ஆளுநரின் தேநீர் விருந்து.. தவெக தலைவர் விஜய் புறக்கணிப்பா?
குடியரசு தினத்தன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். குடியரசு தினமான இன்று ஆளுநர் அளிக்க இருக்கும் தேநீர் விருந்துக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னதாகவே அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 24 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்திருந்த நிலையில், தவெக சார்பில் விஜய் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், கட்சி மாநாட்டில் பேசிய விஜய் ஆளுநர் பதவி வேண்டாம் என பேசியிருந்தார். அதேபோல ஆளுநர் உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியதை விஜய் கண்டித்தும் இருந்தார்.
ஆனால், டிசம்பர் 30 ஆம் தேதி ஆளுநரை நேரில் சந்தித்த விஜய், தமிழகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்த பிரச்சினைகள் தொடர்பாகவும், ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கான நிதியை பெற்று தர வேண்டும் என்பது போன்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு ஒன்றையும் அளித்திருந்தார்.
இந்நிலையில்தான், ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.