அடேங்கப்பா.. ஜப்பான் படத்தோட கதையே இதுதானா! தமிழ்நாட்டை உலுக்கிய 5 நகைக்கடை கொள்ளை சம்பவங்கள்!

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் திரைப்படம் நாளை(நவ.10) திரைக்கு வருகிறது. நகைக்கடை கொள்ளையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டையே உலுக்கிய முக்கிய நகைக்கடை கொள்ளைகளை இந்த கட்டுரையில் காணலாம்.
japan movie
japan moviefile image

ஜப்பான் படத்தின் கதை இதுதானா?

நடிகர் கார்த்தியில் ஜப்பான் திரைப்படம் தீபாவளி ட்ரீட்டாக நாளை வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர் மட்டும் பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதில் மேட்டர் என்னவெனில், “கோவையில் நகைக்கடை ஒன்றில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், கார்த்தி சிக்குகிறார். போலீஸ் அதிகாரிகளுக்காக அவர் செய்த திருட்டு சம்பவங்களைத்தாண்டி, இந்த விவகாரம் அரசியல் ரீதியாக தொடர்புடையது என்பதால், போலீஸ் மற்றும் உயர் அதிகாரிகள் கார்த்தியை சுற்றி வளைத்து மடக்கிப்பிடிக்கின்றனர். இதிலிருந்து கார்த்தி எவ்வாறு தப்பினார் என்பதுதான் கதையாக இருக்கும்” என்கின்றனர் ட்ரெய்லரை அலசி ஆராய்ந்தவர்கள். 

திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தை வைத்தே படம் உருவாகியிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. இந்த நேரத்தில், வித்தியாசமான முறையில் சமீப காலங்களாக நடந்தேறிய நகைக்கடை கொள்ளைகளை அடுத்தடுத்த வரிகளில் பார்க்கலாம்.

japan movie
நள்ளிரவில் ஏற்பட்ட விபத்து: தூக்கி வீசப்பட்ட தூய்மைப் பணியாளர்.. கனரக வாகனம் ஏறியதில் பரிதாப பலி

திருச்சி: சுவற்றை துளைத்து 12 கிலோ நகை கொள்ளை. நடந்தது எப்படி? 

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்தேறிய கொள்ளை சம்பவம் பெரும் பேசுபொருளானது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி அதிகாலையில், கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், ரூ 12 கோடி மதிப்புள்ள 28 கிலோ தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்கள், நள்ளிரவு 2 மணி வாக்கில் கடையில் புகுந்து காலை 4.30 மணி வரை சாவகாசமாக முகமூடி அணிந்த படி நகைகளை திருடிச்சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்தது. இதையடுத்து, கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டு தேடியதில், திருவாரூரைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

சம்பவத்தில் அடுத்த நாளே 5 கிலோ தங்க நகைகளுடன் மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது தப்பியோடிய முருகனின் அண்ணன் மகன் முரளி உட்பட சம்பவத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து, சுரேஷ் மற்றும் பிரபல கொள்ளையன் முருகனை தேடிய நிலையில், இருவரும் கோர்ட்டில் சரணடைந்தனர். தொடர் விசாரணையின் மூலம், திருடப்பட்ட நகைகள், காவிரி ஆற்றுப்படுகையில் புதைத்து வைத்திருந்த நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதையடுத்து, 6 கிலோ தங்க நகைகள் கடை ஒன்றில் விற்கப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கணேசன் என்பரையும் போலீஸார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில், காஸ்ட்லியான முகமூடிகளை அணிந்து திருடினால் சிக்கிக்கொள்வோம் என்றும், சாதாரண ஒரு ஃபேன்ஸி ஸ்டோரில் முகமூடிகளை வாங்கியதாகவும் மணிகண்டன் வாக்குமூலம் அளித்தார். குறிப்பாக திருட்டின் போது யாரும் செல்போனை பயன்படுத்தவில்லை. யாராவது வருகிறார்களா என்பதை பார்த்து சிக்னல் கொடுக்க வெளிப்புரத்தில் ஒருவரை நிற்க வைத்து திருடியுள்ளனர். அதுவும் ஒரு கையிரை இழுத்து சிக்னல் கொடுப்பது போல, ஹாலிவுட் பட பாணியில் கொள்ளையடித்தனர். இதனையடுத்து எய்ட்ஸ் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோயால் பாதிக்கப்பட்ட முருகன் கடந்த 2020ம் ஆண்டு உயிரிழந்தார். 2010ம் ஆண்டு முதல் நடத்திய பல கொள்ளைகளின் மூலம், சினிமா ஃப்ரொடக்‌ஷன், நடிகைகளுடன் உல்லாசம் என்றும் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துவந்த முருகன், திருச்சி சம்பவத்தில் சிக்கிய பிறகு தீராத நோயாள் சிறைவாச காலத்தில் இறந்தார் முருகன்.

japan movie
சனாதன வழக்கு: உதயநிதி தரப்பு வாதமும் உயர்நீதிமன்றத்தின் முடிவும்

சென்னையை உலுக்கிய ஜெ.எல் கோல்டு பேலஸ் திருட்டு!

