“அப்பாக்காக உங்க பிறந்தநாளயே மாத்திட்டிங்க” இசைஞானியின் சிம்பொனி அரங்கேற்றத்திற்கு முதல்வர் வாழ்த்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் சிம்பொனி இளையராஜா நிகழ்த்த இருக்கும் சிம்பொனி அரங்கேற்றத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
வரும் மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள Eventim Apollo theatreல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியை அரங்கேற்றம் செய்ய உள்ளார். இளையராஜாவின் இந்த சிம்பொனி அரங்கேற்றத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்தியுள்ளார். ஒதுதொடர்பாக எக்ஸ் தளத்தில், ‘இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது’ எனக் குறிப்பிட்டுள்ள அவர், சந்திப்புக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.
அதில், “ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.
உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.
சந்திப்பின்போது பதிவு செய்யப்பட்ட காணொளியையும் முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். அதில் இளையராஜா, “அய்யாதான் இசைஞானி என்று பெயர் வைத்தார். அதை மாற்றவே முடியவில்லை” என்கிறார். அதற்கு பதில் தெரிவித்த முதலமைச்சர், “எத்தனை பட்டங்கள் வந்தாலும் அதுதான் நிற்கிறது.. இசைஞானியாக எல்லோருடைய இல்லங்களிலும் உள்ளங்களிலும் நீங்கள் குடியிருக்கிறீகள்..” எனத் தெரிவித்தார்.