ரஜினி-கமல், அஜித்- விஜய்; தீபாவளிக்கு நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஸ்டார்களின் படங்கள்.. வென்றது யார்?

தமிழ் சினிமாவில் தீபாவளி பண்டிகையின் போது மோதிக்கொண்ட சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களையும், அதுபெற்ற வெற்றி தோல்விகளையும் அலசும் சிறு முயற்சியே இந்த சிறப்புத் தொகுப்பின் நோக்கம்.
diwali winner
diwali winnerfile image

தீபாவளி என்றாலே பட்டாசு.. புத்தாடை.. பலகாரங்கள் நினைவுக்கு வந்தாலும், திரைப்படங்களும், அது கொடுத்த மகிழ்ச்சியையும் யாரும் மறந்துவிட மாட்டார்கள். இதுவரை பெரும்பாலான தீபாவளி பண்டிகைகளில் தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர்களின் படங்கள் வெளியாகியுள்ளன. சில வருடங்களில் குறிப்பிடத்தக்க முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகி கொண்டாட்டத்தை ஏற்படுத்தும்.

ஆனால், இந்த ஆண்டோ, அப்படி எந்த பெரிய படமும் வெளியாகவில்லை. கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2 படமும், ராஜு முருகனின் ஜப்பான் படங்களும் வெளியாகியுள்ளன. இந்த நேரத்தில், தீபாவளி பண்டிகையில் இதுவரை மோதிக்கொண்ட சூப்பர் ஸ்டார்களின் படங்களையும், அதன் வெற்றி தோல்வியையும் அடுத்தடுத்த வரிகளில் பார்க்கலாம்.

தமிழ் சினிமா வரலாற்றை திரும்பி பார்க்கும்போது, இவர்கள் இருவரை விடுத்து அதை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்ற அளவுக்கு மக்களின் நாயகர்களாக மாறிப்போன கமல், ரஜினி படங்களை முதலில் பார்க்கலாம்.

ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி ரசிகர்கள் மோதிக்கொண்ட நிலையில், அதற்கு அடுத்ததாக ரசிகர்களால் போட்டி நடிகர்களாக பார்க்கப்பட்டவர்கள்தன் இந்த கமல், ரஜினி. தனது 6 வயதிலேயே கலையுலகில் கமல் கால் பதித்தாலும், அவருக்கு பின்னால் வந்த ரஜினியோ, தீபாவளி படங்களில் ரேஸில் சற்று முன் வந்து நிற்கிறார். இவர்கள் இருவரும் மோதிக்கொண்ட படங்களை பார்க்கலாம்.

1975ல் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் இணைந்த ரஜினி - கமல் கூட்டணி ஐந்து மொழிகளில் 21 படங்களுக்கு தொடர்ந்தது. அதன் பின்னர், இருவரும் தனித்தனியே நடிக்கலாம் என்று முடிவெடுத்து ஆளுக்கொரு பாதையில் பயணிக்க தொடங்கினர். இருந்தபோதும், இருவரும் இணைந்து நடித்து, இருவரது படங்களும் (நினைத்தாலே இனிக்கும் & தாய் இல்லாமல் நான் இல்லை) படங்கள் வெளியாகின என்பது ஆச்சரியமான தகவல்தான்.

9 முறை தீபாவளியில் மோதிக்கொண்ட கமல் - ரஜினி!

அது தொடர்ந்து, 9 முறை இவர்களது படங்கள் தீபாவளி பண்டிகையின்போது ஒரே நாளில் வெளியாகியுள்ளன.

1983ல் ரஜினியின் தங்க மகன் திரைப்படமும், கமலின் தூங்காதே தம்பி தூங்காதே படமும் தீபாவளி அன்று வெளியாகியிருந்தன. இதில் தங்கமகன் படம் 100 நாட்களுக்கு தியேட்டரில் ஓடிய நிலையில், கமல் படமோ 175 நாட்களுக்கு ஓடியது.

diwali winner
JAPAN | இன்னும் எத்தனை துயரங்களைத்தான் தருவாய் கர்த்தரே..!

