கிடுகிடு வளர்ச்சியில் ட்ரோன் சந்தை.. ரூ.300 கோடிக்கு ஆர்டர் கொடுத்துள்ள இந்திய ராணுவம்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கி பாகிஸ்தான் எல்லையில் இருந்த 9 தீவிரவாதிகளின் தாக்குதல் முகாம்களை அழித்தது. இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் இந்தியாவின் ட்ரோன் சந்தை வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. ஏறக்குறைய 300 கோடி ரூபாய்க்கு ட்ரோன்களை வாங்குவதற்கு இந்திய ராணுவம் ஆர்டர் கொடுத்துள்ளது. இதில் சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோ ஸ்பேஸ் என்ற நிறுவனத்திடம்158 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இரவிலும் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை பெற்றவை. இதேபோல் கண்காணிப்பு, செங்குத்தாக கிளம்பி தரையிரங்கும் ஆற்றல், அதிக தூரம் பாய்தல் ஆகிய அம்சங்களை கொண்ட ட்ரோன்களை ஐடியா ஃபோர்ஜ் டெக்னாலஜி என்ற நிறுவனத்திடம் 137 கோடி ரூபாய்க்கு இந்திய ராணுவம் ஆர்டர் செய்துள்ளது. 2023-ஆம் ஆண்டு 23 ஆயிரத்து 048 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த இந்திய ட்ரோன் சந்தை, 2030-ஆம் ஆண்டு 7 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது . பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு பின் ட்ரோன்களையும், ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு கருவிகளையும் வாங்குவதில் இந்திய ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.