இது வடசென்னையின் கதை.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் Back to Back Treat!!
துவக்கப்புள்ளி
ஒரு படம் ஷூட் முடிந்து வெளியாவது வரை பல மாற்றங்களுக்கு உள்ளாகும் என்பது சினிமாவில் எழுதப்படாத விதி. அப்படி துவங்கப்பட்டு நடக்காமல் போவதும், திடீரென எதிர்பாராத கூட்டணி இணைவதும் சினிமாவில் மிக சகஜம். அப்படி இணைந்துள்ளதுதான் வெற்றிமாறன் - சிம்பு கூட்டணி. ஆனால், உண்மையில் இந்தக் கூட்டணி எப்போதோ இணைந்திருக்க வேண்டிய ஒன்று. வெற்றி - சிம்பு இணைப்பின் துவக்கப்புள்ளி வடசென்னை. அந்த துவக்கப்புள்ளியில் இருந்து, இப்போது இவர்கள் இணைந்துள்ள படத்தின் விவரம் வரை சொல்லும் தொகுப்பே இது.
வெற்றிமாறன் தனது முதல் படத்திற்கான கதை உருவாக்க சமயத்தில் நண்பர் ஒருவர் மூலம் பைக் திருட்டு சம்பந்தமான விவரங்களைக் கேட்டு தெரிந்துகொள்ள ஒருவரை சந்திக்க சென்றிருக்கிறார். இந்த சந்திப்புதான் `வட சென்னை' படத்தின் துவக்கப்புள்ளி. பைக் திருட்டு பற்றி எல்லாம் வேறு நபர்களுக்குத்தான் தெரியும்; ஆனால், எனக்கு தெரிந்த வேறு விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன் என, அண்டர்வேர்ல்டு சம்பந்தமான உண்மை சம்பவங்களையும் வெவ்வேறு குழுக்களையும் பற்றி கூறியிருக்கிறார் அந்த நபர். பேச்சு சுவாரஸ்யத்தில் பெயர்கள், சம்பவங்கள் மறந்துவிடக் கூடும் என்பதற்காக இதை ஒரு கதையாக 80 பக்க நோட்டு ஒன்றில் எழுதி வெற்றிமாறனுக்கு கொடுத்திருக்கிறார்.
நாயகர்கள் மாறிய கதை
எனவே பைக் கதையை ஓரம் கட்டிவிட்டு இந்தக் கதையினை கையில் எடுத்திருக்கிறார் வெற்றி. ஆனால், அப்போது இந்தப் படத்தை எடுக்க முடியாமல் இருந்திருக்கிறது. ஏனெனில், 70களின் மையத்தில் இருந்து 2003 வரையிலான நிகழ்வுகளை அவர் கூறியிருக்கிறார். அதற்கான பட்ஜெட் அப்போது கிடைக்காது என்பதால், மீண்டும் பைக் திருட்டு கதைக்கே சென்றுவிட்டார். அதுதான் பொல்லாதவன். இதற்குப்பின் 2010-ல் வடசென்னை கதையை கார்த்தியை வைத்து எடுப்பதாக திட்டமிட்டதாகவும், நாயகியாக அனுஷ்கா நடிக்க இருந்தார் எனவும் சொல்லப்பட்டது. அதன்பின்பு சில தாமதங்கள் ஏற்பட, வேறு நடிகர்களை வைத்து எடுக்க திட்டமிடப்பட்டது.
அப்படி 2011ல் அறிவிக்கப்பட்ட பெயர் தான் சிம்பு. ஜி வி பிரகாஷ் இசை, வேல்ராஜ் ஒளிப்பதிவு, Cloud Nine Movies தயாநிதி தயாரிப்பு என பரபரப்பாக தயாரானது குழு. இந்த சமயத்தில் ஆண்ட்ரியா ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் உறுதிசெய்யப்பட்டது. வெற்றிமாறனே ஒரு பேட்டியில் சொன்னது போல, வடசென்னையில் கடைசி வரை மாறாமல் இருந்த ஒரே நபர் ஆண்ட்ரியா மட்டும்தான். ராணா டகுபதி முக்கிய ரோலில் நடிப்பது எனவும் முடிவானது. ஆனால், சில தேதி பிரச்சனைகளால் அது முடியாமல் போனது. சிம்பு வருவது தாமதமாகவே அவரை மாற்றிவிட்டு ஜீவாவை நடிக்க வைக்கும் பேச்சுவார்த்தை சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
வடசென்னை
ஆனால், வெற்றிமாறனின் இந்தப் படம் தள்ளிவைக்கப்படுகிறது அவர் வேறொரு படத்தை தனுஷ் நடிப்பில் இயக்குவார் என முற்றுப்புள்ளி வைத்தது தயாரிப்பு நிறுவனம். அப்படி துவங்கப்பட்ட படம்தான், தனுஷ் - பார்த்திபன் நடிப்பில் `சூதாடி'. ஆனால், சில நாட்கள் படப்பிடிப்புக்கு பின் அந்தப் படமும் கைவிடப்பட்டது. பின்னர் தனுஷ் நடிப்பில் வடசென்னை உருவாகும் என 2015ல் வேலைகள் துவங்கின, அப்போது விஜய் சேதுபதியும் இப்படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. இரு பாகங்களாக திட்டமிடப்பட்டது இப்படம். பின்னர் விஜய் சேதுபதி படத்தில் நடிக்கமுடியாமல் போனது. பின்பு ஒரு வழியாக 2016 ஜூன் 22ல் வடசென்னை பூஜையுடன் துவங்கியது. மூன்று பாகங்களாக படம் உருவாகும் எனவும் அறிவிக்கப்பட்டது.
வடசென்னை முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்து, அடுத்த பாகம் எப்போது என ரசிகர்கள் காத்திருந்த வேளையில், அசுரன், பாவக்கதைகள், விடுதலை இரு பாகங்கள் என அடுத்தடுத்து படங்கள் செய்தார். அடுத்து வாடிவாசல் என வேலைகள் சென்று கொண்டிருந்த சமயத்தில் ரசிகர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ் தான், வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.
இப்போது இந்தப் படத்தின் நிலை என்ன என்றால், படத்திற்கான புரமோஷன் வீடியோ படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. வடசென்னை பற்றிய படமாகதான் இதுவும் உருவாகும் என சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்க உள்ளது. விரைவில் இப்படத்தை உருவாக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். சீக்கிரமே புரோமோ வீடியோ வெளியாகும் என சொல்லப்படுகிறது. இது தவிர வெற்றிமாறனும் சரி, தனுஷும் சரி வடசென்னை 2, அடுத்த ஆண்டு உருவாகும் என சொல்லி இருக்கிறார்கள் எனவே ரசிகர்களுக்கு பேக் டூ பேக் ட்ரீட் என்பது மட்டும் உறுதி.