கரணின் கேரியரில் மறக்க முடியாத ரோல்... கோழைத்தனமும் கையாலாகததனமும் நிறைந்த ஐ.சி.மோகனை நினைவிருக்கா?

12-வது வாரமான இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் கோகுலத்தில் சீதை படத்தில் கரண் ஏற்று நடித்த ஐ.சி. மோகன் பற்றி பார்க்கப்போகிறோம். கரணின் கேரியரில் ஒரு முக்கியமான, மறக்க முடியாத பாத்திரம் ‘ஐ.சி.மோகன்’.
கோகுலத்தில் சீதை
கோகுலத்தில் சீதைpt web

அகத்தியன் இயக்கிய சிறப்பான திரைப்படம் ‘கோகுலத்தில் சீதை’. காதல் என்பது கெட்ட வார்த்தை, காமம் என்பதுதான் நிதர்சனம் என்கிற நினைப்பில் உல்லாசமாகத் திரியும் ஓர் இளைஞன், பெண்மையின் மேன்மையை இறுதியில் கண்ணீரோடு புரிந்து கொள்ளும் திரைப்படம்.

ரிஷி என்கிற பாத்திரத்தில் கார்த்திக்கும், நிலா என்கிற பாத்திரத்தில் சுவலட்சுமியும் மிக அற்புதமாக நடித்திருப்பார்கள். இரண்டு பாத்திரங்களையும் மிக நுட்பமாக வடிவமைத்திருப்பார் அகத்தியன்.

கோகுலத்தில் சீதை
கோகுலத்தில் சீதை
இந்தப் படத்தின் துணைப் பாத்திரங்களில் சுவாரசியமானதொன்று, ஐ.சி. மோகன். யெஸ்… Inferiority Complex மோகன்.

இந்த கேரக்ட்டரில் அற்புதமாக நடித்திருந்தார் கரண்.

‘மாஸ்டர் ரகு’ என்கிற பெயரில் தமிழிலும் மலையாளத்திலும் ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கரண். தொன்னூறுகளில் வில்லனாக ஆரம்பித்து பிறகு ஹீரோவாக உயர்ந்தவர்.

கோகுலத்தில் சீதை
“நின்னு ஜெயிக்கறதுதான் பெருமை” - பாசிட்டிவ்வான பாதையை மாணவர்களுக்கு சொன்ன நல்லாசிரியர் ‘பிரேம்’!

‘நம்மவர்’ திரைப்படம் இவருக்கு பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்தது. அதில் பணக்கார இளைஞனாக திமிரும் முரட்டுத்தனமும் கலந்த பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதற்கு நேர் மாறாக கூச்சம், தயக்கம், கோழைத்தனம் போன்ற குணாதிசய கலவை கொண்ட இளைஞனாக ‘கோகுலத்தில் சீதை’ திரைப்படத்தில் இவரது நடிப்பு வித்தியாசமாகவும் அற்புதமாகவும் இருந்தது.

கோகுலத்தில் சீதை படத்தில் கரண்
கோகுலத்தில் சீதை படத்தில் கரண்

தாழ்வுணர்ச்சி கொண்ட பாத்திரத்தில் அசத்திய கரண்

ஐ.சி. மோகனின், அதாவது தாழ்வுணர்ச்சி கொண்ட மோகனின் அறிமுகக் காட்சியே ‘நச்’சென்று இருக்கும்.

மோகனின் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் ஒரு பெண், “சினிமாவுக்குப் போகலாமா?” என்று கிறக்கமாகக் கேட்க, “அது வந்துங்க.. நீங்க நெனக்கற மாதிரி ஆளு நானில்லைங்க. ஊர்ல வயசான அம்மா, அப்பா.. வயசுக்கு வந்த தங்கச்சி இருக்காங்க.. கஷ்டப்பட்டு என்னை படிக்க வெச்சிருக்காங்க.. இங்க வர்ற சம்பளத்தை வெச்சுதான் ஊருக்கு பணம் அனுப்பணும்.

