234 தொகுதிகளிலும் இலவச டியூஷன் சென்டர்.. அரசியல் யூகங்களுக்கு மத்தியில் தனுஷ் அதிரடி!
234 தொகுதிகளிலும் ஏசி வசதியுடன் இலவச டியூஷன் சென்டர்கள் அமைக்க தனுஷ் முன்வைத்த திட்டம், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முக்கிய முயற்சியாகும். சமூகப் பணி, அரசியல் யூகங்கள், ரசிகர்களின் நற்பணிகள் என பல்வேறு விஷயங்களை பகிர்ந்த அவர், “என்னை இயக்குவது இறைவன்; என் பின்னால் இருப்பது மக்கள்” என்ற கருத்தால் கவனம் ஈர்த்தார்.
சென்னையில் நவம்பர் 6-ம் தேதி நடைபெற்ற நடிகர் தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் மற்றும் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் தனுஷ் பேசிய கருத்துகள் திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, தனது அரசியல் நிலைப்பாடு குறித்துப் பரவி வரும் யூகங்கள், ரசிகர்களின் செயல்பாடுகள், சமூகப் பணி, மழைக்கால உதவிகள், மாணவர்களுக்கான இலவசக் கல்வி மையங்கள், தனது அடுத்த திரைப்படங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்துத் தனுஷ் மனம் திறந்து பேசியுள்ளார்.
என்னை இயக்குவது யார்?
தன்னைப் பற்றி பல்வேறு கருத்துகளும் வதந்திகளும் பரப்பப்படுவதாகக் குறிப்பிட்ட தனுஷ், தன்னை யாரோ இயக்குவதாகவும், தனக்குப் பின்னால் சிலர் இருப்பதாகவும் கூறப்படுவதைச் சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, “என்னை இயக்குவது இறைவன். என் பின்னால் இருப்பது ரசிகர்கள். என் பக்கம் மக்கள் இருக்கிறார்கள்” என்று தெரிவித்தார். மேலும், “எண்ணம் போல் வாழ்க்கை” என்றும் குறிப்பிட்டார்.
தன்னைப் பற்றி யார் என்ன பேசினாலும் அதற்காகப் பேசாமல் இருக்க முடியாது என்றும், புதிதாக ஒன்று உருவாகும்போது அதிர்வுகள் ஏற்படுவது இயல்புதான் என்றும் அவர் கூறினார். இருப்பினும், இந்த விழாவில் தனது அரசியல் வருகை குறித்தோ, அரசியல் கட்சி தொடங்குவது குறித்தோ எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை.
குடும்ப தேவையை பூர்த்தி செய்துவிட்டு உதவுங்கள்!
தொடர்ந்து, தனது ரசிகர்கள் செய்து வரும் நற்பணிகள் குறித்துப் பேசிய தனுஷ், அவர்களுக்கு முக்கியமான வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்தார். “நிறைய நல்ல திட்டங்களைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் என்னுடைய பாக்கெட்டிலிருந்து பணம் செலவழிக்கவில்லை. நீங்கள்தான் உங்களுடைய சொந்தப் பணத்தை என்னுடைய பெயரில் செலவு செய்கிறீர்கள். உங்கள் குடும்பத்திற்குத் தேவையானதைச் செய்துவிட்டு, உங்களிடம் கூடுதலாகப் பணம் இருந்தால் பொதுநலப் பணிகளைச் செய்யுங்கள். அதற்காக உங்கள் குடும்பம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மழைக்காலம் என்பதால், அந்தச் சூழலில் பாதிக்கப்படும் மக்களுக்கு ரசிகர்கள் உதவ முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார். மழையைப் பாதுகாப்பாகக் கடந்து வந்துவிட்டால் மகிழ்ச்சி என்றும், மழையால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் ரசிகர்களிடம் வலியுறுத்தினார்.
விமர்சனம் குறித்து பேசிய தனுஷ்!
தன்னைத் தொடர்ந்து விமர்சிப்பவர்கள் குறித்தும் தனுஷ் தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டார். தன்னை வாழ்நாள் முழுவதும் குறைத்து மதிப்பிடுபவர்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அத்தகைய விமர்சனங்களே தன்னை மேலும் ஊக்கப்படுத்துவதாகத் தெரிவித்தார். தன்னை மட்டம் தட்டுபவர்கள், தங்களுக்கே தெரியாமல் தனக்குள் வெற்றிபெற வேண்டும் என்ற உந்துதலை உருவாக்குவதாகவும், அந்த விமர்சனங்களைக் கடந்து வெற்றி பெறுவதில் தனி மகிழ்ச்சி இருப்பதாகவும் கூறினார்.
