தண்டுவடத்தில் ஆழமாக இறங்கிய கத்தி; ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்டாரா சைஃப்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
சைஃப் அலிகானுக்கு கத்தி குத்து
சைஃப் அலி கானும், கரீனா கபூரும் இரு மகன்களுடன் மேற்கு பந்தராவில் இருக்கும் சத்குரு ஷரன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். முழுக்க முழுக்க பிரபலங்கள் சூழ்ந்து காணப்படும் இந்த பகுதியில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம்.
இந்தநிலையில், இன்று அதிகாலை, சைஃப் அலிகான் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்திருக்கிறார். திருடும் நோக்கத்துடன் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியை கத்தியை வைத்து அந்த நபர் மிரட்டியிருக்கிறார். சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்தப் பெண்ணைக் காப்பாற்ற சைஃப் அலி கான் குறுக்கிட்டு இருக்கிறார். அப்போது, சைஃப் அலி கானை சரமாரியாக குத்திவிட்டு, அந்த இடத்தைவிட்டு திருடர் தப்பியோடியிருக்கிறார்.
மர்ம நபரின் தாக்குதலால் தண்டுவடப் பகுதியில் படுகாயம் அடைந்திருக்கும் சைஃப் அலி கானுக்கு ஆறு இடங்களில் சரமாரியாக கத்திகுத்து ஏற்பட்டிருக்கிறது. சைஃப் அலிகான் உடலில் இருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறிய நிலையில், அவரது மகன் இப்ராஹிம் ஆட்டோவில் சைஃப் அலிகானை வீட்டில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஓட்டுநர் இல்லாததாலும், தயார் நிலையில் கார் ஏதும் இல்லாததாலும், உடனடியாக சைஃப் அலிகானை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்பொருட்டு ஆட்டோவில் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீவிர சிகிச்சையின் காரணமாக அபாய கட்டத்தில் இருந்து மீண்டார்
மருத்துவமனையில் சைஃப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது சைஃப் அலிகான் அபாய கட்டத்தில் இருந்து மீண்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், “அதிகாலை 3 மணியளவில் சைஃப் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முதுகெலும்பில் கத்தி குத்து ஏற்பட்டதால் கடுமையான காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது இடது கையில் இரண்டு ஆழமான வெட்டுக்காயங்களும், கழுத்தில் ஒரு ஆழமான காயமும் ஏற்பட்டிருந்த நிலையில் அறுவை சிகிச்சைக் குழுவினரால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் தற்போது நன்றாக குணமடைந்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சைஃப் அலிகானின் குடும்பத்தினருக்கு எவ்வித அசாம்பாவிதமும் நடக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் அறையில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சம்பவத்தின்போது, கரீனா கபூர் தன் தோழிகளுடன் இருந்ததாகவும், சைஃபும் குழந்தைகளும் மட்டுமே வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
10 குழுக்கள் அமைப்பு
இந்த சம்பவம் தொடர்பாக இப்போது வரை மூன்று பேரைக் கைது செய்து மும்பை போலீஸார் விசாரித்து வருகிறார்கள். குற்றவாளியைக் கண்டுபிடிக்க 10 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கும் முயற்சியிலேயே மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முக்கியமாக, தாக்குதல் நடப்பதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்புவரை மர்மநபர் யாரும் வீட்டிற்குள் நுழைவது போன்ற சிசிடிவி காட்சிகள் பதிவாகவில்லை. எனவே, மர்மநபர் வெகுநேரத்திற்கு முன்பே வீட்டிற்குள் நுழைந்து சரியான நேரத்திற்காக காத்திருந்ததாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதுமட்டுமின்றி, சைஃப் அலிகான் வீட்டில் வேலை செய்யும் ஒருவருடன் கொள்ளையடிக்க வந்தவர் தொடர்பில் இருந்ததாகவும், அவரது உதவியுடன்தான் மர்மநபர் கொள்ளையடிக்க வந்ததாகவும் காவல்துறையினர் ஊகிக்கின்றனர்.
தாக்குதலுக்குப் பிறகு மர்மநபர் படிக்கட்டு வழியாக தப்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏனெனில், 12 ஆவது மாடியில் சைஃப் அலிகானின் வீடு இருக்கும் நிலையில் 6 ஆவது மாடியில் உள்ள சிசிடிவி கேமராவில் மர்மநபரது காட்சிகள் பதிவாகியுள்ளன.
எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம்
பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் உள்ள பகுதியில், எப்படி இவ்வளவு எளிதாக ஒருவர் நுழைந்து சைஃப் அலிகானை தாக்க முடியும்? என்னும் கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. நடிகை பூஜா பட், தான் ஒருபோதும் இம்மாதிரி பாதுகாப்பற்று உணர்ந்ததில்லை என்றும் பாந்த்ராவில் கூடுதலான போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸை வலியுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சிகள் ஆளும் கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்துவருகின்றன.
ஆதித்யா தாக்கரே இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீரழிந்து உள்ளது என்பதைக் காட்டுகிறது. குற்றங்களை தடுப்பதிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் இந்த அரசாங்கம் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.