கோகுலத்தில் சீதை படத்தில் கரண்
கோகுலத்தில் சீதை படத்தில் கரண்

நெஜம்மாலுமே டிக்கெட் வாங்கி உங்களை கூட்டிட்டுப் போற அளவுக்கு எனக்கு வசதியில்லை” என்று மென்று விழுங்கி மோகன் சொல்லும் காட்சி, அந்தப் பாத்திரத்தின் மீது பரிதாபத்தையும் சிரிப்பையும் ஒருசேர ஏற்படுத்துகிறது.

கூடுதல் நகைச்சுவையாக, “வேணுமின்னா.. ஒரு டிக்கெட் வாங்கித் தரேன்.. நீங்க வேணா போயிட்டு வாங்க” என்கிறான் மோகன்.

மோகன் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளி கார்த்திக். அவர் அலுவலகத்தில் நுழையும் போது அனைவரும் இயல்பாக எழுந்து ‘குட்மார்னிங்’ என்று சொல்ல, மோகன் மட்டும் ஸ்கூல் மாணவன் மாதிரி கையைக் கட்டிக் கொண்டிருக்கிறான்.

கோகுலத்தில் சீதை படத்தில் கரண் - கார்த்திக்
கோகுலத்தில் சீதை படத்தில் கரண் - கார்த்திக்

“நீங்க முதலாளி.. நான் வேலைக்காரன்...”

அவனை தன்னுடைய அறைக்கு அழைக்கும் கார்த்திக், “இப்படி.. கைய கட்டாத… நீயும் நானும் காலேஜ்ல இருந்து பிரெண்ட்ஸ்.. மத்தவங்களை விட்டுட்டு ஏன் உனக்கு வேலை போட்டுக் கொடுத்தேன் தெரியுமா? உனக்குப் பணத்து மேல ஆசை இல்ல” என்று சொல்ல, “சார்.. ஒண்ணு சொல்லட்டுமா.. அன்னிக்கு நான் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணதாலதான் இன்னிக்கு நீங்க வேலை போட்டுக் கொடுத்திருக்கீங்க.. நீங்க முதலாளி. நான் வேலைக்காரன்” என்று பணிவாகச் சொல்கிறான் மோகன்.

“உனக்கு இந்த இன்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் எங்க இருந்து வந்ததுன்னே தெரியலையே?” என்று சலித்துக் கொள்கிறார் கார்த்திக். தன்னோடு சமமாக நடத்தினாலும் அந்த உயரத்திற்கு நண்பன் வர மாட்டேன்கிறானே என்கிற சலிப்பு அவரிடத்தில் தெரிகிறது.

கோகுலத்தில் சீதை
அட்டகாசமான கவுண்ட்டர், பிச்சு உதறும் டயலாக் டெலிவரி, கறாரான பாசம்... ஆல் இன் ஆல் அசத்தல் ‘கண்ணம்மா’!

மோகனை உற்சாகப்படுத்துவதற்காக கல்லூரியில் நடக்கும் ஒரு கலை நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்கிறார் கார்த்திக். அங்கு நிலா என்கிற இளம்பெண் பாடும் பாடலை இருவரும் பிரமிப்புடன் பார்க்கிறார்கள். நிலாவின் குடும்பத்தனமான தோற்றமும் அழகும் இருவரையும் கவர்கிறது.

கோகுலத்தில் சீதை படத்தில் கார்த்திக் - சுவலட்சுமி
கோகுலத்தில் சீதை படத்தில் கார்த்திக் - சுவலட்சுமி

காமம்தான் பிரதானம் என்று நினைக்கும் கார்த்திக், அதற்கான வலையை வீச ஆரம்பிக்கிறார். நிலா நழுவிக் கொண்டே போகிறாள். ஆனால் மோகனோ நிலாவை மனதிற்குள் உருகி உருகி காதலிக்க ஆரம்பித்து ஒரு கேசட்டில் தனது பரிதாபக் கதையாக பதிவு செய்து அனுப்புகிறான். மோகனின் குரல் ஒலிக்கிறது.

