Top 10 சினிமா செய்திகள்|சூர்யாவுடன் மீண்டும் இணைந்த த்ரிஷா To இளையராஜாவின் முதல் சிம்பொனி!
ஒவ்வொரு மனிதருக்கும் எண்ணற்ற பொழுதுபோக்குகள் உள்ளன. அதில் ஒன்றாக சினிமாவும் உள்ளது. பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.
1. ’சூர்யா 45’ படத்தில் இணைந்த திரிஷா!
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ’சூர்யா 45’ படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். முதலில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தமானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. படத்தின் கதாநாயகியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளார்.
2. 'படைத்தலைவன்' ட்ரெய்லர் வெளியீடு!
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் அடுத்து நடிக்கும் படம், 'படைத்தலைவன்'. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. படத்தின் ட்ரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இக்காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ட்ரெய்லர் முடிவில் மறைந்த விஜயகாந்தின் கண்களை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் காட்சிபடுத்தியுள்ளனர்.
3. விக்ரமின் 63வது படம் குறித்த அப்டேட்!
’மண்டேலா' படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், அடுத்ததாக நடிகர் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளார். இப்படம் விக்ரமின் 63வது திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தை ’மாவீரன்’ திரைப்படத்தைத் தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனை, அதிகாரப்பூர்வமாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
4. சிம்புவுக்கு ரூ.1 கோடியை திரும்ப வழங்க உத்தரவு
நடிகர் சிம்பு நீதிமன்றத்தில் செலுத்திய ரூ.1 கோடியை வட்டியுடன் திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ’கொரோனா குமார்’ படம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் பட நிறுவனத்திற்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, வட்டியுடன் சேர்த்து ரூ.1.04 கோடியை திருப்பித்தர தலைமைப் பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
5. செல்வராகவன் இயக்கும் படத்தின் பெயர் வெளியீடு!
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர் செல்வராகவனுடன் மீண்டும் இணைந்துள்ளார். இதுகுறித்த அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் டைட்டிலை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. திரைப்படத்திற்கு ’Mental மனதில்’ என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் டைட்டிலை நடிகர் தனுஷ், இன்று அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
6. நடிகர் சரத்குமார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் சரத்குமாரின் 150வது படமான 'தி ஸ்மைல் மேன்' என்ற படத்தை ஷ்யாம் பர்வீன் இயக்கியுள்ளார். இவர், ‘மெமரீஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். இப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில், சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மர்யான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
7. நடிகர் யோகி பாபுவின் பட டீசர் வெளியீடு!
நடிகர் யோகி பாபு தற்போது, 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 'சகுனி' படத்தை இயக்கிய ஷங்கர் தயால் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான 'பாலிடிக்ஸ் தெர்லனா பூமரு' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது. இந்த நிலையில், இப்படத்தின் டீசரை நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.
8. உன்னி முகுந்தனின் 'மார்கோ'வின் புதிய போஸ்டர்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர், உன்னி முகுந்தன். இவர் தற்போது 'மார்கோ' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஹனீப் அடேனி இயக்கியுள்ளார். இன்று நடிகர் உன்னி முகுந்தன் 'மார்கோ' படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். இத்திரைப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்.
9. இளையராஜாவின் முதல் சிம்பொனி நேரலை
இசை உலகின் ராஜாவாக வலம் வரும் இளையராஜா, தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி குறித்து அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “2025 மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் என்னுடைய முதல் சிம்பொனி நேரலை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, அவர் நிகழ்ச்சி ஒன்றில், 35 நாட்களில் ஒரு புதிய சிம்பொனிக்கு இசையமைத்திருந்ததாக தெரிவித்திருந்தார்.
10. இசையமைப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!
சினிமாத்துறையில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக பல்வேறு நடிகைகளும், பெண் கலைஞர்களும் புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில், மூத்த இசையமைப்பாளரான ராஜேஷ் ரோஷன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெங்காலி பாடகி லக்னாஜிதா சக்ரபோர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். பாடகியின் குற்றச்சாட்டு தொடர்பான இதுவரை ராஜேஷ் ரோஷன் ஏதும் கூறவில்லை.