அமராவதி,வாலி,விடாமுயற்சி.. 'மார்க் ஆண்டனி'-ல் அஜித் ரெஃபரன்ஸ்கள்..திரையரங்கை அதிரவைக்கும் ரசிகர்கள்

‘மார்க் ஆண்டனி’யின் முதல் காட்சி நிறைவடைந்ததும் தியேட்டர் வாசலில் ஆதிக் “என்னுடைய ஜானரை மாத்தி இது போல் ஒரு படத்தை எடுக்க காரணமே அஜித் சார் தான்” - ஆதிக்
அஜித்குமார், ஆதிக்
அஜித்குமார், ஆதிக்pt web

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களின் ரெஃபரன்ஸை படத்தில் வைப்பது மிக பழக்கப்பட்டதுதான். அப்படி பல படங்களில் பார்வையாளர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர்கள். அப்படி சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியான `மார்க் ஆண்டனி’ படத்திலும் ஒரு நடிகரின் ரெஃபரன்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது நடிகர் அஜித்தின் ரெஃபரன்ஸ்தான். அவற்றுக்கு தியேட்டரிலும் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. சமூக வலைதளங்களிலும் அவற்றைப் பாராட்டி பலரும் எழுதி வருகிறார்கள். அவை என்ன என்று இப்போது பார்க்கலாம். (இந்தக் காட்சிகள் படத்தின் மையக் கதையோடு தொடர்புடையது அல்ல. இருந்தாலும், படம் பார்க்கும் போது இந்த சர்ப்ரைஸ் கெட்டுவிடும் என நினைத்தால் தொடர்ந்து படிக்க வேண்டாம்.)

உலகமே அவர் பேர யோசிக்காம சொல்லும்

1. படம் துவங்கி எல்லா கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தும் போது ஜாக்கி பாண்டியனின் (எஸ்.ஜே.சூர்யா) இரண்டாவது மகனுக்கு சினிமாவில் நடிக்க ஆசை என குறிப்பிடுவார்கள். மேலும் அவர் ஒரு படத்திற்கான ஆடிஷன் சென்றதைப் பற்றி கேட்பார் ஜாக்கி. அப்போது “என்கூட வாய்ப்பு தேடி இன்னொருத்தர் வந்திருந்தார், அவர் என்னவிட திறமையானவர்னு எனக்குப் புரிந்தது. அதனால ஆடிஷன்ல கலந்துக்காம வந்துட்டேன்” என்பார். அவர் பெயர் என்ன எனக் கேட்டதும். “எதோ ஏ ல ஆரம்பிக்கும்.... ம்ம்ம்ம் அஜித்குமார்.” என்பார். உடனே ஜாக்கி பாண்டியன் கதாப்பாத்திரம் “இன்னைக்கு நீ யோசிச்சு யோசிச்சு சொல்ற இந்த பேர நாளைக்கு உலகமே யோசிக்காம சொல்லும்” என்பார். அமராவதி படத்தில் அஜித்குமார் அறிமுகமானதை மையப்படுத்தி, ஒரு கற்பனையான காட்சியை உருவாக்கியிருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன்.

எனக்கே வாலியா?

2. இன்னும் சில காட்சிகளுக்குப் பிறகு மார்க் ஆண்டனி (விஷால்) - மதன் பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா) இருவரும் ரம்யா (ரித்து வர்மா) என்ற பெண்ணைக் காதலிப்பார்கள். அது குறித்து பிரச்சனை நடக்கும் போது அந்த இடத்திற்கு வருவார் ஜாக்கி பாண்டியன் (எஸ்.ஜே.சூர்யா). பிரச்சனை தெரிந்ததும், “உன்னோட தம்பி”,

ஜாக்கி பாண்டியன்: டேய் மார்க் யாருடா?

மதன் பாண்டியன்: என்னோட தம்பி

ஜாக்கி பாண்டியன்: உன்னோட தம்பி பொண்டாட்டி உனக்கு யாரு?

மதன் பாண்டியன்: இல்லப்பா அவள நா...

ஜாக்கி பாண்டியன்: ஓ என்னடா வாலி கதையா? எனக்கே வாலியா?

என எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித்குமார் நடித்த வாலி படக்கதை ரெஃபரன்ஸை வைத்திருந்தார்.

விடாமுயற்சி

3. இன்னொரு முக்கியமான காட்சியில் ஒரு கதாபாத்திரத்தைக் கொலை செய்ய இரண்டு பேர் திட்டமிடுவார்கள். முதல் முயற்சி தோல்வியடையும், இரண்டாவது முயற்சியும் தோல்வியடையும், அதுவரை அந்த முதல், இரண்டாம் என திரையில் எழுத்து வரும். அடுத்த முறை திட்டத்திற்கு `விடாமுயற்சி’ எனப் பெயர் திரையில் வந்ததும் மொத்த தியேட்டரும் ரசிகர்கள் குரலால் அதிர்ந்தது.

மேலும் ஆதிக் ஒரு அஜித் ரசிகர் என்பதை பல இடங்களில் தெரிவித்திருக்கிறார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். ஒரு பேட்டியில் அவருடன் பணியாற்றிய அனுபவம் பற்றிக் கூறும் போது “சின்னதாக மட்டுமே யோசிக்காதே, பெரிதாக யோசி” என்று உத்வேகம் கொடுத்தார். என் அம்மா, அப்பாவுக்கு அடுத்து என்னை மோட்டிவேட் செய்தது அஜித் சார் தான் என்று கூறியிருந்தார். ‘மார்க் ஆண்டனி’யின் முதல் காட்சி நிறைவடைந்ததும் தியேட்டர் வாசலில் ஆதிக் “என்னுடைய ஜானரை மாத்தி இது போல் ஒரு படத்தை எடுக்க காரணமே அஜித் சார் தான்” என்றார். எனவே அவரின் படத்தில் இத்தனை அஜித் ரெஃபரன்ஸ் இருப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com