கேசட்டின் மூலம் ஒரு பரிதாப காதல் கடிதம்

“நிலா மேடம் வணக்கம்.. நான் ஐ.சி.மோகன்.. ஐ.சி.ன்னா inferiority complex ன்னு அர்த்தம். நான் எத்தனையோ முறை தற்கொலை பண்ணனும்னு நெனச்சிருக்கேன். சில சமயம் அதுக்காக முயற்சி கூட பண்ணியிருக்கேன். ஆனா உங்களைப் பார்த்த பிறகு அந்த எண்ணத்தைக் கை விட்டுட்டு வாழணும்னு ஆசை வந்திருச்சி. உங்களை ஒரு ஃபங்ஷன்ல பார்த்தேன்.

கோகுலத்தில் சீதை படத்தில் சுவலட்சுமி
கோகுலத்தில் சீதை படத்தில் சுவலட்சுமி

தூரத்துல இருந்து பார்க்கறப்பவே நீங்க எனக்கு நிறைய நம்பிக்கையைக் கொடுத்தீங்க. நீங்க பக்கத்துல இருந்தீங்கன்னா… நிச்சயமா என்னால வாழ்க்கைல முன்னேற முடியும்னு தோணுது. உங்களால என் பக்கத்துல இருக்க முடியுமா.. நிலா மேடம். நான் வாழ்க்கைல எதுக்குமே ஆசைப்பட்டதில்லை. முதன்முறையா ஆசைப்பட்டு கேக்கறேன். மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க.. நிலா மேடம் ப்ளீஸ்” என்று கோவென்று மோகன் அழும் குரல் கேட்கிறது. இதைக் கேட்டு சங்கடத்துடன் தலையில் கை வைத்துக் கொள்கிறாள் நிலா. இப்படியொரு காதல் கடிதத்தை எந்தப் பெண்ணும் எதிர்கொண்டிருக்க மாட்டாள்.

மோகனின் குரலில் இருந்த கழிவிரக்கம் காரணமாக அவனைச் சந்திக்க முடிவு செய்கிறாள் நிலா. கடற்கரை. ‘இவ்வளவு சீக்கிரம் நீங்க என் பக்கத்துல இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலை” என்று மோகன் புளகாங்கிதமாக சொல்ல, நிலா மெலிதாக எரிச்சல் கொள்கிறாள்.

நிலா என்கிற வித்தியாசமான பெண்

“இதுக்கு பேர் காதல்ன்னு நெனச்சீங்கன்னா, உலகத்துல உங்களைப் போல பைத்தியக்காரன் யாருமில்ல. முதல்ல கையைக் கட்டாதீங்க. எனக்கு காதல் பிடிக்கும். நானும் காதலிப்பேன். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம். என் புருஷனை. கேசட்ல உங்க குரலைக் கேட்டப்ப எனக்கு அனுதாபம்தான் வந்தது. நான் விளம்பரத்துல வர்ற பொண்ணு மாதிரி சமைச்சுப் போடற, துணி துவைக்கற டைப் இல்ல.

கோகுலத்தில் சீதை படத்தில் கரண் - சுவலட்சுமி
கோகுலத்தில் சீதை படத்தில் கரண் - சுவலட்சுமி

ஒரு ஆணோட வெற்றிக்குப் பின்னாடி இருக்கணும்னு நெனக்கறேன். என் மனைவிதான் என் வெற்றிக்கு காரணம்ன்னு அவன் என்னைப் பத்தி உயர்வா நினைக்கணும். உங்க மேல வந்த அனுதாபத்தைக் காதல்ன்னு நெனச்சீங்கன்னா.. எட்டி அறைஞ்சுடுவேன்.." என்று சொல்லும் போதே மோகனுக்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கும் நிலாவின் வித்தியாசமான குணாதிசயத்தைப் பிடித்துப் போகிறது.