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள ஜெ.எல் கோல்டு பேலஸ் நகைக்கடையில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி வெல்டிங் மிஷினால் ஷட்டரில் துளை போட்டு 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பின்னர் இதுகுறித்து நகைக்கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரன் என்பவரின் மகன் ஸ்ரீதர் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து திருவிக நகர் போலீசார் கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் டவரை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

பின்னர் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய கொள்ளையன் கங்காதரன் மற்றும் ஸ்டீபன் ஆகிய இருவரும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் போலீசாரிடம் இரண்டரை கிலோ தங்க நகைகளுடன் பிடிப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சென்னை தனிப்படை போலீசார் பெங்களூர் சென்று விசாரணை செய்து கொள்ளையில் தொடர்புடைய கஜேந்திரன்(31) மற்றும் திவாகரன்(28) ஆகிய இருவரை கைது செய்து வெல்டிங் மிஷின் சிலிண்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பெங்களூர் போலீசாரிடம் பிடிப்பட்ட கொள்ளையன் கங்காதரன், ஸ்டீபன் இருவரையும் நீதிமன்ற அனுமதியோடு சென்னை போலீசார் கைது செய்தனர். இதில் இரண்டு கிலோ தங்கம் பெங்களூரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து முக்கிய கொள்ளையன் கங்காதரனை மட்டும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு அழைத்து சென்று மீதமுள்ள நகை மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய அருண் மற்றும் கவுதம் ஆகிய இரண்டு பேர் குறித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் கொள்ளையன் கங்காதரனின் மனைவி கீதா (26)மற்றும் அவரது மைத்துனரான ராகவேந்திரர் (25) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து மூன்று சொகுசு கார்கள் மற்றும் சுமார் 400 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த அருண் மற்றும் கவுதம் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அருண் என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து சுமார் 750 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அருண், சென்னையில் பெரம்பூர் பகுதியில் பழைய வாகனங்கள் விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்ததும், அப்போது காவலாளி இல்லாத நகைக்கடை என்பதை நோட்டமிட்டு அவரது கூட்டாளிகளுக்கு தகவல் கொடுத்து கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. மேலும் அருண் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளை வழக்கில் இதுவரை 7 நபர்கள் கைது செய்யப்பட்டு மொத்தம் 5 கிலோ 850 கிராம் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தனிஆளாக16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த ஆசாமி! 

வேலூர் மாநகருக்குட்பட்ட வேலூர் - காட்பாடி சாலையில் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையின் பின்புற சுவற்றை துளையிட்டு 2021ம் ஆண்டு டிசம்பர் 15 - ம் தேதி சுமார் 16 கிலோ தங்க நகைகள் , வைர நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது. இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அணைக்கட்டு தாலுகா குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த டீக்காராமன் என்பவரை காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து நகைகளை மீட்டனர்.

பின்னர் டீக்காராமனை வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து, டீக்காராமனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைத்து சிறைக் காவலை நீட்டிப்பு செய்ய வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். SP -யின் பரிந்துரையின் அடிப்படையில் டீக்காராமன் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்படு அதன் கீழ் சிறைக் காவலை நீட்டிக்கப்பட்டது.

துப்பாக்கி முனையில் அரங்கேறிய நகைத்திருட்டு!

முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் நகைக் கடையில் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞருக்கு இரண்டு பிரிவில் 7 மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடந்த 2013 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் பெரியகுளம் சாலையில் உள்ள தங்கமயில் நகை கடையில் பட்டப்பகலில் முகமூடி அணிந்தபடி மர்ம நபர்கள் புகுந்தனர். அப்போது துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி 50 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர் உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த கேரள குமார் என்ற பரமதுரை தெரிய வந்ததை தொடர்ந்து தேனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபபட்டு வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில், கேரள குமார் என்ற பரமதுரைக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குற்றவாளி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

japan movie
கரணின் கேரியரில் மறக்க முடியாத ரோல்... கோழைத்தனமும் கையாலாகததனமும் நிறைந்த ஐ.சி.மோகனை நினைவிருக்கா?

லிஃப்ட் வழியாக நடந்தேறிய நகைத்திருட்டு!!

சென்னை தாம்பரம் அடுத்த கெளரிவாக்கத்தில் உள்ள ப்ளுஸ்டோன் தங்க நகைக்கடையில், கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி காலை 4.20 மணியளவில் கடைக்குள் பைப் வழியாக ஏறிச் சென்று லிப்ட் வழியில் இறங்கி உள்ளே சென்று தங்க-வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. தொடர்ந்து கடையில் திருட்டு நடப்பது குறித்து மேலாளர் ஜெகதீசன் என்பவருக்கு அலாரம் மூலம் தகவல் சென்ற நிலையில், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கபட்டு சேலையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். நிகழ்விடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில நபர் என்பதை உறுதிபடுத்தினர்.

பின்னர் அப்பகுதி முழுவதும் தனிப்படை போலீசார் சோதனையிட்டு அருகில் சுற்றித் திரிந்த நபரை கைது செய்தனர். அதனையடுத்து மேலும் சம்பந்தப்பட்ட இரண்டு சிறார்களையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சோழிங்கநல்லூர் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது “கொள்ளையர்கள் லிப்ட் துவாரம் வழியாக கடைக்குள் சென்று கதவை உடைத்து திருடியுள்ளனர். 3 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கடையில் இருந்த நிலையில், லாக்கரில் இருந்த நகை தவிர்த்து மீதியிருந்த நகைகள் கொள்ளை போனது. திருடிய நகைகளை வீட்டில் வைத்து விட்டு கொள்ளையர்கள் வெளியில் வந்து சுற்றிதிரிந்துள்ளனர். கொள்ளையடிக்கும் திட்டத்தில் 3 மாதமாக வாடகை வீட்டில் தங்கி, நகை கடை பக்கத்திலுள்ள ரோஸ் மில்க் ராஜா என்ற கடையில் வேலை பார்த்து வந்து, இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதாக பேட்டியில் தெரிவித்தார்.

இப்படி கடந்த சில ஆண்டுகளாகவே, நகைக்கடைகளின் சுவற்றில் துளையிட்டு திருடுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

எழுத்து: யுவபுருஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com