பத்தா படச் சிறுவனுக்கு தேசிய விருது.. 2வது முறையாக அழுதேன்..! - அனுராக் காஷ்யப்
பத்தா படத்தில் சிறுவன் சாய் பிருத்விராஜின் நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது என இயக்குநர் அனுராக் காஷ்யப் பாராட்டியுள்ளார். படம் இரண்டாவது முறையாக அவரை அழவைத்ததாக கூறியுள்ளார்.
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் `பத்தா'. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', `சீதக்காதி' போன்ற படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - பாலாஜி தரணீதரன் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் இது. ‘ஜெய் பீம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த லிஜோ மோல் ஜோஸ், இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தின் நிஜ ஹீரோவாக முக்கிய கதாபாத்திரத்தில் சிறுவன் சாய் பிருத்விராஜ் நடித்திருந்தார். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படம் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும், வசூல் ரீதியாக பாக்ஸ் ஆஃபிஸில் ஹிட்டடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. திரையரங்கில் பத்தா படத்தைப் பார்த்து பல ரசிகர்களும் கொண்டாடிய நிலையில், ஓடிடியில் வெளியானபிறகு இன்னும் மிகப்பெரிய வரவேற்பை பத்தா பெற்றுவருகிறது.
அந்தவகையில் இயக்குநர் அனுராக் காஷ்யப் இந்தவாரத்தில் மட்டும் 2வது முறையாக பத்தா படத்தை பார்த்ததாகவும், இந்தமுறை இன்னும் என்னை படம் அழவைத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
பத்தா படம் குறித்து லெட்டர்பாக்ஸ்ட் வலைதளத்தில் எழுதியிருக்கும் அவர், “இந்த வாரத்திற்குள் இரண்டாவது முறையாக பத்தாவை பார்த்தேன். இந்த முறை நான் இன்னும் அதிகமாக உணர்ந்தேன், அதிகமாகக் கவனித்தேன், அதிகமாக அழுதேன். சேதுபதி பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறார். இந்த முறை, படப்பிடிப்பின் போது அவர் உண்மையிலேயே பட்டினி கிடந்திருப்பார் என்று தோன்றியது. அது அவர் கண்களில் தெரிந்தது, நான் அவரிடமும் அதை உறுதிப்படுத்திக் கொண்டேன். மேலும் அந்த குழந்தை நட்சத்திரம் சபரி. அவரது பயம் அப்பட்டமாகத் தெரிகிறது. இறுதியில் அவர் ஒப்புக்கொள்ளும் போது, அந்த ஒப்புதல் வாக்குமூலம், அந்த பயத்தில் அவர் பேசும் அந்த தனியுரை, ஒரு குழந்தை நட்சத்திரத்திடமிருந்து நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த நடிப்பாக இது இருக்கலாம்.
திரையில் ஆண்கள் அழுவதைப் பார்ப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது. அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் வந்த பிறகு, அந்தப் பாவப்பட்ட குழந்தை இவ்வளவு காலம் வேதனையை உள்ளேயே வைத்து துன்பப்பட்டிருக்கிறது என்று பத்தா அவரது மனைவியிடம் சொல்லும் காட்சி, கண்ணீரை வரவழைத்தது. டோரதி மற்றும் பத்தா போன்ற படங்கள் நமக்கு இன்னும் தேவை” என எழுதியுள்ளார்.
மேலும் பத்தா படத்தில் நடித்த சிறுவன் சாய் பிருத்விராஜுக்கும், டோரதியில் நடித்த சனத்திற்கும் தேசிய விருது கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