கோகுலத்தில் சீதை
‘வசீகரம்.. டெரர்.. மர்மம்.. ட்ரேட்மார்க் சிரிப்பு..’ தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ஜிந்தா!

நிலா பேச்சைத் தொடர்கிறாள். “என் கூட பார்க்கு, பீச் போலாம். லவ் டூயட் பாடலாம்ன்னு கனவு வெச்சிருந்தீங்கன்னா இப்பவே மறந்துடுங்க.. சராசரி மனைவியா ஒருத்தனைப் பத்தி கனவு கண்டுட்டு அது இல்லைன்றப்ப ரப்பர் வெச்சு அழிச்சுட்டு இன்னொரு கனவு காண்ற பொண்ணு நான் இல்ல. யாராவது செத்துப் போனா எனக்கு அழுகை வராது. நான் சாவும் போது மத்தவங்க அழற மாதிரி வாழணும்னு நெனக்கறவ.

தெரிஞ்சோ தெரியாமலேயோ எனக்கு நிலான்னு பேரு வெச்சுட்டாங்க.. உண்மையிலேயே நான் நிலா. பார்க்கறவங்க கண்ணுக்குத்தான் நான் பெளர்ணமி, அமாவாசை மாதிரி தெரிவேன். ஆனா நான் நானாத்தான் இருப்பேன்.

வீட்ல முறைப்படி வந்து பொண்ணு கேட்டுப் பாருங்க. இல்லைன்னா எங்க வீட்ல பார்க்கற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிப்பேன்” என்று படு ரியாலிட்டியாக பேசுகிறாள் நிலா.

கோகுலத்தில் சீதை படத்தில் சுவலட்சுமி
கோகுலத்தில் சீதை படத்தில் சுவலட்சுமி

நண்பனைத் தூது அனுப்பும் மோகன்

ஊருக்குச் செல்லும் நிலாவிற்கு ஒரு அதிர்ச்சியான தகவல் காத்திருக்கிறது. வீட்டில் ஒரு டாக்டர் மாப்பிள்ளையை பார்த்து வைத்திருக்கிறார்கள். வரதட்சணையை கூட அவர் எதிர்பார்ப்பதில்லை. தன் அம்மாவிடம் மோகனைப் பற்றி சொல்கிறாள் நிலா. “தற்கொலை பண்ணிக்கணும்னு நெனக்கற ஒரு மனுஷனுக்கு என்னால சந்தோஷம் வந்துச்சு. அவனை கல்யாணம் பண்ணலாம்ன்னு தோணுது” என்று சொல்ல “நம்ம குடும்பக் கஷ்டத்தை நெனச்சுப் பாரும்மா” என்று அம்மா வேண்டுகோள் வைப்பதால் குழப்பத்துடன் திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். மோகனுக்கு தகவல் அனுப்புகிறாள். அவன் துணிச்சலாக வந்து பெண் கேட்கட்டும் என்பது நிலாவின் எதிர்பார்ப்பு.

திருமணம் நடப்பதற்கு இரண்டே நாட்கள்தான் இருக்கின்றன. மோகனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையை கையாளும் துணிச்சல் அவனுக்கு இல்லை. எனவே நண்பனும் முதலாளியுமான கார்த்திக்கிடம் உதவி கேட்கிறான். நிலாதான் அந்தப் பெண் என்பதைக் கேள்விப்படும் கார்த்திக் அதிர்ச்சியும் திகைப்பும் அடைகிறார். (இந்த சிங்கிள் ஷாட்டில் கார்த்திக்கின் நடிப்பு அத்தனை அற்புதமாக இருக்கும்!). என்றாலும் நட்புக்கு முக்கியத்துவம் தரும் கார்த்திக், தன் ஆசையை மனதில் புதைத்துக் கொண்டு உதவ முடிவு செய்கிறார்.