தனது அடுத்த திரைப்படம் குறித்துப் பேசிய தனுஷ், இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்தார். அந்த இயக்குநரைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து வருவதாகவும், அவருடன் மேலும் சில நாள்கள் பணியாற்றினால் அவரைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். அந்தப் படம் ரசிகர்களுக்கான படமாக இருக்கும் என்றும், தனது D56 திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய Fanboy அனுபவமாக அமையும் என்றும் தெரிவித்தார்.
‘ஓம்’ திரைப்படம் குறித்துப் பேசிய தனுஷ், இது பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்திருக்கும் திரைப்படம் என்று குறிப்பிட்டார். மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ள இந்தப் படத்தில் தனது பெயர் கடைசியாகத்தான் வருவதாக நகைச்சுவையுடன் தெரிவித்தார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும், ஒரு நடிகரிடம் இருந்து எவ்வாறு சிறப்பான நடிப்பைப் பெற வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் என்றும் பாராட்டினார்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கரையும் தனுஷ் வெகுவாகப் பாராட்டினார். தான் பாடிய பாடலைப் படத்தில் பயன்படுத்தியதுடன், அதற்கு மேலும் வலுசேர்த்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
234 தொகுதிகளிலும் ஏசி வசதியுடன் இலவச டியூஷன் சென்டர்கள்!
இந்த விழாவில் தனுஷ் பேசியதில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவர் அறிவித்துள்ள திட்டம் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஏசி வசதியுடன் கூடிய இலவச டியூஷன் சென்டர்களை அமைக்க வேண்டும் என்பதே தனுஷ் நற்பணி இயக்கத்தின் நீண்டகாலத் திட்டமாக உள்ளது.
விழாவில் தொகுப்பாளர், “234 தொகுதிகளிலும் இலவசமாக ஏசி கோச்சிங் சென்டர்கள் அமைக்கப் போகிறீர்களா? மாணவர்களுக்குக் கல்வி கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். கல்வியில் நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த தனுஷ், “ஆமாம், 234 என்று மட்டுமில்லை. தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக ஏசி டியூஷன் சென்டர்கள் அமைக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அந்த ஐடியாவில் இருக்கிறோம். ஆனால் மொத்தமாகச் செய்துவிட முடியாது. உடனடியாகத் தொடங்கவும் முடியாது” என்று தெரிவித்தார்.
மேலும், அடுத்த 10 முதல் 15 நாட்களுக்குள் சென்னையில் மூன்று இடங்களிலும், கன்னியாகுமரியில் ஒரு இடத்திலும் என முதற்கட்டமாக நான்கு ஏசி டியூஷன் சென்டர்கள் உறுதியாகத் தொடங்கப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து, இந்தக் கல்விப் பருவத்திற்குள் மேலும் 10 இடங்களில் மையங்களைத் தொடங்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு தொடங்கி, அதற்கடுத்த ஆண்டுக்குள் தமிழகம் முழுவதும் ஏசி டியூஷன் சென்டர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் தங்களது விருப்பம் என்றும் அவர் கூறினார். இதன்மூலம் 234 சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
குறிப்பாக, பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தரமான கல்வியைப் பெறுவதற்கும், பொதுத்தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் உதவும் வகையில் இந்த இலவசப் பயிற்சி மையங்கள் அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி வசதி உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் மாணவர்களுக்கு வசதியான கற்றல் சூழலை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
முன்னதாக, இந்தத் திட்டம் குறித்து வெளியான செய்திகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி மையங்கள் அமைப்பது குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது ‘ஓம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழையில் தனுஷ் நேரடியாகப் பேசியதன் மூலம், 234 தொகுதிகளையும் உள்ளடக்கிய திட்டத்தின் நோக்கமும், அதை படிப்படியாகச் செயல்படுத்துவதற்கான தொடக்க நடவடிக்கைகளும் தெரியவந்துள்ளன.
செய்தியாளர் - பாலாஜி
அரசியல் யூகங்கள், ரசிகர்களின் நற்பணிகள், குடும்பப் பொறுப்புகள், மழைக்கால உதவிகள், மாணவர்களுக்கான கல்விச் சேவை எனப் பல்வேறு விஷயங்களை ஒரே மேடையில் பகிர்ந்துகொண்ட தனுஷின் பேச்சு, ‘ஓம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, “என்னை இயக்குவது இறைவன்; என் பின்னால் இருப்பது ரசிகர்கள்; மக்கள் என் பக்கம்” என்ற அவரது கருத்தும், 234 தொகுதிகளிலும் இலவச டியூஷன் சென்டர்கள் அமைக்க வேண்டும் என்ற அவரது திட்டமும் மீண்டும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

