ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் ‘பத்தா’.. உலக அளவில் டிரெண்டிங்! எத்தனையாவது இடம் தெரியுமா?
விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'பத்தா' திரைப்படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் 12 நாடுகளில் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து, 3 நாடுகளில் முதலிடத்தில் உள்ளது. மனிதநேயத்தை மையமாக கொண்ட இப்படம், உலகளவில் ஆங்கிலம் இல்லாத திரைப்பட பிரிவில் 4வது இடத்தைப் பெற்றுள்ளது.
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ், சிறுவன் சாய் பிருத்விராஜ் ஆகியோரின் சிறந்த நடிப்பில் வெளிவந்த திரைப்படம் `பத்தா'. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', `சீதக்காதி' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த பாலாஜி தரணீதரம் 3வது முறையாக விஜய் சேதுபதி கூட்டணி வைத்து ஒரு நல்ல மனிதநேயமிக்க சினிமாவை விருந்தாக கொடுத்திருந்தார். இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்திருந்தார்.
இப்படத்தின் கதையை பொறுத்தவரையில், 70களின் பின்னணியில் நடப்பதாக சொல்லப்பட்ட இந்தப் படத்தில் பிறர்மேல் கருணையே இல்லாத ரவுடியாக இருக்கும் விஜய் சேதுபதி, எதிர்பாராத விதமாக பள்ளி கழிவறையில் பூட்டப்படுகிறார். அவரை பூட்டியது யார்? எப்படி அதிலிருந்து மீண்டு வந்தார்? அதன் பிறகு என்ன நடந்தது என்பதுபோல படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை, எமோஷன் ஆகியவற்றை மையமாக கொண்டு மனிதத்தை போதிப்பதாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் எதார்த்தமாக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு போகிறது.
இதில் சபரியாக நடித்திருந்த சிறுவன் சகமனிதன்மேல் காட்டப்படவேண்டிய கருணை, மனிதம் ஆகியவற்றை வஞ்சகம் நிறைந்த நவீன உலகத்தில் வாழும் சமகால மனிதர்களின் மனங்களுக்கு போதித்திவிட்டுப் போகிறார். பிறரிடத்தில் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்க தவறும் இறுக்கமான மனநிலை கூடிவிட்ட இக்காலத்தில், அவர் பரிதவித்து கேட்கும் மன்னிப்பு; படம் பார்க்கும் அத்தனை ரசிகளிடத்தில் புதைந்திருக்கும் பல மன்னிப்புகளை நினைவுபடுத்திவிட்டுச் செல்கிறது.
ஒடிடியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பத்தா!
பத்தா திரைப்படம் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும், வசூல் ரீதியாக பாக்ஸ் ஆஃபிஸில் பெரிய அளவில் செல்லவில்லை என சொல்லப்படுகிறது. திரையரங்கில் பத்தா படத்தைப் பார்த்து பல ரசிகர்களும் கொண்டாடிய நிலையில், ஓடிடியில் வெளியானபிறகு இன்னும் மிகப்பெரிய வரவேற்பை பத்தா பெற்றுவருகிறது.
அதன்படி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் உலகளவில் 12 நாடுகளில் டாப் 10 பட்டியலில் ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது பத்தா திரைப்படம். அதிலும் இந்தியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர் 3 நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது பத்தா. மேலும் உலக அளவில் ஆங்கிலம் இல்லாத திரைப்பட பிரிவில் 4வது இடத்தில் பத்தா இடம்பிடித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