கோகுலத்தில் சீதை படத்தில் கரண் - கார்த்திக்
கோகுலத்தில் சீதை படத்தில் கரண் - கார்த்திக்

“எனக்கு இருக்கற ஒரே பிரெண்டு நீ. நிச்சயமா உதவி பண்றேன்.” என்று காரை எடுத்துக் கொண்டு திருமண மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு ஒரு ஆள் மூலமாக மோகன் எழுதிய கடிதத்தை அனுப்புகிறாள். இக்கட்டான சூழலில் வந்திருக்கும் கடிதத்தை மிக நேர்மையாக கல்யாண மாப்பிள்ளையிடம் தந்து வாசிக்கச் சொல்கிறாள் நிலா. அந்தக் கடிதத்தில் இவ்வாறு இருக்கிறது.

திருமணத்தில் நடக்கும் டிவிஸ்ட்

“நிலா.. நான் வர்றதுக்குள்ள அவசரப்பட்டுட்டீங்க.. நான் மண்டபத்துக்கு வெளியதான் வெயிட் பண்றேன். நீங்க கார்ல ஏறினீங்கன்னா நம்ம வாழ்க்கையை சந்தோஷமா ஆரம்பிக்கலாம். இல்ல வீட்ல பார்த்து வெச்சுக்கற மாப்பிள்ளைன்னா.. உங்க வாழ்க்கையை வாழுங்க... ஆனா உங்களைப் பார்த்த அப்புறம் எனக்குள்ள காணாம போயிருந்த தற்கொலை உணர்ச்சி மீண்டும் வந்துடும். அப்புறம் நிச்சயம் என்னை பொணமாத்தான் பார்க்க முடியும்” என்று சென்டிமென்ட்டாக எழுதியிருக்கிறான் மோகன்.

கோகுலத்தில் சீதை படத்தில் சுவலட்சுமி
கோகுலத்தில் சீதை படத்தில் சுவலட்சுமி

கடிதத்தை வாசித்து முடிக்கும் டாக்டர் மாப்பிள்ளை, ஜென்டில்மேனாக நடந்து கொள்ள முடிவு செய்கிறாள். “ஒரு உயிரைக் காப்பாத்தற வேலைல இருக்கறவன் நான். ஒருவகையில் நீயும் அதைத்தான் பண்ணப் போறே. என்னைக் கல்யாணம் பண்ணிட்டு காலம் முழுக்க உறுத்தலா வாழறதை விடவும் மோகனை கட்டிக்கிட்டா நீ சந்தோஷமா இருப்பே. நான் சக்ஸஸை ஏற்கெனவே பார்த்தவன். மோகன் உன் மூலமா சக்ஸஸ் அடைய வேண்டியவன். கவலைப்படாத. இந்தக் கல்யாணம் நிச்சயமா நடக்கும். உன் தங்கச்சி மணப்பொண்ணா இருப்பா" என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

கோகுலத்தில் சீதை
மழலை மாறாத பாசத்துடன் ஒரு குறும்புக்கார அராத்து! பாலக்காட்டு மாதவனின் அசத்தல் காம்போ ‘எடோ... கோபி’

காரில் இருக்கும் கார்த்திக்கைக் கண்டு மெலிதாக அதிர்ச்சியடைகிறாள் நிலா. ஆனால் அச்சப்படுவதில்லை. தன்னை மீறி ஒருவன் தன்னைத் தொட்டு விட முடியாது என்கிற துணிச்சலும் தன்னம்பிக்கையும் நிலாவிற்கு நிறைய இருக்கிறது. அந்த குணாதிசயம்தான் கார்த்திக்கை ஈர்க்கிறது. அவளை கடத்திப் போவது போன்ற ஒரு ஜாலியான டிராமாவுடன் மோகனின் வீட்டிற்கு காரை செலுத்துகிறார் கார்த்திக். நிலாவிற்கு ஒரு சர்ப்ரைஸ் தரலாம் என்பது அவரது ஐடியா.

