தீபாவளிக்கு பரிசு வெயிடிங்.. சுதந்திர தின உரையில் பிரதமர் சொன்ன சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?
வரும் தீபாவளி நாளில் மக்களுக்கு பரிசாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து105 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது ஜிஎஸ்டி வரி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பல்வேறு அன்றாட பொருட்களுக்கு வரிவிகிதங்கள் குறைக்கப்படும் என்றும் கூறினார்.
இதனால் அன்றாட பயன்பாட்டு பொருட்கள் விலை குறைந்து சாமானிய மக்களுடன் சிறுகுறு தொழில்துறையினரும் பலனடைவர் என்று பிரதமர் தெரிவித்தார். நாட்டில் புதிதாக மூன்றரை கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தை அறிவித்த பிரதமர் இதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றார். இத்திட்டத்தில் தனியார் துறையில் முதல் முறையாக பணி வாய்ப்பு பெறும் இளைஞர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
மேலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி கூறினார். விவசாயிகள் நலனில் தங்கள் அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் அவர்களை நோக்கி வரும் பாதிப்புகளை சுவர் போல் நின்று தடுப்பேன் என்றும் பிரதமர் கூறினார்.
அமெரிக்க விளைபொருட்களுக்கு இந்திய சந்தையை திறக்க ட்ரம்ப் அரசு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் பிரதமரின் இப்பேச்சு வெளியாகியுள்ளது. உடல் பருமன் நாட்டுக்கு எதிரான பெரிய சவாலாக மாறியிருப்பதாக பிரதமர் தெரிவித்தார். இப்பிரச்சினையை முறியடிக்க மக்கள் சமையல் எண்ணெய் பயன்பாட்டை 10% குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.