ரூ.4 கோடியில் பிரமாண்ட செட்.. விஜயின் ’ஜனநாயகன்’ படத்திற்கு உதவிய தனுஷ்?
சமீபகாலமாக ’தனுஷும், NOC-ம்’ என செய்தி வெளியிடும் அளவு பல்வேறு விமர்சனங்களை தனுஷ் சந்தித்துவருகிறார். முதலில் நானும் ரௌடி தான் படத்திற்கு NOC வழங்காததை கடுமையாக விமர்சித்து நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதற்குபிறகு சிம்பு மற்றும் வெற்றிமாறன் இணையும் புதிய படம் வடசென்னை படத்தின் கதையை ஒட்டி எடுக்கப்படவிருப்பதாகவும், அதற்கு தனுஷ் NOC வழங்க 20 கோடி ரூபாய் கேட்டதாகவும் சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது.
அதனைத்தொடர்ந்து தனுஷ் NOC வழங்க எந்த பணமும் கேட்கவில்லை என்றும், இதுபோன்ற விசயங்கள் என்னையும் தனுஷையும் பிரித்துவிடாது என்றும் வீடியோ வெளியிட்டு இயக்குநர் வெற்றிமாறன் விளக்கமளித்தார்.
இந்நிலையில் பணம் வாங்காமல் சிம்புவுக்கு NOC வழங்கிய தனுஷ், தற்போது தன் படத்திற்காக சுமார் 4.5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட செட்டை ’ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பிற்கு வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் படத்திற்கு உதவிய தனுஷ்..
இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘ஜன நாயகன்’. நடிகர் விஜயின் 69வது படமான ஜன நாயகனில் அனிமல் பட வில்லனான பாபி தியோல், பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த பூஜா ஹெக்டே மற்றும் பிரேமலு புகழ் பட நடிகை மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் சேர்ந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில், பாடல்களுக்கான இறுதிகட்ட ஷூட்டிங் நடந்துவருவதாக கூறப்படுகிறது. படம் பொங்கலை முன்னிட்டு 2026 ஜனவரி 9-ம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் தான் நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தின் பாடல் ஷூட்டிங்கிற்காக, நடிகர் தனுஷ் தன்னுடைய படத்திற்காக 4.5 கோடி செலவில் போட்ட பிரமாண்ட செட்டை வழங்கி உதவியிருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. பல ரசிகர்கள் சிம்புவுக்கு பணம் வாங்காம NOC கொடுக்குறீங்க, விஜய்க்கு 4 கோடி செட்ட ஷூட்டிங்கிற்கு கொடுக்கிறீங்க, நயன்தாரா மட்டும் என்ன பண்ணாங்க தனுஷ் என்ற கருத்தை வேடிக்கையாக பதிவிட்டுள்ளனர்.
இவற்றையெல்லாம் கடந்து தனுஷ் இயக்குநர் எச் வினோத் உடன் அடுத்தப்படத்தில் நடிக்கவிருப்பதாகவும், அதனால் தான் ஷூட்டிங்கு செட்டை வழங்கியுள்ளார் என்றும் தெரிவித்துவருகின்றனர்.