கோகுலத்தில் சீதை படத்தில் கார்த்திக் - சுவலட்சுமி
கோகுலத்தில் சீதை படத்தில் கார்த்திக் - சுவலட்சுமி

‘அழுகாச்சி’ குடும்பமும் மோகனின் கோழைத்தனமும்

ஆனால் அந்தச் சமயத்தில் மோகனின் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் ஒரு ‘அழுகாச்சி டிராமா’ விநோதமாக இருக்கிறது. டார்க் ஹியூமர் எனப்படும் அவல நகைச்சுவை தொனிக்க, இந்தக் காட்சியை அகத்தியன் கையாண்டிருக்கும் விதம் அத்தனை சுவாரசியமாக இருக்கிறது. மோகனின் அப்பா கலங்கியபடி மகனிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

“வீடு கடன்ல இருக்கு. தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணனும். இந்த நிலைமைல உனக்கு இப்ப கல்யாணம் தேவையா.. நம்ம சாதி சனம் முகத்துல காறித் துப்ப மாட்டாங்க” என்று உருக்கமாக வசனம் பேசுகிற மோகனின் அப்பா, தன் மனைவியிடம் கையைக் கட்டிக் கொண்டு பணிவுடன் நியாயம் கேட்கிறார்.

கோகுலத்தில் சீதை படம்
கோகுலத்தில் சீதை படம்

மோகனின் கை கட்டும் பழக்கம் எங்கிருந்து வந்தது என்பது இப்போது புரிகிறது. வீட்டிற்குள் நுழையும் நிலாவை “ஏண்டி.. யாராவது கிடைப்பாங்களான்னு அலைவீங்களா?.. உங்க அம்மா இதுக்குத்தான் பெத்து போட்டிருக்காங்களா.” என்றெல்லாம் மோகனின் தாய் அவமதிப்பாக பேசுகிறார். நிலாவிற்கு குழப்பமும் மோகனின் கோழைத்தனத்தின் மீது எரிச்சலும் ஏற்படுகிறது.

மோகன் தன் தந்தையிடம் அதே உருக்கத்துடன் பேசுகிறான். “உங்க கிட்ட இதுவரைக்கும் ஏதாவது கேட்டிருக்கனா.. முதன் முறையா ஒரு பொருளை ஆசைப்பட்டு கேட்கறேன்.. நீங்க வாங்கித் தர மாட்டீங்களா” என்று அப்பாவின் காலைப்பிடித்துக் கொண்டு கோவென்று கதறுகிறான். அவன் கேட்டு இதுவரைக்கும் ஏதாச்சும் வாங்கித் தராம இருந்திருக்கிறனா.” என்று தன் மனைவியிடம் கேட்கும் அப்பாவும் கோவென்று அழ குடும்பமே ஒன்றாக அழுகிறது.

இந்த சென்டிமென்ட் காட்சி நிலாவை எரிச்சலூட்டுகிறது. “நான் என்ன பொம்மையா. வாங்கித் தரறதுக்கு. அப்பாவும் பிள்ளையும் பிஸ்னஸ் பேசறீங்களா?” என்று வெடிக்கிறார் நிலா.

சத்தம் கேட்டு கார்த்திக் வீட்டின் உள்ளே வருகிறார். அவருக்கும் குழப்பம். “என்ன மோகன். என்ன நடக்குது இங்க” என்று பேசி பிரச்சினையைத் தீர்க்க முயல்கிறார். ஆனால், “உங்க கூட ராத்திரி முழுக்க இருந்திருக்கிற பொண்ணை கல்யாணம் பண்ணி வெச்சா.. எங்க உறவுக்காரங்க என்னப்பா சொல்லுவாங்க” என்று மோகனின் அம்மா கேட்டவுடன் கார்த்திக் அதிர்ச்சியடைகிறார்.