1984ல் எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, கமல் இருவரின் படங்களும் வெளியாகின. இதில் ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன் 175 நாட்களை கடந்து ஓடிய நிலையில், கமலின் எனக்குள் ஒருவன் படம் 100 நாட்களை தாண்டியது. இந்த ரேஸில் அதற்கு முந்தைய ஆண்டு விட்டதை பிடித்திருந்தார் ரஜினி.

1985: மூன்றாவது முறையாக மீண்டும் தீபாவளி பண்டிகைக்கு ரஜினி - கமல் படங்கள் மோதியது 1985ம் ஆண்டு வெளியானது. ராஜசேகர் இயக்கத்தில் வெளியான ரஜினியின் படிக்காதவன் படம் 235 நாட்களையும் தாண்டி ஓடியது. ஆனால் எஸ்.பி முத்துராமனின் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான ஜப்பானில் கல்யாணராமன் படம் 150 நாட்களை மட்டுமே கடந்தது. இதிலும் ரஜினியே முன் நின்றார்.

1986: இந்த ஆண்டு தீபாவளிக்கும் படிக்காதவன் பட கூட்டணி ஒன்றிணைந்து மாவீரன் படத்தை வெளியிட்ட நிலையில், கே. பாலச்சந்தர் இயக்கத்தில் புன்னகை மன்னன் படத்தில் நடித்திருந்தார் கமல்ஹாசன். இரு படங்களும் 100 நாட்களை கடந்தாலும், மக்கள் கூட்டம் என்னவோ, புன்னகை மன்னனை நோக்கி படையெடுத்தது.

diwali winner
ஜெயிலரிடம் தோற்றுவிட்டதா லியோ…? ரூ.540 கோடியோடு முடிந்த வசூல் விவரம்! இன்றே கடைசி நாள்

1987 தீபாவளிக்கு எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினியின் மனிதன் படம் வெளியானது. ஆனால், மணிரத்தினத்துடன் கைகோர்த்த கமல்ஹாசன், நாயகன் என்ற ஹிண்டஸ்ட்ரி ஹிட் படத்தை கொடுத்தார். இயக்கம் - நடிப்பு - இசை என்று படத்தை கொண்டாடி தீர்த்தது ரசிகர் படை. இந்த ரேஸில் ரஜினி 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார்.

தொடர்ச்சியாக 5 முறை தீபாவளி திருவிழாவில் மோதியிருந்த கமல் - ரஜினி படங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளை கழித்து, 1989ல் மீண்டும் களமிறக்கப்பட்டன. ரஜினியின் மாப்பிள்ளை படத்துக்கு எதிராக கமலின் 100வது படமான வெற்றிவிழா களமிறங்கியது. ஆனால், வெற்றிவிழா படம் வித்தியாசமான முயற்சி என்று சிலாகிக்கப்பட்டாலும், மக்கள் கூட்டம் மாப்பிள்ளை படத்தை கொண்டாடியது.

கமலுக்கு தளபதியாக நின்று ஹிண்டஸ்ட்ரி படமான நாயகனை கொடுத்த மணிரத்னம், 1991ம் ஆண்டு ரஜினியுடன் கைகோர்த்தார். அப்படி உருவான படம்தான் தளபதி. 1991ம் ஆண்டு ரஜினியின் தளபதியும், கமலின் குணா படமும் தீபாவளிக்கு வெளியாகின. இதில் குணாவாக நடித்த கமலின் நடிப்பு மெச்சப்பட்டாலும், தளபதியோ டாப் ஹிட் அடித்தது.

1992ல் தேவர் மகனாக களத்தில் இறங்கினார் கமல்ஹாசன். ரஜினிகாந்த் பாண்டியன் படத்தில் நடித்திருந்தார். இருவரது படங்களும் தீபாவளிக்கு வெளியான நிலையில், பாண்டியனை ஓரம் கட்டி, பெரிய ஹிட் அடித்தது தேவர் மகன். சில சர்ச்சைகளை கிளப்பினாலும், 1992ம் ஆண்டு தீபாவளி வின்னர் என்றால் அது கமல்ஹாசனின் தேவர்மகன்தான்.

diwali winner
அடேங்கப்பா.. ஜப்பான் படத்தோட கதையே இதுதானா! தமிழ்நாட்டை உலுக்கிய 5 நகைக்கடை கொள்ளை சம்பவங்கள்!

