\
actor suriya Scene movie Review
Scene moviex pate

புதுமையான சீரியல் கில்லர் vs போலீஸ் கதை... ஸ்டைலிஷ் திரைக்கதையில் அசத்தும் ஜீத்து! | Scene Review

சீரியல் கில்லரை பிடிக்க துரத்தும் போலீஸின் கதையே SCENE
Published on: 
Scene(3 / 5)

இன்பராஜ் (சூர்யா) க்ரைம் பிரான்சில் DSP ஆகப் பணியாற்றி வருகிறார். எந்தவொரு கேஸாக இருந்தாலும் சில நிமிடங்களிலேயே தீர்வு காணும் திறமை கொண்டவர். மறுபக்கம், நஸ்லென் ஒரு கான்ட்ராக்ட் கில்லராகப் பணத்திற்காகத் தொடர்ந்து பல கொலைகளைச் செய்து வருகிறார். ஒருகட்டத்தில் போலீஸ் வேலையே வேண்டாம் என்று முடிவெடுக்கும் இன்பராஜ், தனது பதவியை ராஜினாமா செய்ய நினைக்கிறார். அந்தச் சமயத்தில் நடக்கும் ஒரு கொலை, இன்பராஜ் பணியாற்றிய பழைய கொலைக்குடன் தொடர்புடையதாக இருக்கிறது. அந்த வழக்கின் பின்னணி என்ன? சூர்யா ஏன் போலீஸ் வேலையை விட்டு விலக நினைக்கிறார்? நஸ்லெனை போலீஸால் பிடிக்க முடிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

இதுவரை நாம் பார்த்த சீரியல் கில்லர் vs போலீஸ் ஜானர் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தைப் புதுமையான திரைக்கதையுடன் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜீத்து. கொலைகாரனைப் பிடிக்கும் சீரியஸான கதையாக இருந்தாலும், அதை ஸ்டைலிஷாகவும், நகைச்சுவையுடனும் கொடுத்திருக்கும் விதம் சிறப்பு.

படத்துக்குப் படம் தன்னை இன்னும் ஃப்ரெஷ்ஷாக மாற்றிக்கொண்டே இருக்கிறார் சூர்யா. அசால்ட்டான உடல்மொழி, எதிரில் இருப்பவர்களை எளிதாகக் கையாளும் விதம், தேவையான இடங்களில் மாஸ் காட்டுவது எனத் தனது கதாபாத்திரத்தில் பட்டாசாக ஸ்கோர் செய்கிறார். சில காமெடி காட்சிகளில் ஒரு மாஸ் ஹீரோ என்பதை எல்லாம் மறந்து இயல்பாக நடிக்கும் சூர்யா மிகவும் ரசிக்க வைக்கிறார். சூர்யாவுக்குச் சமமாக நம்மைக் கவர்கிறார் நஸ்ரியா. சூர்யாவைச் சமாளிக்க முடியாமல் திணறுவது, சின்னச் சின்ன சேட்டைகள் செய்வது, மனதில் இருப்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் தனது ரியாக்ஷன்கள் மூலம் வெளிப்படுத்துவது என ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் நஸ்லெனுக்கு இந்தப் படம் ஒரு மாஸ் என்ட்ரி. கொலை செய்வதைப் பற்றியே ரசித்துப் பேசுவது, சூர்யாவை எதிர்கொள்ளும் விதம் எனத் தனது ஒவ்வொரு காட்சியிலும் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக, அவரது கதாபாத்திர வடிவமைப்பும் நடிப்பும் படத்திற்குப் பெரிய பலம். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் ஆனந்த் ராஜின் நடிப்பும் காமெடியும் ரசிக்க வைக்கின்றன. லால் ஒரு காமெடி போலீஸாக வந்தாலும், அவருடைய நகைச்சுவை பெரிய அளவில் சிரிப்பை ஏற்படுத்தவில்லை. அதேசமயம் சுரேஷ் மதியழகன் - ராஜப்ரியன் கூட்டணியின் காமெடி பல இடங்களில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது.

ஒரு சீரியல் கில்லரை பிடிக்கும் காலம் என்றாலும், ஹீரோ தன்னுடைய மனத்தடையில் இருந்து வெளியே வரக்கூடிய போர்ஷனையும் இயல்பாக படத்தில் சேர்த்திருந்தது அழகு.

தொழில்நுட்ப ரீதியாக சுஷின் ஷ்யாமின் இசையும் பின்னணி இசையும் படத்திற்குப் பெரிய பலம். வினீத் அகஸ்டினின் ஒளிப்பதிவு காட்சிகளை ஸ்டைலிஷாகக் காட்டுகிறது. அஜ்மல் சாபுவின் படத்தொகுப்பும் படத்தின் வேகத்திற்குத் துணை நிற்கிறது. ஒட்டுமொத்தமாகத் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு படத்தை மெருகேற்றியிருக்கிறது.

இப்படத்தின் குறைகள் எனப் பார்த்தால் படம் தொடங்கினாலும், கதை ஆரம்பிக்க சற்று அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. ஆரம்பக் காட்சிகளை இன்னும் சுருக்கமாகக் கொடுத்திருக்கலாம். அதேபோல், சூர்யா - நஸ்ரியா இடையிலான ரொமான்ஸ் காட்சிகளை இன்னும் க்ரிஸ்ப்பாகவும் சுவாரஸ்யமாகவும் அமைத்திருக்கலாம். இவற்றை தவிர்த்துப் பார்த்தால் வித்தியாசமான திரைக்கதை, ஸ்டைலிஷான மேக்கிங், சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள், காமெடி என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறது SCENE. நிச்சயமாக ரசிகர்களுக்குச் சிறப்பான தியேட்டரிகல் அனுபவத்தைக் கொடுக்கும் ஒரு என்டர்டெய்னர்!