"திருப்பதி | திருமலை வான்வழியில் விமானம் பறக்கத் தடைசெய்ய வேண்டும்" - கோரிக்கையின் பின்னணி இதுதான்!
செய்தியாளர்: நரேஷ்
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் மேல் உள்ள வான்வழியாக விமானம் பறக்கத் தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கக் கோரி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம்மோகன் நாயுடுவுக்கு அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ஏழுமலையான் கோயில் ஆகம சாஸ்திரத்தின்படி, கோயிலின் புனிதத்தன்மை, பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் உணர்வுகளை மனதில் கொண்டு, திருமலை வான்வழியை விமானம் பறக்கத் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். திருமலை மலைகளில் தாழ்வாகப் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற வான்வழி நடவடிக்கைகளால் ஏழுமலையான் கோயிலைச் சுற்றியுள்ள புனிதமான சூழலுக்கு அச்சுறுத்தலாக தொந்தரவு செய்யப்படுவதாக உள்ளது.
எனவே திருமலை வான்வழியை விமானம் பறக்கத் தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிப்பது திருமலையின் புனிதத்தன்மை, கலாச்சார மற்றும் ஆன்மிக பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான படியாகும். இந்த விவகாரத்தில் உடனடியாக பதிலளித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அமைச்சரை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.