இரண்டு வருட இடைவேளிக்கு பிறகு 1995ல் மீண்டும் இருவரது படங்களும் தீபாவளி ரேஸில் இணைந்தன. இதில், கே.எஸ் ரவிக்குமார் - ரஜினியின் கூட்டணியில் உருவான முத்து பெரிய அளவில் ஹிட் ஆனது. கமல்ஹாசனின் குருதிப்புணல் படமும் ஹிட்டுதான் என்றாலும், முத்துவாக முதல் இடத்தை பிடித்தார் ரஜினி. இப்படி இருவரும் 1995ம் ஆண்டு வரை தீபாவளி பண்டிகையின்போது போட்டியிட்டதில், ரஜினியே அதிக முறை முதல் இடத்தை பிடித்திருந்தார். இருந்தாலும், உலக நாயகனையும், சூப்பர் ஸ்டாரையும் இன்றுவரை கொண்டாடி வருகிறது ரசிகர் கூட்டம்.

கமல், ரஜினிக்கு பிறகு பெரிய ரசிகர் பட்டாளங்களை உருவாக்கிய அஜித் மற்றும் விஜய் இருவரும் 90களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து, இன்றைய டாப் ஹீரோக்களாக மாறியுள்ளனர். இவர்களின் முன்னோடிகளான கமல், ரஜினிபோல், இவர்கள் இருவரும் தீபாவளி மற்றும் பொங்கல் திருவிழாக்களின்போது படங்களை களமிறக்கியுள்ளனர்.

தீபாவளியும் விஜய் - அஜித் படங்களும்!

அந்த வகையில், 2002ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது அஜித்தின் வில்லன் படமும், விஜய்யின் பகவதி படமும் ஒரே நாளில் வெளியாகின. இதில் வில்லன் ஓரளவுக்கு ஓடியது. பகவதியோ சுமாரான படமாக அமைந்தது.

தொடர்ந்து, 2003ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது அஜித்தின் ஆஞ்சனேயாவும், விஜய்யின் திருமலையும் வெளியாகின. இந்த வருடத்தில் விஜய்யின் திருமலை ஹிட் அடித்தது. ஆஞ்சனேயா படமோ படுத்தேவிட்டது. தீபாவளி ரேஸில் ஆளுக்கு ஒருமுறை அஜித்தும் விஜய்யும் வெற்றிப்படங்களை கொடுத்திருந்தனர்.

ஆனால், பொங்கல் திருவிழா ரேஸில் 2001ம் ஆண்டு தீனா - பிரண்ட்ஸ் 2, 2006ல் பரமசிவன் - ஆதி, 2007ல் போக்கிரி - ஆழ்வார், 2014ல் வீரம் - ஜில்லா என்று தொடங்கி கடைசியாக இந்த ஆண்டு பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு படங்கள் வெளியாகின. இதில் வாரிசை மிஞ்சி துணிவு படம் வெற்றியைப் பெற்றது. இதற்கு இடைப்பட்ட காலங்களில் இவர்கள் இருவரது படங்கள் பல முறை தீபாவளி பண்டிகையின்போது வெளியானாலும், அவை தனியாகவே களம் கண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீபாவளிக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் லாரன்ஸ் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும், ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ஜப்பான் படமும் வெளியாகியுள்ளது. விக்ரம் பிரவுவின் ரெய்டு மற்றும் காளி வெங்கட்டின் கிடா ஆகிய படங்களும் வெளியாகியுள்ளன. இதில் அதிகம் எதிர்பார்க்கப்படட்து ஜிகர்தண்டா2 மற்றும் ஜப்பான். ஜப்பான் படத்திற்கு அதிகம் எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஜிகர்தண்டா 2 படத்திற்கு பாசிட்டிவ் ஆன விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதனால், ஜிகர்தண்டா படமே ரேஸில் முந்துவதற்காக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com