திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு ‘Dorothy'..! விஜய் ஆண்டனி பாராட்டு!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘டோரதி’ திரைப்படம், சமூகத்தின் பார்வையில் திருநங்கையாக மாறும் பெண்மையின் போராட்டத்தை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துகிறது. TIFF விழாவில் பாராட்டைப் பெற்ற இப்படம், விஜய் ஆண்டனியின் புகழ்ச்சியையும் பெற்றுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ‘டோரதி (Dorothy). கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார்.
படம் வெளியாவதற்கு முன்பே டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா (TIFF)-வில் திரையிடப்பட்ட டோரதி, அங்கு பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் அப்போது படத்தை பார்த்த பலரிடமிருந்து பாராட்டையும் பெற்றது. இதற்கிடையில் இளையராஜா இசையில் வெளிவந்த கல்யாண விருந்து, முத்துமணி பாடலும் ரசிகர்களை கவர்ந்ததால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறியது.
இந்தசூழலில் வெளியாகியிருக்கும் டோரதி திரைப்படம் ஆண் திருநங்கையாக மாறும் போது குடும்ப சூழல், சமூகத்தால் எப்படி பாதிப்பிற்குள்ளாகிறாள், இச்சமூகம் எப்படி பார்க்கிறது என்பதை மையமாக பேசுகிறது. முடிவில் தனக்கும் இருக்கும் பெண்மையை சமூகத்திற்காக அடக்கிவைக்காமல் சுதந்திர பறவையாக ‘திருநங்கையாக’ மாறுவதும், சிறுவயது நண்பனை இறுதியில் காதலனாக கைக்கோர்ப்பதுமாக படம் முடிகிறது.
ஒருபக்கம் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனமும், இறுதியில் வைக்கப்பட்ட முத்தக்காட்சியும் சிலதரப்பு ரசிகர்களை அதிருப்தி அடையவைத்திருக்கும் சூழலில், பலபேர் படத்திற்கு பாராட்டும் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் தான் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி டோரதி படத்தை பாராட்டியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “வாழ்த்துக்கள் கார்த்திக் சுப்புராஜ். #டோரதி மிக மிக சிறப்பான படம். திரையுலகம் சொல்ல மறந்த உன்னதப் படைப்பு. இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.

