VIDUTHALAI 2 Audio Launch | மைக்கைத் கோபமாக வைத்துச் சென்ற வெற்றிமாறன்..
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவருகிறது விடுதலை பாகம் - 2. இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மொத்தமும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் பேசிக்கொண்டிருந்தார். அவர் கூறுகையில், “ஒரு படம் எடுக்க நிறைய உழைப்பு தேவை. ஒரு சிலருடைய பார்வை மேல் மற்ற எல்லோரும் கண்மூடித்தனமாக வைக்கிற நம்பிக்கை. அந்த உழைப்பும் அந்த நம்பிக்கையும்தான் அந்த படத்தை முழுமைப்படுத்தும். விடுதலை எனும் கதைக்கு வேலை செய்ய ஆரம்பித்தது டிசம்பர் 2020. 4 வருடங்கள் வேலை இருந்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிக்கும்போது திருமணம் செய்தவர்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கும் அனுப்பிவிட்டனர். அத்தனை வருடங்கள் வேலை பார்த்துள்ளோம்.
இத்தனை காலமும் ஒரு கதை, ஒரு சித்தாந்தம், அதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்ற சிலர், அந்த சிலர் மேல் உள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையில் பயணித்த 450 பேர். கடந்த முறை பெயர் எழுதி அனைவரது பெயரையும் படித்தேன். அப்போது நேரம் இருந்தது. இப்போது அதற்கான நேரம் இல்லை. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் இருக்கின்றன.
படத்தில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் நன்றி. உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், கலை இயக்குநர்கள், ப்ரொடக்சன் என அத்தனை பேரும் அர்ப்ப்பணிப்புடன் இருந்தனர்” என கூறினார். அப்போது அருகில் இருந்த ஒருவர் ஏதோ ஒன்று கூற, டென்சன் ஆன வெற்றிமாறன், “நான்தான் யார் பெயரையும் சொல்லவில்லை என சொல்கிறேனே. டீம் என்றால் எல்லோரையும் சேர்த்துதானே” எனக் கூறிவிட்டு மைக்கைப் கோபமாக வைத்துவிட்டு சென்றார். இசைவெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் மைக்கை வைத்துவிட்டுச் சென்ற காட்சிகள் மட்டும் இணையத்தில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.