உலக புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் கே. எம். செரியன் காலமானார்
இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்த உலக புகழ்பெற்ற மருத்துவர் பத்ம ஸ்ரீ, கே. எம். செரியன் பெங்களூருவில் நேற்று காலமானார். அவருக்கு வயது 82.
மூளைச்சாவு அடைந்த நோயாளியிடமிருந்து இதயத்தை எடுத்து அதனை மற்றொரு நபருக்கு பொருத்தி வெற்றிகரமாக இந்தியாவில் முதல் இதய மாற்று அறுவைச் சிகிக்சையை செய்து காட்டிய மருத்துவர் கே. எம். செரியன்.
கேரள மாநிலம் காயங்குளத்தில் 1942ம் ஆண்டில் பிறந்த செரியன், மணிப்பாலில் உள்ள கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் பயின்றார் . அவர் இந்தியாவின் முதல் கரோனரி தமனி பைபாஸ் அறுவை சிகிச்சையை 1975 இல் சென்னை பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையக மருத்துவமனையில் செய்தார். அவர் ஃபிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் நிறுவனர் ஆவார், அங்கு அவர் இந்தியாவின் இரண்டாவது இதய மாற்று அறுவை சிகிச்சையை 1995 இல் செய்தார்.
அவர் நாட்டின் முதல் இதய-நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்த சாதனையோடு முதல் குழந்தை இதய அறுவை சிகிச்சையையும் செய்தார். செரியனை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு 1991 ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்தது. முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்கள் ஆர்.வெங்கட்ராமன் மற்றும் சங்கர் தயாள் சர்மா ஆகியோருக்கு கௌரவ அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார். பெங்களூரில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட செரியனுக்கு வயது முதிர்வின் காரணமாக திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச்சடங்கு வரும் வியாழக்கிழமை நடைபெறும் என்று அவரது மகள் சந்தியா செரியன் தெரிவித்துள்ளார்.