கூலி படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்... என்னங்க லோகேஷ் இதெல்லாம்? SPOILERS AHEAD
ரஜினிகாந்தின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி நேற்று வெளியானது. ஒரு பக்கம் ரசிகர்கள் கொண்டாடினாலும், இன்னொரு பக்கம் படத்திற்கு கலவையான விமர்சனங்களும் கிடைத்துள்ளன. மேலும், படத்தில் நிறைய குறைகளை சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர், குறிப்பாக லோகேஷின் முந்தைய படங்களை விட ‘கூலி’ மிக பலவீனமான படமாக இருக்கிறது எனவும், படத்தில் லாஜிக் குறைபாடுகள் நிறைய உள்ளது எனவும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இதில், எப்படி மோனிகா பாடல் சம்பந்தமே இல்லாமல் படத்தில் வருகிறது என்பதை கூட மன்னிக்கலாம்; ஆனால், படம் முழுதும் இன்னும் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். அதை எல்லாம் பார்க்கும் முன் ஒரு வார்னிங். COOLIE SPOILERS AHEAD...
கூலியாக விசாகப்பட்டினம் வரும் ரஜினிக்கு நண்பனாகி, தன் தங்கையை திருமணம் செய்து கொடுக்கிறார் சத்யராஜ். அதுவரை ஓக்கே.
ஆனால்,
உண்மையில் சத்யராஜ் யார்? யூடியூபில் Do it yourself வீடியோ பார்த்துவிட்டு ஆர்வமாகும் சிறுவர்கள் போல, திடீரென அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்டுகிறாரே ஏன்?
ஏதோ ஒரு பிரச்சனைக்காக ரஜினியை சந்திக்க மேன்சன் சென்ற சத்யராஜ், ஏன் அவரை சந்திக்காமலே திரும்பினார்?
கதைப்படி ரஜினிக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆனால், அது ரஜினிக்கு தெரியுமா தெரியாதா? என்ற தெளிவு துளியும் இல்லையே ஏன்? மேலும், அந்த மகளை பற்றி ரகசியமாக வைக்க தேவை என்ன?
சத்யராஜ்க்கு ரஜினி மீது என்ன கோபம்? ஏன் அவரை பற்றி தன் மகள்களிடம் மோசமாக கூறி வைத்திருக்கிறார்? போன்ற விஷயங்களில் எந்த தெளிவும் இல்லை.
விசாகப்பட்டின துறைமுகத்தையே கட்டுக்குள் வைத்திருக்கிறார் நாகர்ஜூனா. அவர் செய்யும் சட்டத்துக்கு புறம்பான வேலைகளை தட்டி கேட்க யாரும் வர மாட்டார்கள். அவருடைய சிண்டிகேட் பெரும் பலம் வாய்ந்தது. இப்படியான சக்தி வாய்ந்த நபருக்கு பிணங்களை அப்புறப்படுத்துவது பெரிய வேலையா என்ன? அதற்கு மூட்டை பூச்சியை கொல்லும் நவீன மிஷின் போல ஒரு மின் இருக்கை, அதை இயக்க ஆள் என ஏகத்துக்கும் பில்டப். அந்த மிஷினில் இருக்கும் நாலு லிவரை இயக்க சைன்டிஸ்ட் தான் வரவேண்டும் என்ற லெவலுக்கு சொல்வதெல்லாம்... மெகா போங்கு..
தன் தந்தையை கண் முன்னால் கொலை செய்த நபரை நாகர்ஜூனா மறந்துவிட்டு, மொழி பட எம் எஸ் பாஸ்கர் போல உன்ன எங்கயோ பாத்திருக்கேனே? என்கிறார். இது எதனால்?
சௌபின் சாஹிர் - ரச்சிதா ராமின் திட்டம்தான் என்ன? பணத்தை திருடுவதுதான் நோக்கம் என்றால், அந்த வேலையை பார்க்காமல், ரச்சிதா ஏன் கண்ணா ரவியிடம் நெருங்கிப் பழக வேண்டும்?
ஒரு காட்சியில் ஸ்ருதிஹாசனை கடத்தி வைத்திருப்பார் சௌபின். அவரிடம் இருந்து ஸ்ருதியை காப்பாற்ற, சௌபினின் மனைவி ரச்சிதா ராமை கடத்தி வீடியோ காலில் வந்து மிரட்டுவார் ரஜினி, அந்த வீடியோவை ஸ்ருதியும் பார்ப்பார். இங்கிருந்து தப்பிக்கும் ஸ்ருதி சென்னைக்கு வந்து சேர்வார். அப்போது ரச்சிதா வந்து ஸ்ருதியிடம் நான் ரஜினி அனுப்பிய ஆள் என சொன்னதும் கொஞ்சமும் யோசிக்காமல் அவருடன் செல்வார் ஸ்ருதி. சௌபினின் மனைவிதான் ரச்சிதா எனத் தெரிந்தும் ஸ்ருதி செல்வது ஏன்?
உபேந்திரா கதாப்பாத்திரமும் நார்மல் மனிதர் போலத்தான் இருக்கிறது. அவரை 114வது நம்பர் ரூமில் போட்டு அடைத்து வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? சும்மா கேமியோ ரிவீல்க்காக அடைத்து வைப்பதெல்லாம் அநியாயம்.
என்னை கொலை செய்தால், தாஹா வருவான் என மிரட்டுகிறார் நாகர்ஜூனா. ஆனால், தாஹாவாக வரும் ஆமீர்கான், நடு பாலைவனத்தில் மேஜை போட்டு அதில் கண்ணாடி கோப்பைகளை அடுக்கி அதை சுட்டு விளையாடுகிறார். ஒரு பீடியை ரஜினி - உபேந்திராவிடம் கட் -ஆஃப் வாங்கி அடித்துவிட்டு பயங்கர Chill செய்கிறார். இதான் உங்க வில்லத்தனமா ஆமீர்ஜீ?
இறுதியாக இந்தப் படத்தின் பிரதானமான சத்யராஜ் கொலை. சௌபின் எதற்காக சத்யராஜை கொள்கிறார்? படத்தின் லாஜிக் படி சௌபின், நாகர்ஜூனா குழுவில் 8 ஆண்டுகளாக இருக்கும் ஒரு அண்டர்கவர் போலீஸ். சத்யராஜ் எதிர்பாரா விதமாக நாகர்ஜூனாவிடம் சிக்கிக் கொண்டு, எலெக்ட்ரிக் சுடுகாட்டில் பணியாற்றும் லேபர். சௌபின் பற்றிய உண்மை சத்யராஜூக்கு தெரிந்தாலும், அவர் அதை ஏன் நாகர்ஜூனாவிடம் சொல்லப் போகிறார். அவரும் சௌபின் போல நாகர்ஜூனாவிடம் சிக்கிக் கொண்ட ஒரு சூழ்நிலைக் கைதிதானே?
இப்படி படத்தில் ஏகப்பட்ட லாஜிக் கேள்விகள் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படுகிறது. இவை தாண்டி உங்களுக்கு படத்தில் தோன்றிய லாஜிக் மிஸ்டேக் என்ன என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.