“சரிப்பா.. நீங்க போய் கல்யாணம் பண்ணிக்கோங்க. நாங்க குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கறோம்.” என்று குடும்பமே ஒன்று சேர்ந்து அழுது கதற “சார்.. ஒருத்தர் சந்தோஷத்துக்காக மூணு பேரை என்னால இழக்க முடியாது. நீங்க மறுபடியும் போய் நிலாவை அவங்க வீட்டுல விட்டுட்டு வந்துடுங்க சார்” என்று மோகன் சொல்வதைக் கேட்டு கார்த்திக் கோபமடைகிறார். “உன்னை நம்பி வந்த பொண்ணு” என்று அவர் அழுத்தமாகச் சொன்னாலும் மோகனின் காதில் ஏறவில்லை. இந்தக் காட்சியில் கார்த்திக், சுவலட்சுமி, கரண் ஆகிய மூவரின் நடிப்பும் அற்புதமாக இருக்கும். தன் குடும்பத்தை உதற முடியாத கோழைத்தனத்தை கரண் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்.

கோகுலத்தில் சீதை படம்
கோகுலத்தில் சீதை படம்

மறுநாள் அலுவலகத்தில் மோகனைப் பார்க்கும் கார்த்திக், எரிச்சலை மறைத்துக் கொண்டு சொல்கிறார். “நீ நேத்து பண்ண காரியத்துக்கு உன்னை வேலையை விட்டு தூக்கியிருக்கணும்.. உன் குடும்ப நிலைமையை நெனச்சு விடறேன். ஆனா நம்ப பிரெண்ட்ஷிப் இனி கட். இனிமே நான் உனக்கு முதலாளி. நீ இங்க வேலை செய்யறவன். கதவைத் தட்டிட்டுத்தான் உள்ளே வரணும்" என்று நட்பை உயர்வாக மதித்த கார்த்திக்கிற்கு அதைத் துண்டிக்கும் சூழலை ஏற்படுத்தியது மோகனின் கோழைத்தனம்.

“மன்னிப்பீங்களா..?” “மன்னிச்சுட்டேன்..”

தனது வீட்டுக்குத் திரும்ப முடியாத நிலாவிற்கு கார்த்திக் அடைக்கலம் தருகிறார். தினமும் ஒரு பெண்ணைத் தேடும் கார்த்திக்கின் குணாதிசயம் தெரிந்தும், யாரிடமும் அத்து மீறாத ஜென்டில்மேன்தனத்தை உணரும் நிலா அங்கு தங்குகிறாள். பிறகு கார்த்திக்கின் அலுவலகத்தில் பணிபுரியவும் ஆரம்பிக்கிறாள். ஆனால் அங்கிருக்கும் மோகனை அவள் ஒருமுறை கூட நிமிர்ந்து பார்ப்பதில்லை.

கோகுலத்தில் சீதை படத்தில் கார்த்திக் - சுவலட்சுமி
கோகுலத்தில் சீதை படத்தில் கார்த்திக் - சுவலட்சுமி

தினமும் நிலாவைப் பார்ப்பதும் அவள் பேசாமல் இருப்பதும் மோகனுக்குள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது. நிலா தரும் ஒரு ஐடியா காரணமாக சேல்ஸ் உயர்கிறது. எல்லோரும் நிலாவைப் பாராட்டுகிறார்கள். தானும் பாராட்ட விரும்புகிறான் மோகன். எனவே இன்டர்காமில் நிலாவை அழைக்கிறான்.

“இங்க நீங்க வந்துதல இருந்து ஒருமுறை கூட என்னை நிமிர்ந்து பார்க்கலை. எனக்கும் உங்களைப் பாராட்டணும்னு தோணுது. நான் பண்ணது தப்புத்தான். அதுக்காக என்னை மன்னிக்க மாட்டீங்களா?” என்று வழக்கம் போல் உருக்கமான வேண்டுகோளை வைக்கிறான் மோகன்.

கோகுலத்தில் சீதை படத்தில் கரண்
கோகுலத்தில் சீதை படத்தில் கரண்

ஒரு தீர்மானத்துடன் “சரி. மன்னிச்சிட்டேன்.. மறந்துட்டேன்” என்கிறார் நிலா. ஆனால் அந்த உறவு மறுபடியும் துளிர்த்து விட்டது என்று மோகன் உள்ளூற ஆனந்தப்படுகிறான்.

