கேரளா | 350 கிராம் எடையில் பிறந்த குழந்தை... உயிர் பிழைக்க வைத்து அசத்திய மருத்துவர்கள்!
கேரள மாநிலம் கொச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சஷிஷா என்ற பெண். இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தையின் எடை 350 கிராம் மட்டுமே இருந்துள்ளது.
இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு மருத்துவ நிபுணர் டாக்டர் ரோஜோ ஜாய் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 100 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை கொடுத்து வந்துள்ளனர். வெற்றிகரமாக சிகிச்சை முடிந்த நிலையில் குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும், குழந்தையின் பெயர் நோவா என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை எடைக்குறைந்து பிறந்ததற்கான இரண்டு காரணங்கள் குறித்து பேசிய மருத்துவர் ரோஜோ ஜாய், “குழந்தைகள் சரியான எடையில் பிறக்க வேண்டும் எனில், குறைந்தது தாயின் வயிற்றில் 24 வாரங்கள் தேவைப்படுகிறது. ஆனால், நோவா 23 வாரங்களிலேயே பிறந்துவிட்டார். மேலும், தாய்க்கு தொற்று பாதிப்பும் இருந்தது.
அந்த தொற்று, குழந்தைக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டது. குழந்தையின் உறுப்புகள் வளர்ச்சியடையாததால், பிறந்தவுடன் குழந்தைக்கு உடனடியாக செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் ஒரு மாதத்திற்கு பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் குழந்தை பராமரிக்கப்பட்டது. உடல் எடையை அதிகரிக்க சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தற்போது, நோவா 1.850 கிலோ என்ற அளவில் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 350 கிராம் எடையுடன் பிறந்த நோவா, தெற்கு ஆசியா நாடுகளில் மிகக்குறைவான எடையுடன் பிறந்த குழந்தை என்ற பெயரை தற்போது பெற்றுள்ளார்.