Top 10 சினிமா செய்திகள் | அஸ்வினுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ் To இயக்குநர் பாலா 25ம் ஆண்டு விழா!
ஒவ்வொரு மனிதருக்கும் எண்ணற்ற பொழுதுபோக்குகள் உள்ளன. அதில் ஒன்றாக சினிமாவும் உள்ளது. பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.
1. ”அஸ்வினை மஞ்சள் ஜெர்சியில் காண ஆசை” - தனுஷ்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில், அஸ்வின் ஓய்வு தொடர்பாக நடிகர் தனுஷ், “நம்பமுடியாத நினைவுகளை அளித்த அஸ்வினுக்கு நன்றி. இத்தனை வருடங்களாக நீங்கள் செய்த சாதனைகளுக்கு வாழ்த்துகள். இந்திய கிரிக்கெட் நிச்சயமாக ஒரு சாம்பியன் பந்து வீச்சாளரை மிஸ் செய்யும். உங்களை விரைவில் மஞ்சள் நிற ஜெர்சியில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
2. 100வது படத்திற்கு இசை: ஜி.வி.பிரகாஷ் நன்றி
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் ’எஸ்.கே.25’ ஆகும். இப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 100-வது படத்திற்கு இசையமைக்க உள்ள நிலையில், இந்த சாதனைப் பயணத்திற்கு வாய்ப்பளித்த நடிகர்கள், இயக்கநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
3. விக்னேஷ் சிவன் பகிர்ந்த பதிவு
இயக்குநர் விக்னேஷ் சிவன், தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து 'எல்ஐகே' என்ற படத்தை இயக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி அரசு ஹோட்டலை விக்னேஷ் விலைக்கு கேட்டதாக பரவிய தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு புதுச்சேரி அமைச்சர் விளக்கம் கொடுத்திருந்தநிலையில், விக்னேஷ் சிவன் தற்போது பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனுடன் பகிர்ந்த பதிவில், 'என்ன நடந்தாலும் சரி... சிரித்துக்கொண்டே நகருவோம்' என்று தெரிவித்துள்ளார்.
4. நடிகர் தனுஷ் படத்தின் அடுத்த அப்டேட்
’ராயன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் 'Yedi' பாடல் வரும் 20ஆம் தேதி வெளியாகும் என போஸ்டர் பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது.
5. ஜாக்கி சான் படம் ட்ரெய்லர் வெளியீடு
உலகம் முழுக்க காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஜாக்கி சான். இவர் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு ’ரைட் ஆன்’ என்ற திரைப்படம் வெளியானது. இந்த நிலையில், ஜாக்கி சான் நடிப்பில் உருவாகி இருக்கும் "கராத்தி கிட்: லெஜண்ட்ஸ்" திரைப்படம் உருவாகி அடுத்த ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
6. ‘பாட்டல் ராதா’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம், ‘பாட்டல் ராதா’. இப்படத்தை, தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியிடப்பட்டன. முதலில் இந்தப் படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ’பாட்டல் ராதா’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
7. 'மிஸ்டர் பாரத்' படத்தின் ப்ரோமோ வெளியீடு
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படமான 'மிஸ்டர் பாரத்' படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் வரும் லோகேஷ் கனகராஜ், அவரது படங்களில் வழக்கமாக வரும் துப்பாக்கி, பவுடர் என எதுவும் இதில் இருக்காது என்று தெரிவித்துள்ளார். நிரஞ்சன் இயக்கும் இப்படத்தில், யூடியூப் வீடியோ மூலமாக புகழ்பெற்ற பாரத் கதாநாயகனாக நடிக்கிறார்.
8. இயக்குநர் பாலாவுக்கு தங்கச் சங்கிலி அணிவித்து வாழ்த்து
‘வணங்கான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் இயக்குநர் பாலா திரையுலகிற்கு வந்து 25 வருடம் நிறைவடைந்த நிலையில் அதைக் கொண்டாடும் விதமாக, இன்று சென்னையில் விழா நடைபெற்றது. அந்த வகையில், இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கால சினிமா பயணத்தை வாழ்த்தும் விதமாக நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார் தங்கச் சங்கிலியை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
9. பாலா குறித்து வியந்து பேசிய நடிகர் சூர்யா
’வணங்கான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நடிகர் சூர்யா, “சேது படம் பார்த்த பிறகு அதில் இருந்து வெளி வருவதற்கு 100 நாட்கள் ஆகியது. அப்படி ஒரு படைப்பிற்கு பிறகு பாலாவின் அடுத்த திரைப்படத்தில் நான் கதாநாயகனாக இருப்பேன் என்பதை நினைத்து கூட பார்க்கவில்லை. என்னை நானே புரிந்துகொள்வதற்கு முன்பாக என்னை வைத்து திரைப்படம் இயக்க முன்வந்தவர் பாலா” எனத் தெரிவித்தார்.
10. ’காதலிக்க நேரமில்லை’ படத்தின் பாடல் வெளியீடு
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் புதிய படம் ’காதலிக்க நேரமில்லை’. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் அடுத்த பாடலான 'லாவண்டர் நேரமே' இன்று வெளியாகியுள்ளது. இப்பாடல் ஒரு மெலடி பாடலாக அமைந்துள்ளது.