சந்திரயான்-3 ட்விட்டர் பதிவு: இந்து அமைப்பினர் புகாரில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப் பதிவு!

சந்திரயான் 3 விண்கலம் தொடர்பாக ட்விட்டரில் பதிவு வெளியிட்டது விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ்ட்விட்டர்

சந்திரயான் 3 விண்கலம் நாளை மாலை 6.04 மணியளவுக்கு நிலவில் தரையிறங்க உள்ளது. வெற்றிகரமாக அது தரையிறங்கினால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்த சாதனையை எட்டிய நான்காவது நாடாக இந்தியா இருக்கும். இதனால் உலகமே சந்திராயன் 3 வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், நிலாவில் ஒருவர் டீ போடுவதாக கேலிச்சித்திரம் ஒன்றை ட்விட் செய்திருந்தார். அதன் கேப்ஷனாக அவர் ‘முக்கியச் செய்தி: வாவ்.. விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் இருந்து வரும் முதல் படம்’ எனப் பதிவிட்டிருந்தார். இவருடைய பதிவுக்குப் பலரும் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக நெட்டிசன் ஒருவர், “நீங்கள் தனிப்பட்ட விதத்தில் வேறொரு அரசியலைச் சார்ந்தவராக இருக்கலாம். அதற்காக அறிவியல் விஞ்ஞானிகளை வெறுப்பது, அவர்களின் பணியைக் கேலி செய்வதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” எனப் பதிவிட்டிருந்தார்.

இப்படி, தொடர்ந்து பலரும் அவருக்கு எதிராக விமர்சனங்களை வைக்க, அதற்குப் பதிலளித்த பிரகாஷ் ராஜ், “வெறுப்பு வெறுப்பை மட்டுமே பார்க்கிறது. நான் என் பதிவின்மூலம் ஆம்ஸ்ட்ராங் காலத்தின் நகைச்சுவையைக் குறிப்பிடுகிறேன். அதன்படி, என் பதிவில் நான் நமது கேரளா சாய்வாலாவை (தேநீர் கடைக்காரர்களை) கொண்டாடுகிறேன். உங்களுக்கு ஜோக் புரியவில்லை என்றால் அது உங்கள் பிரச்னை. வளருங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.

அதாவது, 'உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும், அங்கு ஒரு மலையாளி டீக்கடை வைத்திருப்பார்' என்னும் காமெடியை நினைவுபடுத்தும் விதமாகவே இதுபோன்ற பதிவையும் படத்தையும் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், அவரது பதிவுக்கு எதிராகத் தொடர்ந்து விமர்சனங்கள் வந்தநிலையில், இந்து அமைப்பினர் பிரகாஷ்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கர்நாடகாவில் புகார் மனுவை அளித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிரகாஷ் ராஜ் மீது பாகல்கோட் மாவட்ட காவல்துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com