’டோரதி’ படத்தில் இலுமினாட்டி டாலர்? உண்மை என்ன? உடைத்து பேசிய கார்த்திக் சுப்புராஜ்!
‘டோரதி’ திரைப்படத்தில் திருநங்கைகளின் வாழ்க்கை சிக்கல்களை உண்மைக்கு நெருக்கமாக சித்தரித்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இலுமினாட்டி குறித்த வதந்திகளுக்கு பதிலளித்து பேசியுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ’டோரதி’. இப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்தே சில தரப்பினரால் விமர்சிக்கப்பட்டும், மற்றொரு தரப்பினரால் பாராட்டப்பட்டும் வருகிறது.
திரைப்படத்தை பொறுத்தவரையில் ஒரு ஆண் திருநங்கையாக மாறும் போது குடும்ப சூழல், சமூக கட்டமைப்பால் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறாள், இச்சமூகம் எப்படி அவரை பார்க்கிறது என்பதை மையமாக கொண்டு பேசப்பட்டுள்ளது. அதை உண்மைக்கு நெருக்கமாக படம்பிடித்து காண்பித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
இருப்பினும் படத்தின் முடிவில் நண்பர்களாக இருந்தவர்கள் காதலர்களாக மாறுவதும், முத்தக்காட்சியுடன் படத்தை முடித்ததும் சில தரப்பு ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதிலும் படத்திற்கு வைக்கப்பட்ட டோரதி தலைப்பு, சுப்புவாக நடித்திருக்கும் சனந்த் ஒரு காட்சியில் அணிந்திருக்கும் டாலர் என படத்தின் சில காட்சிகளையும், அதற்கான தொடர்பிலும் வேறு காரணம் இருக்கிறது என்றும், இது இலுமினாட்டி படம் என்றும் ஒருதரப்பினர் விமர்சனம் வைத்தனர்.
இந்தசூழலில் தான் அதுகுறித்த விளக்கத்தை கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
டோரதி திரைப்படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், சனந்த், ரிஷிகாந்த் மற்றும் படத்தில் நடித்த அனைத்து திரை நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் மிஸ்கின் மற்றும் வசந்த பாலன் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் படத்தில் இலுமினாட்டி சிம்பள் கொண்ட டாலர் பயன்படுத்தப்பட்டது குறித்து பேசிய அவர், “டோரதியைப் பார்த்த பல ஆண்கள் கண்ணீர்விட்டு இனிமேல் திருநங்கைகளைப் பார்க்கும் பார்வை மாறும் எனச் சொன்னதுதான் இப்படத்தின் தனிப்பட்ட வெற்றியாக நான் பார்க்கிறேன். இளையராஜா இசை இல்லையென்றால் இப்படம் இவ்வளவு தூரம் சென்றிருக்காது என்பதை உறுதியாக நம்புகிறேன். இப்படத்தைத் தவறாக பேசியவர்களால் நான் எந்தக் கவலையும் படவில்லை. நான் என் ரசிகர்களை நம்பினேன். அவர்கள் இந்த வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள்.
டோரதி படத்தை இலுமினாட்டி படம் என பல வதந்திகள் வந்தது. ஏனெனில் படத்தில் காண்பிக்கப்பட்ட டாலரை வைத்து இலுமினாட்டி என்றனர். படத்தின் காஸ்ட்யூம் டிசைனரிடம் இந்த டாலரை எங்கு வாங்கினீர்கள் எனக் கேட்டதற்கு, கடைசி நேரத்தில் திருமங்கலத்தில் உள்ள பேன்சி ஸ்டோரில் வாங்கியதாக கூறினார். திருமங்கலத்தில் எங்கடா இலுமினாட்டியை பிடிச்ச என்று கேட்டேன்” என பேசினார்.