முதலாளி கார்த்திக் ஒரு வுமனைஸர் என்பது அந்த நிறுவனத்தில் உள்ள எல்லோருக்குமே தெரியும். எதையுமே அவர் மறைப்பதில்லை. எனவே கார்த்திக்கின் வீட்டில் தங்கியிருக்கும் நிலாவைப் பற்றி அங்குள்ளவர் அவதூறாகப் பேச மோகனுக்குள் கோபம் வருகிறது. வம்பு பேசிய ஆசாமியின் சட்டையைப் பிடித்து தகராறு செய்கிறான்.

கோகுலத்தில் சீதை படத்தில் கரண் - கார்த்திக்
கோகுலத்தில் சீதை படத்தில் கரண் - கார்த்திக்

அலுவலகத்தினுள் நுழையும் கார்த்திக், அங்கு நடக்கும் தகராறைத் தடுத்தி நிறுத்தி ‘என்ன இதெல்லாம்?” என்று மோகனை விசாரிக்கிறார்.

கரணின் நடிப்புப் பயணத்தில் மறக்க முடியாத பாத்திரம்

“சார்.. நிலா வாழ்க்கைல வந்த முதல் மனுஷன் நானு.. நான் எப்படி பேசாம இருக்க முடியும்? என்று உரிமையான கோபத்துடன் மோகன் பேச, எரிச்சலுடன் நிலா அவனை இடைமறிக்கிறாள். “மிஸ்டர். மோகன்.. என் மனசுக்குள்ள நீங்க எப்பவுமே வந்ததில்ல.. என்னைப் பத்தி பேசறதுக்கு நீங்க யாரு..?” என்று நிலா கேட்க திகைத்துப் போகிறான் மோகன்.

கோகுலத்தில் சீதை படத்தில் கார்த்திக் - சுவலட்சுமி - கரண்
கோகுலத்தில் சீதை படத்தில் கார்த்திக் - சுவலட்சுமி - கரண்

“அன்னிக்கு மன்னிச்சிட்டேன்னு சொன்னீங்களே” என்று மோகன் அதிர்ச்சியுடன் கேட்க அதற்கான விளக்கத்தை நிலா அளிக்கிறாள்.

“மன்னிச்சிட்டேன்னு சொன்னது.. உங்க பைத்தியக்காரத்தனத்தை. மறக்கலைன்னு சொன்னது உங்க கோழைத்தனத்தை.. நன்றி சொன்னது இந்த நல்ல மனுஷனை (கார்த்திக்) எனக்கு அடையாளம் காட்டினதுக்காக.. அன்னிக்கு நிமிர்ந்து பார்த்தது உங்க முகத்துல ஏமாத்தற தன்மை எவ்வளவு மிச்சம் இருக்குன்னு தெரிஞ்சுக்கறதுக்காக" என்று நிலா சொல்லும் அழுத்தமான பதில்களால் பேச்சின்றி அவமானத்துடன் நிற்கிறான் மோகன்.

கோகுலத்தில் சீதை படத்தில் கார்த்திக் - சுவலட்சுமி - கரண்
கோகுலத்தில் சீதை படத்தில் கார்த்திக் - சுவலட்சுமி - கரண்

தாழ்வுணர்ச்சி கொண்டவர்களை அதுவரை பரிதாபமாகவும் இரக்கத்துக்குரியவர்களாகவும்தான் தமிழ் சினிமா பெரும்பாலும் சித்தரித்திருக்கிறது. ஆனால் அப்படிச் செயல்படுவது எத்தனை பெரிய கோழைத்தனம் என்பதையும், அது மற்றவர்களையும் எப்படி பாதிக்கும் என்பதையும் ‘ஐ.சி.மோகனின்’ வாயிலாக சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் அகத்தியன்.

கோழைத்தனமும் கையாலாகததனமும் நிறைந்து வழியும் பாத்திரத்தை கரண் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். அவரது கேரியரில் ஒரு முக்கியமான, மறக்க முடியாத பாத்திரம் ‘ஐ.சி.மோகன்’.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com