“தலைவன் எறங்கி சரிதம் எழுதவே” - சரிதம் எழுதும் கூலி... வசூலில் உலகசாதனை
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, புதுச்சேரியில் வெளியான கூலி திரைப்படத்தை காண ரசிகர்கள் காலை முதலே ஆர்வத்துடன் குவிந்தனர். திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் ஆடி, பாடி கொண்டாடிய ரசிகர்கள், உற்சாகத்துடன் படத்தை கண்டுகளித்தனர்.
சட்டவிரோத கடத்தல் உலகத்தை மையமாக கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. கடத்தல் கும்பலுடன் ஏற்படும் மோதல், அதில் நடக்கும் அடுத்தடுத்த திருப்பங்கள், விருவிருப்பான காட்சிகள், எதிர்பாராத கிளைமாக்சுடன் கூலி திரைப்படம் நிறைவு பெறுகிறது.
படத்தில் ரஜினிகாந்தை தாண்டி நாகார்ஜூனா, சத்யராஜ், சோபின் சாஹிர், அமீர்கான், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் என படம் முழுவதும் ஏராளமான திரைப்பட்டாளங்கள் வலம் வருகின்றனர். ஒற்றை பாடலுக்கு மட்டும் வந்தாலும் நடிகை பூஜா ஹெக்டே, ரசிகர்களை துள்ளிக் குதிக்க வைத்துள்ளார். அனிருத் இசை, கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, பிரமிக்கவைக்கும் திரைக்கதை என கூலி படத்திற்கு அனைத்து அம்சங்களும் வலுச்சேர்த்துள்ளன.
ஒவ்வொரு ரசிகர்களும் தங்களதுபார்வையில் விமர்சனங்களைமுன்வைத்தாலும், ரஜினிகாந்த் என்ற ஒற்றை மனிதருக்காக கூலி படத்தைபலரும் கொண்டாடி வருகின்றனர். அந்தக் கொண்டாட்டத்தின் விளைவு படத்தின் வசூலில் எதிரொலித்துள்ளது.
Sacnilk இணைய தள தரவுகளின்படி, கூலி திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.65 கோடி வசூலைக் குவித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இத்திரைப்படம் முதல் நாளில் ரூ.28 முதல் 30 கோடி வசூலும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.16-18 கோடி வசூலும், கர்நாடகாவில் ரூ.14-15 கோடி, கேரளாவில் ரூ.10 கோடி, மற்றும் வட இந்திய மாநிலங்களில் ரூ.7-8 கோடி என இந்தியாவில் மொத்தம் ரூ.64-65 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் 3 மில்லியன் டாலர்கள் வசூலித்து, முதல் நாள் வெளிநாட்டு வசூலில் ‘லியோ’ படத்தின் 8.15 மில்லியன் டாலர் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல் நாளில் லியோ திரைப்படம் ரூ.148 கோடி வசூலித்திருந்த நிலையில், கூலி திரைப்படத்தின் முதல் நாள் வசூலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கூலி திரைப்படம் உலகம் முழுவதிலும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. Highest ever Day 1 worldwide gross for a Tamil film எனக் குறிப்பிட்டு ரூ.151 கோடி வசூலை தெரிவிக்கும் வகையில் ஸ்பெஷல் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.