தில் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பதையும், பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்டவற்றால் சொல்வொண்ணா கொடுமைகளுக்கு ஆளானதை காட்சிப்படுத்தி இருப்பார் செல்வா. இந்த அரசியல் எந்த அளவிற்கு பேசப்பட்டது என்பது கேள்விக்குறிதான்.

நல்ல சினிமா எடுக்க முடியவில்லையே என்ற கோபம்!!

ஒரு தனியார் பத்திரிக்கை நிறுவனத்திற்கு 10 வருடங்களுக்கு முன்பு செல்வராகவன் அளித்த பேட்டியில், அவர் மிகவும் கொதிப்பான நிலையில் தன்னுடைய கருத்துக்களை கொட்டி தீர்த்து இருப்பார். உலக சினிமா எங்கே போய்க்கொண்டிருக்கிறது, நாம் என்ன மாதிரியான சினிமா எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்கிற அவரது ஆதங்கமும், அதற்கு அவர் முன் வைக்கும் காரணங்களும் நம்மை பிரமிக்க வைக்கும். “எதையாவது கத்தி பேசிக்கொண்டு, பஞ்ச் வசனங்களை பேசிக் கொண்டு, அழுது கொண்டு, தேவையற்ற காமெடிகளை எடுத்துக் கொண்டு இருப்பதை எப்பொழுது மாற்றப்போகிறோம். 13 வருடங்களுக்கு முன்பு எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையில் வந்தேன். இன்றும் அப்படியே இருந்தால் எப்படி என்னால் ஆதங்கம் இல்லாமல் இருக்க முடியும்; உண்மையில் எனக்கு இங்கு படம் பண்ணமே இஷ்டம் இல்லை” என்ற பேச்சு எந்த அளவிற்கு நல்ல சினிமா எடுக்க முடியாத சூழலில் தமிழ் சினிமா சிக்கி இருந்தது என்பதை காட்டியது.

ஒரு கம்பெர்ட் ஜோன்க்குள் இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்கள் சிக்கிக் கொள்கிறார்கள்; கனவுடன் வரும் இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை என்று மிக காட்டமாக அவர் வைத்த குற்றச்சாட்டுகள் பலரையும் சுட்டிருக்கும். இத்தனைக்கும் அவர் நல்ல சினிமாவாக அவர் பாராட்டி பேசியது ‘கும்கி’ படத்தை தான். ஆரண்ய காண்டம் சிறந்த முயற்சி என்று பாராட்டி இருந்தார். அதாவது குறைந்தபட்ச சினிமாக்களை கூட நம்மாள் எடுக்க முடியவில்லையே என்ற அவரது ஆதங்கம் நியாயமானது. இந்த ஆதங்கத்திற்கு பின்னால் அவர் அடைந்திருந்த வலி அத்தகையது. ஆயிரத்தில் ஒருவன் நிச்சயம் செல்வராகவனுக்கு மிகப்பெரிய மன உளைச்சலை கொடுத்திருக்கும். அதன் பல வித தாக்கத்தில் இருந்து மீண்டு வர பல வருடங்கள் ஆனது.

பருத்திவீரன் Vs ஆயிரத்தில் ஒருவன் - அமீர் Vs செல்வராகவன்!!

இயக்குநர் அமீர் பருத்திவீரன் படம் எடுத்ததின் பின்னணி குறித்து சமீக காலங்களில் அதிகம் பேசப்பட்டது. ஒரு படைப்பை உருவாக்க இயக்குநர் என்ற படைப்பாளி எந்த அளவிற்கு தன்னை ஒப்புக் கொடுப்பார்கள், ஒரு குழந்தையை போற்றி பாதுகாப்பு உயிர் கொடுத்து ஒரு தாய் வளர்ப்பது போலவே எப்படி அந்த படைப்பை செதுக்கி செதுக்கி உருவாக்குவார்கள் என்பதை பருத்திவீரன் உருவான விதத்தில் அமீர் என்ற கலைஞனை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், படைப்பு மிகப்பெரிய வெற்றி அடைந்த பின்னரும் அவர் மிகவும் அலைகழிக்கப்பட்ட விதம் அவருக்குள் இருந்த கலைஞனையே நோகடித்துவிட்டதுப்போல் ஆகிவிட்டது. மேற்சொன்னது மொத்தமும் செல்வராகவனுக்கும் அப்படியே பொருந்தும்.

ஆயிரத்தில் ஒருவன் என்ற மிகப்பெரிய பிரம்மாண்டத்தை உருவாக்கியவர் செல்வராகவன். பருத்திவீரனை போல் கிட்டத்தட்ட 3 ஆண்டு உழைப்பு. படபிடிப்பு நடந்த விதம் அதற்காக செல்வராகவன் சமரசமே இல்லாமல் உழைத்த விதம் இவையெல்லாம் அதில் பங்கேற்ற நடிகர்கள் கார்த்தி, பார்த்திபன் ஆகியோர் சொல்ல ஏற்கனவே சொல்ல கேட்டிருக்கிறோம். ஆனால், பருத்திவீரன் போல் ஆயிரத்தில் ஒருவனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. 10 வருடங்களுக்கு பின்பு தான் கொண்டாடுகிறார்கள். ஆனால், அன்று செல்வராகவனை ஒரு கடனாளியாக ஆக்கியது அந்தப் படம். படத்தின் தயாரிப்பாளர் பாதிக்கு மேல் பின் வாங்கிவிட்டார். படத்தின் பின் பாதியை கடன் வாங்கி தான் எடுத்தார் செல்வராகவன். சில வருடங்களுக்கு முன்பான ஒரு பேட்டியில் இது குறித்து அவர் விளக்கிய போது உண்மையில் ஒரு கலைஞனை பணம் எப்படி கொல்லும் என்பது புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு கலைஞனாக அவர் அப்படிப்பட்டவர் என்றால் அவருடைய மயக்கம் என்ன படத்தில் கார்த்தி சொல்வது போல் எனக்கு போட்டோ கிராபியை தவிர எதுவும் தெரியாது என்ற அளவிற்கு சினிமா மீது பைத்தியம் கொண்டவர் செல்வராகவன். அதை அவரே பல முறை சொல்லியும் இருக்கிறார்.

அதேபோல், படைப்பு முன்பு கருத்துக்களிலும் அவர் சற்றே எளிய மனிதர்களின் பின்புலத்தில் இருந்து யோசிக்கும் தன்மை கொண்டவராகவே இருந்து வந்துள்ளார். செல்வராகவன் படைப்புகள் மையம் கொண்டுள்ள கதாபாத்திரங்கள் கௌதம் மேனனின் பாத்திர படைப்புகளுக்கு நேர் எதிரானவை. இரண்டு படைப்பாளிகளின் உலகங்களுக்கு இடையே நூலளவு தான் வித்தியாசம் இருக்கும். ஆனால், சார்பு நிலை பார தூரமானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com